🗳️ பீகார் தேர்தல் முடிவுகள்: மாபெரும் வெற்றிக்குப் பின்னால் உள்ள நிஜமும், காங்கிரஸின் பண்ணையார் மனப்பான்மையும்!
பீகார் மாநிலத் தேர்தல் முடிவுகள், ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு (NDA) கிடைத்த வெற்றியின் மூலம், அரசியல் பார்வையாளர்களின் கணிப்புகளை முழுவதுமாகப் புரட்டிப் போட்டிருக்கிறது. மோடிஜியும் அமித் ஷாஜியும் கூட முதலில் நம்பாமல், கிள்ளிப் பார்த்துக்கொண்ட பின்னரே இந்த வெற்றி கனவல்ல நிஜம் என்பதை உறுதி செய்திருப்பார்கள் என்பதே நம் கணிப்பு.
👀 வளர்ச்சி ஒரு மாயையா?
இந்த மாபெரும் வெற்றிக்கு உண்மையான காரணம் என்ன? முதல்வர் நிதிஷ் குமார், பீகாரை மோடிஜியின் டிஜிட்டல் இந்தியாவோடு இரண்டறக் கலந்து, வளர்ச்சிப் பாதையின் எல்லைக்கே அழைத்துச் சென்றுவிட்டாரா? இன்றளவும் மாநிலத் தலைநகர் பாட்னாவில் கூட சைக்கிள் ரிக்ஷாக்களே அதிகம் பவனி வருகின்றன. வற்றாத கங்கையும், வண்டல் மண் வளமும் இருந்தும், பீகாரில் வறுமை ஒழிக்கப்பட்டுவிட்டதா? வறுமை ஒழிக்கப்பட்டிருந்தால், அங்கிருக்கும் கூலித் தொழிலாளர்கள் ஏன் தமிழ்நாடு உள்ளிட்ட பிற மாநிலங்களுக்கு வேலை தேடிச் செல்ல வேண்டும்?

உண்மை இதுதான்: நிதிஷ் குமார் அரசுக்கு எதிராகப் பீகாரில் ஒரு கடுமையான மனநிலை நிலவவில்லை என்பதை முழுமையாக மறுக்க முடியாது.
💰 பத்தாயிரம் வாலா பட்டாசுத் திட்டம்: வாக்குத் திருட்டா?
இந்த நிலையை உணர்ந்ததால்தான், நிதிஷ் குமார் தேர்தலுக்குச் சற்று முன்னர், பத்தாயிரம் வாலா பட்டாசு போல, பத்தாயிரம் ரூபாய் நிதியை கையில் எடுத்தார். பெண்கள் தொழில் தொடங்குவதற்கு வசதியாக என்று சொல்லி, முதல் கட்டத் தொகையாகப் பத்தாயிரம் ரூபாயைப் பெண்களின் வங்கிக் கணக்குகளில் செலுத்தினார். இந்தத் திட்டத்தை மாண்புமிகு பிரதமர் செப்டெம்பர் 25-ம் தேதியன்று காணொளிக் காட்சி மூலம் தொடங்கி வைத்தார். அக்டோபர் ஆறாந்தேதிதான் தேர்தல் அறிவிப்பு வெளியாகிறது. இந்தத் தேர்தலில் பெண்கள் பெருமளவில் வாக்களிக்க இந்தத் திட்டமும் ஒரு முக்கியக் காரணம் என்பதை முழுவதுமாக மறுக்க முடியாது.
தேர்தல் அறிவிப்புக்குச் சற்று முன் இத்தகைய திட்டங்களைச் செயல்படுத்துவது முறையா? இது தவறில்லையா? என்பதற்கு சம்பந்தப்பட்ட யாரிடமிருந்தும் பதில் இல்லை. இதுகூட ஒருவகையில், தேர்தல் விதிகளை வளைத்துச் செய்யப்படும் வாக்குத் திருட்டுதான் என்பதை மறுக்க முடியாது.
🏊♂️ பண்ணையார் மனப்பான்மையின் விலையும், ராகுலின் அணுகுமுறையும்
ஆனால், பீகார் தேர்தலில் என்.டி.ஏ. இப்படியோர் வெற்றியைப் பெற்றதற்கு, இந்த ‘பத்தாயிரம் ரூபாய் திட்டம்’ மட்டுமே காரணம் என்று சொல்வது நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதுதான்.
பிரசாரத்திற்கு மோடி சென்ற அளவுக்கு ராகுல் காந்தி சென்றாரா? இல்லை என்பது அனைவருக்கும் தெரியும். அப்படி அவர் செல்லும்போதும், வெறும் ஆற்றிலும் குளத்திலும் விழுந்து நீச்சலடிப்பதால் பயனில்லை. அவர், கூட்டணிக் கட்சியினரின் உள்ளத்தில் குதித்து நீந்த வேண்டும். அவர் ஏன் அதைச் செய்யவில்லை? இன்னமும் காங்கிரசாரிடமிருந்து பண்ணையார் மனப்பான்மை போகவில்லை என்பதே பிரதான காரணம்.

ராகுல் காந்தி மட்டும் பிற கட்சித் தலைவர்களிடம் நட்பாக இருந்தால் போதாது. அவரது கட்சிக்காரர்களும் கூட்டணிக் கட்சியினருடன் நட்பாகவும் உண்மையாகவும் இருக்க வேண்டும். அதுதான் கள நிலவரமாக இல்லை.
உதாரணத்திற்கு, தமிழ்நாட்டையே எடுத்துக் கொள்ளுங்கள்: முதலமைச்சர் ஸ்டாலினோடு ராகுல் காந்தி கொண்டுள்ள நட்போடு, இங்குள்ள காங்கிரசார் திமுகவினருடன் இருக்கிறார்களா? இல்லை. தோற்போம் என்று தெரிந்தே அதிக சீட் கேட்பார்கள். ஆட்சியில் பங்கு, புண்ணாக்கு, புடலங்காய் என்று பேசி, களத்தில் உழைக்கும் தி.மு.க. தொண்டர்களின் எரிச்சலுக்கு ஆளாவார்கள். அப்புறம் எப்படி வெற்றி பெறுவார்கள்? கிராமங்களில் சொல்வார்கள், “மேய்கிற மாட்டை நக்குகிற மாடு கெடுக்குமாம்” என்று. அதுபோல்தான் இவர்களின் பண்ணையார்த்தனம் கூட்டணிக் கட்சியினருக்கு எரிச்சலூட்டி விடுகிறது. இவற்றோடு, பரம்பரை வியாதிபோல் தொடரும் கோஷ்டிப் பூசல். இதுதான் பீகாரிலும் நடந்து, கட்சியைக் கூட்டணிக்குள் அதல பாதாளத்தில் தள்ளிவிட்டது.
🐀 எலிகளையும் பெருச்சாளிகளையும் அகற்றும் காலம்!
காங்கிரஸ் கட்சி என்னும் குதிரை, குப்புறத் தள்ளிவிட்டது உண்மைதான். ஆனால் இன்னும் குழிபறிக்கவில்லை. அது நடப்பதற்குள், ராகுல் காந்தி ஒன்றை மட்டும் உடனடியாக உணர வேண்டும். காங்கிரஸ் என்பது விடுதலை வீரர்களும் தேசபக்தர்களும் குடியிருந்த ஒரு அழகிய கட்டடம்தான். ஆனால் இன்று அதுவல்ல.
இன்று அதில் எலிகளும் பெருச்சாளிகளும் குடிபுகுந்து விட்டன. அதனால்தான், தேர்தலின்போது மற்ற கூட்டணிக் கட்சியினர் காங்கிரசுக்கு உண்மையாக உழைப்பதுபோல், மற்ற கட்சியினருக்குக் காங்கிரசார் உண்மையாக உழைப்பதில்லை. இந்த அடிப்படை உண்மையை ராகுல் காந்தி உணர்ந்து, கட்சியைச் சுத்திகரிக்கும் நடவடிக்கையை எடுக்காத வரை, காங்கிரசுக்கு விடிவு காலமே வரப்போவதில்லை.


