வங்கத் தேசத்தில் ரசாயனக் கிடங்கில் தீ: 70 பேர் பலி!

வங்கத் தேசத்தில் ரசாயனக் கிடங்கில் தீ: 70 பேர் பலி!

வங்கதேச தலை நகர் டாக்காவின் பழைய தாக்காவில் உள்ள சவுக்பஜார் பகுதியில்  இருந்த ரசாயன கிடங்கு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 70 பேர் பலியாகினர். 50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

வங்கதேச தலைநகர் டாக்காவின் பழமையான இடங்களில் ஒன்று சாக்பஜார். இந்த பகுதியில் உள்ள மசூதிக்கு பின் உள்ள ஹாஸி வாஹத் மேன்சன் என்னும் அடுக்குமாடி கட்டிடம் ஒன்று உள்ளது. இந்த கட்டிடத்தில் நேற்று இரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த அடுக்குமாடி கட்டிடத்தின் ஒரு பகுதி முழுவதும் ரசாயனப் பொருட்களை சேமித்து வைக்கும் கிடங்காக பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. இந்த குடோனில் பிடித்த தீ, பின்னர் மளமளவென அருகிலுள்ள இடங்களுக்கும் பரவியது.

தகவலறிந்த தீயணைப்பு படையினர் சுமார் 200 பேர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த தீ விபத்து சாதாரணமாக மற்ற இடங்களில் நடைபெறும் விபத்து போன்றது இல்லை. எளிதில் தீப்பற்றக்கூடிய ரசாயனப்பொருட்கள் இருந்ததால், அவை வேகமாக பரவியது. எனவே, தீயை அணைப்பதற்கு நீண்ட நேரம் ஆனது. தீ முழுவதும் அணைக்கப்பட்டதும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர்.

இந்த தீ விபத்தில் சிக்கி இதுவரை 70 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள்  மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். தொடர்ந்து மீட்பு பணி நடைபெற்று வரும் நிலையில், உயிரிழப்பு மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

ரசாயன குடோனில் உள்ள கேஸ் சிலிண்டரில் தீ பற்றி, இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என முதற்கட்ட தகவல்கள் கூறுகின்றன.

error: Content is protected !!