இஸ்லாம் மதத்தை இழிவுப்படுத்தியதால் மரண தண்டனை விதிக்கப் பட்ட கிறிஸ்துவ பெண் விடுதலை!

இஸ்லாம் மதத்தை இழிவுப்படுத்தியதால் மரண தண்டனை விதிக்கப் பட்ட கிறிஸ்துவ பெண் விடுதலை!

இஸ்லாம் மதத்தை இழிவுப்படுத்திய வழக்கில் மரணதண்டனை விதிக்கப்பட்ட கிறிஸ்துவ பெண் ஆசியா பீபியை விடுதலை செய்து பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. தீர்ப்பை எதிர்த்து பாகிஸ்தானின் பல இடங்களில் போராட்டம் நடைபெற்றது.

பாகிஸ்தானில் இஸ்லாம் மதத்தை இழிவுப்படுத்துவோருக்கு மரண தண்டனை விதிக்கும் தெய்வ நிந்தனை சட்டம் கடந்த 1980ம் ஆண்டில் அமல்படுத்தப்பட்டது.  பாகிஸ்தானை ஆட்சி செய்த முன்னாள் ராணுவ சர்வாதிகாரியான ஜியால் ஹக் இந்த தெய்வ நிந்தனை சட்டத்தை அமல் படுத்தினார். பாகிஸ்தானில் இந்த சட்டத்தை பலர் தவறாக பயன்படுத்தப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன.

இந்நிலையில் பாகிஸ்தானை சேர்ந்த ஆசியா பீபி என்ற கிறிஸ்துவ பெண் தன் அண்டை வீட்டாருடன் ஏற்பட்ட தகராறின் போது இஸ்லாம் மதத்தை இழிவுப்படுத்தி பேசியதாக குற்றம் சாட்டப்பட்டது. அதை தொடர்ந்து பாகிஸ்தானின் தெய்வ நிந்தனை சட்டத்தின் கீழ் ஆசியா பீபி கைது செய்யப்பட்டு தனிமை சிறையில் அடைக்கப்பட்டார்.  ஆசியா பீபிக்கு கடந்த 2010ம் ஆண்டு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

தனக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை எதிர்த்து லாகூர் உயர்நீதிமன்றத்தில அசியா பீபி மேல் முறையீடு செய்தார். ஆனால் லாகூர் உயர்நீதிமன்றம் அவரது மரண தண்டனையை உறுதி செய்தது.  அதை தொடர்ந்து அசியா பீபி 2015ம் ஆண்டு உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். ஆசியா பீபிக்கு அளிக்கப்பட்ட மரண தண்டனைக்கு மனித உரிமை ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆசியா பீபி வழக்கு பாகிஸ்தானில் பெரும் சர்ச்சையையும் விவாதத்தையும் ஏற்படுத்தியது.

அவருக்கு ஆதரவு அளித்து பேசிய பாகிஸ்தான் பஞ்சாப் மாகாணத்தின் முன்னாள் ஆளுநர் சல்மான் தசீர் 2011ம் ஆண்டு கொல்லப்பட்டார். இந்த சம்பவத்தால் ஆசிய பீபியின் வழக்கு மேலும் முக்கியத்துவம் பெற்றது. இந்நிலையில் உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வந்த ஆசியா பீபி மேல்முறையீடு விசாரணையில் இன்று தீர்ப்பளிக்கப்பட்டது. அவரது வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சாகிப் நிசார் தலைமையிலான 3 பேர் கொண்ட அமர்வு, ஆசியா பீபிக்கு அளிக்கப்பட்ட மரண தண்டனையை ரத்து செய்து தீர்ப்பளித்தது.

ஆசியா பீபி வழக்கில் மூன்று வாரம் முன்பாகவே தீர்ப்பு முடிவு செய்யப்பட்டுவிட்டது. ஆனால் ஆசியா பீபி விடுதலை செய்யப்படுவதற்கு பாகிஸ்தான் பழமைவாத அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்ததால் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. இன்று ஆசியா பீபி வழக்கில் தீர்ப்பு வழங்கப் படுவதை தொடர்ந்து இஸ்லாமாபாத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. ஆசியா பீபி விடுதலை செய்யப்பட்டதற்கு சமூக ஊடகங்களில் பலத்த வரவேற்பு தெரிவிக்கப்பட்டது.

ஆசியா பீபி விடுதலை செய்யப்பட்ட போதும் பயங்கரவாதிகளால் அவரது உயிருக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் தொடர்ந்து நீடிக்கிறது. இதனிடையே இத்தீர்ப்பை எதிர்த்து பாகிஸ்தானின் பல இடங்களில் இன்று பழமைவாத அமைப்புகள், இஸ்லாமிய அரசியல் கட்சிகள் போராட்டம் நடத்தின. தலைநகர் இஸ்லாமாபாத்தை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலையில் பலர் சாலை மறியலில் ஈடுபட்டதாக இஸ்லாமாபாத் காவல்துறையினர் தெரிவித்தனர்.பாகிஸ்தானில் அதிக மக்கள் தொகை கொண்ட பஞ்சாப் மாகாணத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. நவம்பர் 10ம் தேதி வரை அனைத்து பொது நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டன.

லாகூர் நகரில் தஹ்ரீக் – இ -லபைக் என்ற இஸ்லாமிய அரசியல் கட்சி தலைமையில் போராட்டம் நடைபெற்றது.

இந்த தீர்ப்பு வெளிநாட்டு சக்திகளின் ஆதிக்கத்தால் அளிக்கப்பட்ட தீர்ப்பு என்று ஜமையத் உலிமா-இ- இஸ்லாம்- ஃபாசல் என்ற அமைப்பின் தலைவர் ஃபஸ்லுர் ரகுமான் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

error: Content is protected !!