உலக தேங்காய் தினம்

உலக தேங்காய் தினம்

ன்று, செப்டம்பர் 2, உலகத் தேங்காய் நாள்! ஆம், நம்ம ஊர் தென்னையின் மகிமையை உலகமே கொண்டாடும் சிறப்பான நாள் இது.“பிள்ளையை பெற்றால் கண்ணீரு.. தென்னையை நட்டால் இளநீரு” என்று கிராமப் பகுதிகளில் பழமொழி சொல்வர். தேங்காய், இளநீர், தேங்காய் பால், தென்னை மடல் என அதன் பல்வேறு உப பொருள்களுக்கும் சத்தான சந்தை வாய்ப்பு இருப்பதுதான் அதற்கு காரணம். இது வெறும் ஒரு காய் அல்ல, ஒரு “மேஜிக் பாக்ஸ்”! உணவு, மருத்துவம், அழகுசாதனம், பொருளாதாரம், பண்பாடு என எல்லாவற்றையும் உள்ளடக்கிய ஒரு அற்புதம். தென்னையின் அற்புதங்களை விரிவாகப் பார்ப்போம்.

தேங்காய்: ஒரு முழுமையான கொடை

தென்னை மரம், “கற்பக விருட்சம்” என்று அழைக்கப்படுகிறது. இதன் ஒவ்வொரு பாகமும் நமக்குப் பல வழிகளில் பயன்படுகிறது. அதன் வழி வந்து  பூஜை வழிபாடுகள் முதல் சுபகாரியங்கள் உள்ளிட்ட அனைத்திலும் முதன்மை வகிப்பது தேங்காய்தான். பூமியில் விழும் மழை நீரை உறிஞ்சி எடுத்து, அதனுடன் தன் தனித்துவமான சுவையை கொஞ்சம் கலந்து, உள்ளே தண்ணீர் அதனுடன் வழுக்கை என, தன்னை சமைத்து இளநீர் என்ற வரபிரசாதத்தை தரும் தென்னை இயற்கை கொடுத்த வரம்.

  • தேங்காய் தண்ணீர்: கோடை காலத்தில் இதைவிடச் சிறந்த எனர்ஜி ட்ரிங்க் இருக்க முடியுமா? இயற்கையான எலக்ட்ரோலைட்கள் நிறைந்த இது, உடலுக்குக் குளிர்ச்சி தரும். கர்ப்பிணிப் பெண்களுக்குக்கூட மருத்துவர்கள் இதைத்தான் பரிந்துரைக்கிறார்கள்.
  • தேங்காய் எண்ணெய்: கூந்தல் வளர்ச்சிக்கு, சருமத்திற்கு மாய்ஸ்சரைசராக, சமையலுக்கு எனப் பல வழிகளில் இது உதவுகிறது. தேங்காய் எண்ணெய்யில் இருக்கும் லாரிக் அமிலம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு, செரிமானத்திற்கும் துணை புரிகிறது.
  • தேங்காய் பால்: இனிப்பு வகைகள், கறிகள் எனப் பல உணவுகளுக்கு இது ஒரு தனிச்சுவையைக் கொடுக்கிறது. தேங்காய் இல்லாத பிரியாணி, சாம்பார், பாயசம் என நம் சமையல் முழுமையடையுமா?
  • பொருளாதார முக்கியத்துவம்: தென்னை ஓலை, மரம், ஓடு என இவை கைவினைப் பொருட்கள், வீடுகட்டுதல், கூடை பின்னுதல் போன்றவற்றில் பயன்படுகின்றன. இதன் பொருளாதார முக்கியத்துவத்தை உலகுக்கு உணர்த்தவே, ஆசிய பசிபிக் நாடுகள் 2009 முதல் இந்த நாளைக் கொண்டாடி வருகின்றன.

நமது பண்பாடு மற்றும் ஆன்மிகத்தில் தென்னை

நம் பண்பாட்டில் தென்னை மரத்திற்கு ஒரு சிறப்பான இடம் உண்டு. திருமணம், பூஜை, விசேஷங்கள் என எந்தச் சுபநிகழ்ச்சிகளிலும் தேங்காய் இல்லாமல் எதுவுமே நடக்காது. முன்னரே சொன்னது போல் பிரார்த்தனைகள் நிறைவேறக் கோவிலுக்குச் சென்று தேங்காய் உடைத்து அர்ச்சனை செய்து இறைவனை வழிபடுவது வழக்கம். சிலர் விநாயகர் ஆலயத்தில் சூறைத்தேங்காய் உடைத்து வழிபடுவதும் வழக்கம். விநாயகர் ஒருமுறை தன் தந்தையிடம் உன் தலையை எனக்குப் பலி கொடு என்று கேட்டாராம், இதன் காரணமாகவே தனது அம்சமாக மூன்று கண்களைக் கொண்ட தேங்காயைச் சிவன் படைத்தார் என்கிறது புராணக்கதை. இதன் காரணமாகவே வேண்டுதல் விரைவில் நிறைவேறப் பக்தர்கள் விநாயகருக்குச் சிதறு தேங்காய் உடைக்கின்றனர்.

ஆன்மிகத்தில் தேங்காயின் மூன்று கண்கள் நம் அகங்காரம், கன்மம், மாயை ஆகிய மூன்று மலங்களைக் குறிப்பதாகச் சொல்லப்படுகிறது. தேங்காயை உடைக்கும்போது இந்த மலங்கள் நீங்கி, உள்ளிருக்கும் வெண்மை நிறம் போல நம் மனம் தூய்மையாவதாக ஒரு ஐதீகம் உண்டு.

மேலும் தேங்காய் என்பது மும்மலத்தைக் குறிக்கிறது. தேங்காய் நீர்-உயிர். தேங்காயின் மட்டை, நார், ஓட்டுப்பகுதிகள் என்ற மூன்றும் மும்மலங்கள் ஆகும். இவை அடிப்படியே களையப்பட்டவுடன், இறுதியில் அகங்கார ஓடும் நொறுங்க, உடனே வெண்மைத் தூய்மை பிரகாசிக்கிறது என்று பொருள் கொள்ள வேண்டும். தேங்காய்,இதயத்திற்கு ஒப்பாக சொல்லப்படுகிறது. மூன்றாம் கண்ணானது ஞானக் கண் என்பதைக்குறிக்கும். வெண்மை,சத்துவகுணத்தைக் குறிக்கிறது. சத்துவ குணத்துடன் சஞ்சலமில்லாமல், நமது ஞானக்கண்ணால் இறைவனைத் தரிசிக்கும்போது, அந்த சமயத்தில் தோன்றும் பக்தி உணர்வுகளை இதயம் உணர்கிறது என்பதுதான் தேங்காய் நமக்கு உணர்த்தும் தத்துவம்.

யாகங்களில் மிகவும் முக்கியமாகப் பயன்படுத்தப்படும் பொருட்களில் தேங்காய் முதன்மையானது. பூர்ணாஹுதி என்று சொல்லப்படும் யாக நிறைவின் போது தேங்காயைப் பயன்படுத்திச் செய்யப்படும் பூஜையானது நிறைவுபெறுகிறது. வேள்விகள் யாகங்கள் முதலியவற்றில் பழங்கள், தானியங்கள், உணவுப் பொருள்கள், ஆடைகள் முதலிய பல பொருள்கள் யாகத்தில் சமர்ப்பிக்கப்படுகின்றன. இறுதியாக யாக முடிவில், ஒரு பட்டுத்துணியில் கொப்பரைத் தேங்காயைக் கட்டி, அக்னியில் சமர்ப்பிக்கின்றனர். இந்த பூர்ணாஹுதியின்ன் போது இளநீரோ, தேங்காயோ பயன்படுத்தப்படுவதில்லை. கொப்பரைத் தேங்காயே பயன்படுத்தப்படுகிறது. கொப்பரைத்தேங்காயின் பற்றற்ற நிலையின் காரணமாக “பூரண ஆகுதி” ஆகிற முழுத்தகுதியைப் பெறுகிறது என்பது ஐதீகம்.

சில சுவாரஸ்யத் தகவல்கள்

  • பெயர்க் காரணம்: தேங்காய்க்கு ‘கோகோநட்’ என்ற பெயரை வாஸ்கோ ட காமா தான் சூட்டினாராம். ஸ்பானிஷ் மொழியில் ‘கோகோ’ என்றால் ‘மூடிய முகம்’ என்று அர்த்தம். தேங்காயின் மூன்று கண்களும் ஒரு மூடிய முகம்போல் இருப்பதால் அந்தப் பெயர் வந்ததாம்.
  • யாகமும் தேங்காயும்: யாகங்கள் முடிந்ததும் செய்யப்படும் பூர்ணாஹுதி பூஜைக்குக் கொப்பரைத் தேங்காய் பயன்படுத்தப்படுகிறது. இந்த உலகப்பற்றுகள் எதுவும் இல்லாததால் கொப்பரைத் தேங்காய் பூர்ணாஹுதிக்கு முழுத் தகுதியைப் பெறுகிறது என்று ஒரு நம்பிக்கை உள்ளது.
  • கனவும் தேங்காயும்: கனவில் தேங்காய் வருவது நல்ல சகுனமாகப் பார்க்கப்படுகிறது. கொத்துக் கொத்தாகத் தேங்காய்கள் பார்ப்பது, மரத்தில் தேங்காய்கள் இருப்பது அல்லது உடைந்த தேங்காயைப் பார்ப்பது ஆகியவை வாழ்க்கையில் நல்ல விஷயங்கள் நடக்கப் போகின்றன என்பதற்கான அறிகுறியாகச் சொல்லப்படுகிறது.

இந்த உலகத் தேங்காய் நாளில், தென்னை மரத்தை அதன் முழுப் பெருமைகளுடன் கொண்டாடுவோம்! அதன் பயன்களைப் பரப்புவோம். நீங்களும் வீட்டில் தேங்காய் சேர்த்த சமையலை முயற்சி செய்து, அதன் அற்புதங்களை அனுபவியுங்கள்.

நிலவளம் ரெங்கராஜன்

Related Posts

error: Content is protected !!