இலவச உணவு தானியங்களில் 13 சதவீதம் மட்டுமே விநியோகம்!

இலவச உணவு தானியங்களில் 13 சதவீதம் மட்டுமே விநியோகம்!

கொரோனாவுக்கு பயந்து போடப்பட்ட ஊரடங்கால புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்காக ஒதுக்கப்பட்ட இலவச உணவு தானியங்களில் 13 சதவீதம் மட்டுமே விநியோகம் செய்யப் பட்டுள்ளதாக அரசு புள்ளிவிவரங்கள் தெரிவித்துள்ளன.

நாடெங்கும் பரவி வரும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் பல மாநிலங்களில் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்கு படையெடுத்தனர். அவர்களுக்கு உதவும் நோக்கில், உணவு தானிய கிடங்குகளில் இருந்து தானியங்கள் மற்றும் பருப்பு வகைகளை நாடு முழுவதும் உள்ள 8 கோடி புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு 15 நாட்களுக்குள் வினியோகம் செய்யவேண்டும் என்று அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு உத்தரவிட்டது. மேலும், மத்திய அரசு அல்லது மாநில அரசின் ரேஷன் அட்டை இல்லாதவர்களுக்கும் உணவு தானியங்கள் வழங்க வேண்டும் என வலியுறுத்தியது.

இத்திட்டத்தின் மூலம் மஹாராஷ்டிராவில் 70 லட்சம் பேர், கர்நாடகாவில் 40.19 லட்சம், தமிழகத்தில் 35.73 லட்சம் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் பயன் அடைவார்கள் என கூறப்பட்டது.

ஆனால் இதற்காக ஒதுக்கப்பட்ட 8 லட்சம் மெட்ரிக் டன் இலவச உணவு தானியங்களில் மே மற்றும் ஜூன் மாதங்களில் வெறும் 13 சதவீதம் மட்டுமே புலம் பெயர்ந்த தொழிலாளர்களை அடைந்துள்ளது என்று அரசு வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகத்தின் சமீபத்திய தகவல்களின்படி, ரேஷன் அட்டை இல்லாத சுமார் 8 கோடி புலம்பெயர்ந்த தொழிலாளர்களில் மே மாதம் 1.21 கோடி பயனாளிகளும், ஜூன் மாதத்தில் 92.44 லட்சம் பயனிகளும் என மொத்தமே 2.13 கோடி பேர் மட்டுமே உணவு தானியங்களை பெற்றுள்ளனர்.

அமைச்சகத்தின் தரவுகளின்படி, அனைத்து மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களுக்கும் மே மற்றும் ஜூன் மாதங்களுக்கு 6.38 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியங்கள் ஒதுக்கப்பட்டன. ஆனால் ஜூன் 30ம் தேதி வரை 1.07 லட்சம் மெட்ரிக் டன் இலவச உணவு தானியங்களை மட்டுமே அதாவது 13 சதவீத பயனாளிகளுக்கு மட்டுமே விநியோகித்துள்ளனர்.

தமிழகம், ஆந்திரா, கோவா, குஜராத், ஜார்க்கண்ட், லடாக், மஹாராஷ்டிரா, மேகாலயா, ஒடிசா, சிக்கிம், தெலுங்கானா, திரிபுரா ஆகிய 11 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசம் ஆகியவை அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட தானியங்களின் அளவை விட அதிகளவில் பெற்றிருந்தாலும் அதில் 1 சதவீதம் கூட பயனாளிகளுக்கு விநியோகிக்கவில்லை என தெரியவந்துள்ளது.

error: Content is protected !!