ஹிந்து என்றால் என்ன? – எஸ். குருமூர்த்தி விளக்கம்

ஹிந்து என்றால் என்ன? – எஸ். குருமூர்த்தி விளக்கம்

சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள ஜெயின் கல்லூரியில் நாளை (ஆகஸ்ட் 2) 8ஆவது ஹிந்து ஆன்மிக சேவைக் கண்காட்சி தொடங்குகிறது. 350க்கும் மேற்பட்ட கலாசார, ஆன்மிக அமைப்புகள் இந்தக் கண்காட்சியில் பங்குபெற இருக்கின்றன. நூற்றுக்கணக்கான நிறுவனங்களும், ஊடகங்களும் இதன் புரவலர்களாகக் களம் இறங்கியிருக்கின்றன.

hindu fair aug 1

வனம், வன விலங்குகளைப் பாதுகாத்தல், சுற்றுச் சூழலைப் பாதுகாத்தல், ஜீவராசிகளிடம் கருணைகாட்டுவது, தாய் தந்தையர் ஆசிரியர்களுக்கு மரியாதை செலுத்தல், பெண்களைப் போற்றல், தேசப்பற்று ஆகிய ஆறு முக்கிய நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு இக்கண்காட்சி நடைபெறவுள்ளது.

“”பள்ளி மாணவ-மாணவிகளுக்கு ஹிந்து ஆன்மிகம் தொடர்பாகத் தெளிவான புரிதலை ஏற்படுத்தி, ஹிந்து தர்மத்தின் மீதுள்ள தவறான கற்பிதங்களை உடைப்பதுதான் எங்களது பிரதான நோக்கம். ஹிந்து தத்துவம் என்றால் என்ன என்பதை ஆறு அம்சங்கள் மூலமாகச் சொல்கிறோம். இன்றைய காலகட்டத்திற்கு மிகவும் தேவையான இந்த ஆறு அம்சங்களை ஹிந்து ஆன்மிகத்துடன் இணைத்து கண்காட்சியில் சொல்லவுள்ளோம்” என்று கண்காட்சியின் நோக்கம் குறித்து விளக்கினார் ஹிந்து ஆன்மிகக் கண்காட்சியின் ஒருங்கிணைப்பாளரான பத்திரிகையாளர் குருமூர்த்தி.

சில ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்கா சென்றிருந்தேன். ஹிந்து ஆன்மிகத்திற்கு மனித நேயத் தன்மை குறைவு என்ற தவறான கருத்து நிலவுவதை அறிந்து வருந்தினேன். ஹிந்து ஆன்மிகத்திற்கு மனிதத் தன்மை இல்லை என்று சொல்வது எவ்வளவு அபத்தம்…? ஹிந்து ஆன்மிகத்தில் உள்ள அம்சங்களை ஒரு கண்காட்சியாகச் செய்வது சமூகக் கடமையெனத் தோன்றியது.

அதன் அடிப்படையில்தான் 2009 ஆம் ஆண்டு இந்தக் கண்காட்சியை முதல்முதலில் நடத்தினோம். ஹிந்து ஆன்மிகத்தில் மனித நேயத் தன்மை குறைவு என்றவர்களுக்கு இதுதான் எங்களின் ஆன்மிகத்தின் மனிதத் தன்மை என முகத்தில் அடித்தாற்போல சொன்னது அந்தக் கண்காட்சி. அதன் 8- ஆவது ஆண்டுத் தொடர்ச்சிதான் இந்த ஆண்டு நடைபெறவுள்ளது’ என்கிறார் அவர்.

ஹிந்து ஆன்மிக சேவைக் கண்காட்சிக்காக உருவாக்கப்பட்ட விவேகானந்தர் ரதங்கள் அரசுப் பள்ளிகளுக்குச் செல்வதற்கு திராவிடர் கழகம் பலத்த கண்டனத்தைத் தெரிவித்துள்ளது. “திராவிடர் கழகத்தின் பார்வையே தவறு, ஹிந்து என்ற வார்த்தை மதத்தை மட்டும் குறிப்பிடுவது அல்ல. இதை நான் சொல்லவில்லை இந்தியாவின் உச்ச நீதிமன்றம் சொல்லியுள்ளது. பாரத தேசத்தின் பாரம்பரியம், வாழ்க்கை முறை. பாரத தேசத்தின் பொதுவான அம்சங்களின் தொகுப்பைத்தான் ஹிந்து என்கிறது உச்ச நீதிமன்றம். ஹிந்து என்றால் என்ன என உச்ச நீதிமன்றம் என்ன சொல்லியிருக்கிறதோ அதைத்தான் ஹிந்து ஆன்மிக சேவைக் கண்காட்சி தனது தாரக மந்திரமாக ஏற்றுக்கொண்டுள்ளது இதை மதக் கண்ணோட்டத்துடன் பார்ப்பது தவறாகும்’ என்கிறார் குருமூர்த்தி.

error: Content is protected !!