பிரம்மன் – திரை விமர்சனம்!

பிரம்மன் – திரை விமர்சனம்!

படம் எண்பதுகளில் வந்திருக்க வேண்டிய சென்ட்டிமெண்ட் + லாலாலா லாலா லாலாலா விக்ரமன் டைப் சாக்ரிபைஸிங் படம் இது. சுவாரஸ்யமாக எடுத்து இருப்பதால் தப்பி விடுகிறது. ஆனாலும் கழுத்தில் ரத்த காயம் தான்.படத்தை உலகத் தொலைக்காட்சிகளில் முதன் முறையாக பார்த்துக் கொள்ளலாம்.
bramman-movie-
திரையரங்கை லீசுக்கு எடுத்து அந்த தொழிலில் முன்னேற கடுமையாக உழைக்கும் கூடவே டைம்பாஸ்க்கு காதலிக்கும் ஹீரோ. அவரை எப்போதுமே தண்டச்சோறு, வெட்டி ஆபீசர் என்று கலாய்க்கும் குடும்பம். அவரையும் எண்ணி மருகி மருகி காதலிக்கும் நாயகி.

இநநிலையில் திரையரங்கிற்கும் காதலுக்கும் பணத்தேவையின் காரணமாக சிக்கல் வர நாலாம் வகுப்பு வரை உடன் படித்த நண்பன் சினிமாவில் பெரிய இயக்குனராக இருப்பதை அறிந்து அவரிடம் உதவி கேட்க சென்னை வரும் ஹீரோ, எதேச்சையாக இயக்குனராகி விடுகிறார். அதே சமயம் நண்பனுக்காக அந்த வாய்ப்பையும், தன் காதலியையும் விட்டுத் தருகிறார். ஆனால் தமிழ்திரை சென்டிமென்ட்படி மீண்டும் அந்த திரையரங்கமும் காதலியும் நாயகனுக்கே கிடைப்பதை கொட்டாவி விட வைத்து சொல்லியிருக்கிறார் இயக்குனர்.

இதிலும் வழக்கம் போல நண்பர்களுக்காகவே வாழும் நாயகனாக சசிக்குமார். இந்த ‘பிரண்ட்’-ங்கற ஒரு அடிப்படை விஷயத்தை சொல்லியே எல்லோரும் இவர்கிட்ட கால்ஷீட் வாங்கிடறாங்க போல.மேலும் தனக்கு வராத ஏரியாவான ரொமான்ஸ், நடனம் போன்றவற்றிலும் சிரத்தை எடுத்து செய்திருக்கிறார். சில இடம் நம்மை(யும்) கஷ்டப்படுத்தினாலும் பல இடத்தில் அசால்ட்டாக பாஸ் செய்து கடந்து போகிறார்.

நாயகி லாவண்யா அழகாக இருக்கிறார். அந்த சதைப்பத்து இல்லாத கன்னத்திலும் குழி விழுவது அழகாக இருக்கிறது. அதை தாண்டி எதுவும் சொல்வதற்கில்லை.சந்தானம் ஒன்லைனர்களால் திரையரங்கில் சிரிப்பு வெடி பற்ற வைக்கிறார். கடைசி அரை மணிநேரத்தில் பெர்மார்மன்ஸிலும் பின்னுகிறார்.சூப்பர் சந்தானம்.

சென்னையில் நாம் பார்த்த பல உதவி இயக்குனர்களின் பிம்பமாக சூரி. அப்படியே இயல்பாக நடித்துள்ளார். நாம் எதிர்பார்த்தது சந்தானம் சூரி இருவருக்கும் இடையே நிறைய காட்சிகளைத்தான். ஆனால் இருவரையும் ஒரு இடத்தில் கூட ஒன்று சேர்க்கவில்லை இயக்குனர். என்ன பஞ்சாயத்தோ என்ன அரசியலோ யாமறியேன் பராபரமே.

அரங்கில் பிட்டு படம் ஓட்டியாவது சம்பாதித்து தியேட்டர் ஊழியர்களுக்கு உதவ நினைக்கும் சந்தானம், அந்த இயக்குனர் நண்பரின் தியாகம், தியேட்டர் வரி கட்டாமலேயே திரும்பக் கிடைப்பது, தங்கையின் சென்ட்டிமெண்ட், அம்மா அப்பாவின் கண்ணீர் எல்லாமே பக்கா நாடகத் தன்மையுடன் இருக்கிறது.

திருப்பதி பயணமும், அங்கு ஒரு சினிமாவும், தேவையில்லாத சண்டைக் காட்சியும் நேரத்தை கடத்த மட்டுமே பயன்பட்டு இருக்கின்றன.

ஏற்கனவே சில முறை கேட்டதால் பாடல்கள் ஒன்றிரண்டு பிடிக்கிறது.

போதும் இதற்கு மேல் விம் வைத்து விளக்க எதுவுமில்லை. எனக்கும் பசிக்கிறது, அதனால் இத்துடன் எல்லாத்தையும் முடித்துக் கொள்வோம்.

உங்களுக்கான என் பிரத்யேக அட்வைஸ்- முன்னரே சொன்னது போல் படத்தை உலகத் தொலைக்காட்சிகளில் முதன் முறையாக பார்த்துக் கொள்ளலாம்.

நன்றி::ஆரூர் மூனா@/www.amsenthil.com/

Related Posts

error: Content is protected !!