ஜனவரி 9 முதல் ரேஷன் கார்டுதாரர்களுக்கு 1000 ரூபாய் உள்பட பொங்கல் பரிசு!

ஜனவரி 9 முதல் ரேஷன் கார்டுதாரர்களுக்கு 1000 ரூபாய் உள்பட பொங்கல் பரிசு!

ஜனவரி 9ம் தேதி முதல் 12ஆம் தேதிக்குள் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணிகள் நிறைவடைய வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

பச்சரிசி, கரும்பு, சர்க்கரை, முந்திரி, உலர் திராட்சை, ஏலக்காய் மற்றும் ஆயிரம் ரூபாய் ஆகிய வற்றுடன் கூடிய பொங்கல் பரிசு தொகுப்பு திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த மாதம் தலைமை செயலகத்தில் தொடங்கி வைத்தார்.தமிழ் நாடு முழுவதும் 2 கோடி ரேஷன் கார்டு தாரர்களுக்கு தேவையான பொங்கல் பரிசு தொகுப்பு பொருட்கள் கொள்முதல் செய்யப்பட்டு வழங்குவதற்கான பணிகள் தீவிரமடைந்துள்ளன.

ஜனவரி 9ம் தேதி முதல் 12ஆம் தேதிக்குள் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க வேண்டும் என்றும், பரிசு தொகுப்பையும், 1000  ரொக்கத் தொகையும், ஒரே நேரத்தில் மக்களுக்கு வழங்க வேண்டும் என்றும் தமிழக அரசு அறிவுறுத்தி இருக்கிறது.

இதுகுறித்து அரசு  வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் ரூ.1,000 வழங்கும் பணியை ஜனவரி 9-ம் தேதி தொடங்கி, 12-ம் தேதிக்குள் முடிக்க வேண்டும். விடுபட்ட அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ஜன.13-ம் தேதி பொங்கல் பரிசுத் தொகுப்பை வழங்கி இப் பணியை முழுமையாக முடிக்க வேண்டும். பொதுமக்கள் அவரவருக்குரிய ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசுத் தொகுப்பை பெற்றுக் கொள்ளலாம்.

ஒரே நேரத்தில் அதிக குடும்ப அட்டைதாரர்கள் வருவதைத் தடுக்க, குடும்ப அட்டையின் எண்ணிக்கை அடிப்படையில் சுழற்சி முறையில் வழங்க மாவட்ட ஆட்சியர்கள் ஏற்பாடு செய்ய வேண்டும். தெருவாரியாக குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் செய்வதற்கான அட்டவணையைத் தயார் செய்து, குடும்ப அட்டைதாரர்கள் நன்கு அறியும் வகையில், முன்கூட்டியே ரேஷன் கடைகளில் விளம்பரம் செய்ய வேண்டும்.

ரொக்கப் பணத்தை இரண்டு 500 ரூபாய் நோட்டுகளாக வெளிப்படையாக வழங்க வேண்டும். எக் காரணம் கொண்டும் பணத்தை உறையில் வைத்து தரக்கூடாது. குடும்ப அட்டையில் இடம் பெற்றுள்ள உறுப்பினர்களில் யார் வந்தாலும் பொங்கல் பரிசுத் தொகுப்பை வழங்க வேண்டும்.

மின்னணு குடும்ப அட்டை (ஸ்மார்ட் கார்டு) மூலமாகத்தான் இதை வழங்க வேண்டும். மின்னணு அட்டை இல்லாதவர்களுக்கு குடும்ப அட்டையில் உள்ள யாரா வது ஒருவரின் ஆதார் அட்டை யைக் கொண்டோ அல்லது பதிவு செய்யப்பட்ட செல்போன் எண்ணுக்கு வரும் ஒருமுறை கடவுச் சொல் (OTP) அடிப்படையிலோ வழங்கலாம்.

பொங்கல் தொகுப்பு வழங்கப் பட்டதும் சம்பந்தப்பட்டவரின் செல்போனுக்கு குறுஞ்செய்தி அனுப்பப் படும். பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் நாளில் ரேஷன் கடைகளுக்கு காவல் துறை பாதுகாப்பு அளிக்க மாவட்ட ஆட்சியர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.’ என்று அரசு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!