உலகின் மிகப்பெரிய செல்போன் தொழிற்சாலை! -டெல்லியில் மோடி திறந்து வைத்தார்

உலகின் மிகப்பெரிய செல்போன் தொழிற்சாலை! -டெல்லியில் மோடி திறந்து வைத்தார்

மோடி தலைமையிலான மத்திய அரசின் மேக் இன் இந்தியா திட்டத்தின் மூலம் மொபைல் போன் உற்பத்தியில் உலகளவில் இந்தியா இரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ளது என பிரதமர் நரேந்திர மோடி  பெருமையுடன் அறிவித்தார்.டெல்லி, நோய்டாவில் உலகின் மிகப்பெரிய சாம்சங் மொபைல் போன் தொழிற்சாலையை தென்கொரிய அதிபருடன் சேர்ந்து துவக்கி வைத்த மோடி இதை தெரிவித்தார்.

தென்கொரிய அதிபர் மூன் ஜே இன் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். டில்லியின் நோய்டா நகரில் சாம்சங் நிறுவனத்தின் மொபைல் போன் தொழிற்சாலையை தென்கொரிய அதிபர் மூன் ஜே இன் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தனர். உலகின் மிகப்பெரிய செல்போன் தொழிற்சாலையான இது 35 ஏக்கரில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த தொழிற்சாலையில் 4,915 கோடி ரூபாயை சாம்சங் நிறுவனம் முதலீடு செய்துள்ளது. இந்தியச் சந்தையில் மட்டுமன்றி ஐரோப்பா, மேற்கு ஆசியா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளின் சந்தைக்கும் இங்கிருந்து செல்போன்கள் ஏற்றுமதி செய்யப்படும்.

மொபைல் போன் தொழிற்சாலையின் திறப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக இரு தலைவர்களும் நோய்டாவிற்கு மெட்ரோ ரயிலில் சென்றனர். விழாவில் பிரதமர் மோடி உரையாற்றியதன் விவரம் :

இந்தியா உலகின் வேகமான பொருளாதார வளர்ச்சி கொண்ட நாடு. மத்திய வர்க்கத்தினருக்கு பல புதிய வாய்ப்புகளை உருவாக்கி தருவதிலும் இந்தியா முன்னணி வகித்து வருகிறது.

மத்திய அரசின் மேக் இன் இந்தியா திட்டம் வெறும் பொருளாதார கொள்கை மட்டும் அல்ல. தென்கொரியா போன்ற நாடுகளுடன் இந்தியா பேணி காக்கும் இருதரப்பு உறவுக்கான நிலைத்த நினைவு சின்னமாக அமையும்.

இந்தியாவில் 40 கோடி ஸ்மார்ட் போன்கள் பயன்படுத்தப்படுகின்றன. 32 கோடி மக்கள் பிராட்பாண்ட் இண்டர்நெட் சேவையை பயன்படுத்துகிறார்கள்.

இந்தியாவில் மொபைல் போன் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளின் எண்ணிக்கை 120 ஆக உயர்ந்துள்ளது. நோய்டாவில் மட்டும் 50 தொழிற்சாலைகள் உள்ளன. இதன் மூலம் சுமார் 4 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாகியுள்ளன. சாம்சங் மட்டும் இந்தியாவில் 70 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்புகளை தந்துள்ளது.

குறைந்த விலை கொண்ட மொபைல் போன்கள், வேகமான இண்டர்நெட் சேவை மற்றும் மலிவான டேடா சேவை, மிகவும் வேகமான வெளிப்படையான பரிமாற்றத்திற்கு வழி வகுக்கும்.

மத்திய அரசின் இணைய பொது சந்தை ஆன ஜி.இஎம் (GeM) மூலம் உற்பத்தியாளர்களிடம் இருந்தே நேரடியாக பொருட்கள் கொள்முதல் செய்யப்படுகின்றன. இதனால் சிறு மற்றும் நடுத்தர தொழில் முனைவொர் பயனடைகிறார்கள்.

இன்று திறக்கப்பட்டுள்ள தென்கொரிய நிறுவனமான சாம்சங் –இன் தொழிற்சாலையில் ஆண்டுக்கு சுமார் 12 கோடி ஸ்மார்ட் போன்கள் தயாரிக்கப்படும். இதில் 5000 கோடி மதிப்பிலான 30 சதவீத போன்கள் ஏற்றுமதி செய்யப்படும்.

இந்தியா ஒரு டிஜிட்டல் புரட்சியை நோக்கி முன்னேறிச் செல்கிறது. விலை மலிவான இண்டர்நெட் மற்றும் ஃபைபர் ஆப்டிக் நெட்வொர்க் மூலமாக இன்று ஒரு லட்சம் கிராம பஞ்சாயத்துகளில் இணைய சேவை வழங்கப்பட்டுள்ளது என மோடி தெரிவித்தார்.

error: Content is protected !!