இது ரஜினி குறித்த தகவல் | காலா பற்றியது அல்ல!

இது ரஜினி குறித்த தகவல் | காலா பற்றியது அல்ல!

காலா ரஜனி படமா, ரஞ்சித் படமா என்று நேற்றுப் பகல் முழுவதும் பேஸ்புக்கில் தர்க்கங்கள் நடந்தன.அதே விஷயம் இரவு தொலைக்காட்சிக் கச்சேரிகளிலும் தொடர்ந்தது. இன்று காலை நாளிதழ் ஒன்று “ரஞ்சித்தின் சூழ்ச்சி வலையில்” ரஜனி சிக்கிவிட்டதாகக் கவலைப்படுகிறது. அதையெல்லாம் பார்த்த பின் இதை எழுத வேண்டிய அவசியம் நேர்ந்து விட்டது.
சில விஷயங்களை நாம் நினைவில் கொள்வது நமக்குத் தெளிவு தரும்
1 இது ரஜனியே ரஞ்சித்தை அழைத்து உருவாக்கச் சொன்ன படம். அதுவும் “உங்கள் படமாக வேண்டாம், என் படமாகச் செய்யுங்கள்” எனக் கேட்டுக் கொண்ட படம். அவர் குடும்ப்த்தினர் காசு போட்ட படம்.

2.அதனால் அவர் கதை, திரைக்கதை, வசனம் எல்லாவற்றிலும் கவனம் செலுத்தியிருப்பார். அவரது விருப்பத்திற்கு மாறானவை அதில் இடம் பெற்றிராது. எனவே அதில் இடம் பெற்றுள்ளது அவரது அரசியல் பார்வை என்றுதான் கொள்ள வேண்டும்.. எம்.ஆர்.ராதா எம்ஜியாரைச் சுட்டதாகத் தொடரப்பட்ட வழக்கில் ஒரு தகவல் வெளியானது. அது. ஒரு படத்தின் வசனத்தில் ” உதய சூரியன்” என்று வருமிடத்தை நம்பிக்கை நட்சத்திரம் என்று ராதா மாற்றச் சொன்னார் என்றும் அதை எம்ஜிஆர் ஆட்சேபித்தார் என்றும் அதனால் அவர்கள் இருவருக்குமிடையே மனஸ்தாபம் உண்டாயிற்று என்றது அந்தத் தகவல். அந்த அளவிற்கு தமிழ் திரைப்பட ஹீரோக்கள் கதை வசனங்களில் கவனம் செலுத்தும் வழக்கம் தமிழ் சினிமாவில் உண்டு.

3. காலா படம் ஒரு நாளில் உருவாகிவிடவில்லை. குறைந்தது ஆறுமாதங்க்களாவது வேலை நடந்திருக்கும். அந்தக் கால கட்டங்களில் ஸ்கிரிப்டைப் பார்த்திருக்க ரஜனிக்கு வாய்ப்புண்டு. அது மட்டுமல்ல, ஒத்திகை, டேக், ரீ டேக், டப்பிங்க் என பல சந்தர்ப்பங்களில் அவர் வசனத்தைப் பேசியிருக்க வாய்ப்புண்டு.(அவை இப்போது அவருக்கு மனப்பாடமே கூட ஆகியிருக்கலாம்) அவற்றில் தனக்கு உடன்பாடில்லாத கருத்துக்கள் இருந்திருந்தால் அதை அவர் நீக்கச் சொல்லியிருப்பார்

4.ரஞ்சித்தின் இயக்கத்தில் ரஜனிக்கு இது முதல்படமல்ல. அவரை படத்தை இயக்க அழைக்கும் முன்னர் ரஜனி ரஞ்சித்தின் கருத்துக்கள நன்கு அறிந்திருப்பார். .ரஞ்சித்தின் அரசியல் நிலைபாடுகள் அப்படியொன்றும் ரகசியமானவை அல்ல. என்வே அவரது கதை எப்படி இருக்கும், காட்சிகள் எப்படி இருக்கும், வசனம் என்ன சொல்லும் என்றெல்லாம் ரஜனிக்குத் தெரிந்திருக்கும்

5.ரஜனி புதிதாக ஒரு படம் நடிக்கத் திட்டமிட்டுக் கொண்டிருந்த போது வெற்றிமாறன் ஒரு கதை சொன்னதாகவும் அது பூராவும் அரசியல் என்பதால் அதற்கு ஒப்புக் கொள்ளவில்லை என்றும் ரஜனி சொன்னார். காலாவும் முழுக்க அரசியல்படம்தான் என்று பார்த்தவர்களும் விமர்சனங்களும் சொல்கின்றன(ர்) எனவே ரஜனி எத்தகைய அரசியலைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும் என்பதில் தெளிவாக இருந்திருக்கிறார் என்பதை உணர்ந்து கொள்ள முடிகிறது

6 . ரஜனிக்கு பாஜகவின் மீது பெரிய ஈடுபாடு கிடையாது, அவர் போராட்டங்களுக்கு எதிரி அல்ல என்றெல்லாம் அவரோடு பழகிய காலா பட ஆர்ட் டைரக்டர் ராமலிங்கம் நேற்று நியூஸ் 18 விவாதத்தில் தெரிவித்தார். படப்பிடிப்பின் போது ராமலிங்கத்தோடு பல முறை நீண்ட உரையாடல்கள் நிகழ்த்தியதாக காலா ஆடியோ வெளியீட்டின் போது ரஜனியே சொன்னார். எனவே ராமலிங்கத்தின் கருத்துக்களை அலட்சியப்படுத்தைவிட முடியாது

7, ரஜனியை பாஜகவோடு தொடர்புபடுத்திப் பேசக் காரணமானது அவரது “ஆன்மீக அரசியல்” என்ற சொல்லாடல். பாஜகவினுடையது இந்துத்வ அரசியல். இந்துத்வாவும் இந்து மதமும் ஒன்று எனக் குழப்பிக் கொள்வதைப் போல ஆன்மீகத்தையும் இந்துத்துவாவையும் சிலர் குழப்பிக் கொள்கிறார்கள். ஆன்மீகம் என்பது எல்லா மதத்தவருக்கும் உரியது.

8.எதெற்கெடுத்தாலும் போராட்டம் என்றால் தமிழ் நாடு சுடுகாடாகிவிடும் என்ற அவர் வாக்கியத்தில் கவனிக்கப்பட வேண்டிய முக்கியமான சொல் “எதற்கெடுத்தாலும்”. ஆனால் பரபரப்பிற்குப் பசித்திருக்கும் ஊடகங்கள் தங்களுக்கு செள்கரியமாக போரட்டத்தை எடுத்துக் கொண்டு திரித்து விட்டன.

9. வளர்ச்சியை நோக்கிச் செல்ல வேண்டுமானால் போராட்டங்க்களை மட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற கருத்தியல் போராடடங்களை முன்னெடுத்த தலைவர்களாலேயே ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கின்றன. லீ குவான் யூ தொழிற்சங்கங்களின் ஆலோசகராகச் செயலாற்றியவர். அவர் ஆட்சியில் சிங்கப்பூரில் ஸ்டிரைக்குத் தடை விதிக்கப்பட்டது. சீனத்தில் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சி. ஆனால் வேலை நிறுத்தம் என்பது சட்ட பூர்வ உரிமை என்பது எண்பதுகளில் அதன் அரசமைப்புச் சட்டத்திலிருந்து நீக்கப்பட்டுவிட்டது,

10.தமிழகத்தின் அரசியல் விடுதலைப் போராட்ட நாள்களிலிருந்து, நூறாண்டுகளுக்கும் மேலாக, இடதுசாரிக் கருத்தியலை ஒட்டிக் கிளைத்த அரசியல். காங்கிரஸ், கம்யூனிஸ்ட், திராவிடக் கட்சிகள் எனப் பலரும் அந்தப் பாதையில் பயணித்து வருபவர்கள். அதனால் மாற்றுத் தடங்களைப் பற்றிய யோசனை வெகுஜன தளத்தில் வைக்கப்படும் போது பதற்றம் ஏற்படுவது இயற்கை. ஊடகங்கள் அந்தப் பதற்றத்தை எதிரொலிக்கின்றன. அவை அதனைத் தாண்டியும் பார்வையை செலுத்த வேண்டும்.

 

மாலன்

Related Posts

error: Content is protected !!