டிரம்பின் 66 ‘எக்ஸிட்’ வெடிகுண்டு: இந்தியாவுக்குப் பாதிப்பா?
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது இரண்டாவது பதவிக்காலத்தில், அன்றாடம் ஏதாவது ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டோ அல்லது அதிரடி முடிவுகளை எடுத்தோ உலக நாடுகளைத் திகைப்பில் ஆழ்த்துவதை ஒரு வாடிக்கையாகவே கொண்டுள்ளார். ‘அமெரிக்காவே முதன்மை’ (America First) என்ற தனது ஒற்றை இலக்கை நோக்கி அவர் வீசும் ஒவ்வொரு பகடையும் சர்வதேச அரசியலில் பெரும் அதிர்வலைகளை உண்டாக்கி வருகின்றன. அந்த வகையில், டிரம்ப் ஆட்சி ஓராண்டு நிறைவை நெருங்கும் வேளையில், உலக நாடுகளை உலுக்கும் வகையில் மற்றுமொரு பிரம்மாண்டமான முடிவை தற்போது அவர் அறிவித்துள்ளார். ஆம்.. அமெரிக்காவின் நலன்களுக்கு இனி எந்த வகையிலும் உதவப்போவதில்லை என்று கருதப்படும் 66 சர்வதேச அமைப்புகளிலிருந்து அமெரிக்கா முற்றிலுமாக வெளியேறுவதாக அவர் அறிவித்திருப்பதுதான் அந்தப் புதிய ‘வெடிகுண்டு’.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், 2026 ஜனவரி 7-ம் தேதி, அமெரிக்காவின் இறையாண்மைக்கும் வரிப்பணத்திற்கும் சுமையாக இருப்பதாகக் கருதும் 66 சர்வதேச அமைப்புகளிலிருந்து வெளியேறுவதற்கான நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்டுள்ளார். இதில் 31 ஐக்கிய நாடுகள் சபை (UN) சார்ந்த அமைப்புகளும், 35 ஐநா அல்லாத சர்வதேச அமைப்புகளும் அடங்கும்.
இந்தியாவிற்கு ஏற்படப்போகும் தாக்கங்கள்!
அமெரிக்காவின் இந்த அதிரடி முடிவால் இந்தியாவிற்கு ஏற்படப்போகும் தாக்கங்கள் பல பரிமாணங்களைக் கொண்டவை. முதலாவதாக, இந்தியா மற்றும் பிரான்ஸ் நாடுகளின் முயற்சியால் தொடங்கப்பட்ட சர்வதேச சூரியசக்தி கூட்டணியில் (International Solar Alliance) இருந்து அமெரிக்கா வெளியேறுவது, சூரியசக்தி தொடர்பான உலகளாவிய முன்னெடுப்புகளுக்குப் பின்னடைவாக அமைவதோடு, அக்கூட்டணியின் தலைமைப் பொறுப்பில் உள்ள இந்தியாவின் ராஜதந்திர முயற்சிகளுக்கு ஒரு சவாலையும் ஏற்படுத்துகிறது. இரண்டாவதாக, ஐநா காலநிலை மாற்ற ஒப்பந்தங்களில் (UNFCCC, IPCC) இருந்து அமெரிக்கா விலகுவதால், வளரும் நாடுகளுக்குக் கிடைக்க வேண்டிய காலநிலை நிதி (Climate Finance) மற்றும் பசுமை தொழில்நுட்ப உதவிகள் குறையும் அபாயம் உள்ளது, இது இந்தியாவின் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் திட்டங்களுக்கான நிதியாதாரத்தைப் பாதிக்கக்கூடும். மேலும், உலகளாவிய பயங்கரவாத எதிர்ப்பு மன்றம் (GCTF) போன்ற அமைப்புகளிலிருந்து அமெரிக்கா வெளியேறுவது, எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியா மேற்கொள்ளும் சர்வதேச ஒருங்கிணைப்பு முயற்சிகளில் ஒருவிதத் தொய்வை ஏற்படுத்தலாம். இருப்பினும், அமெரிக்காவின் இந்தத் தனிமைப்படுத்தல் கொள்கை, இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகள் சர்வதேச அரங்கில், குறிப்பாகத் தெற்குலக நாடுகளின் (Global South) குரலாக உருவெடுக்கவும், உலகளாவிய முடிவெடுக்கும் அமைப்புகளில் தனது ஆதிக்கத்தைச் செலுத்தவும் ஒரு புதிய வாய்ப்பையும் கதவையும் திறந்துவிட்டுள்ளதாகவே நிபுணர்கள் கருதுகின்றனர்.

ஏன் இந்த அதிரடி முடிவு?
இந்த வெளியேற்றத்தின் பின்னணியில் டிரம்ப் நிர்வாகம் முன்வைக்கும் காரணங்கள் மிகவும் வலுவானவை:
-
நிதியியல் சுமை: அமெரிக்க வரி செலுத்துவோரின் பில்லியன் கணக்கான டாலர்கள், அமெரிக்காவிற்கு எந்தப் பயனும் தராத அல்லது அமெரிக்காவை விமர்சிக்கும் அமைப்புகளுக்கு வீணாகச் செல்வதை நிறுத்த டிரம்ப் விரும்புகிறார்.
-
கொள்கை முரண்பாடு: காலநிலை மாற்றம் (Climate Change), பாலின அரசியல் (Gender Politics) மற்றும் உலகமயமாக்கல் (Globalism) போன்ற விவகாரங்களில் இந்த அமைப்புகள் கொண்டுள்ள ‘ஒக்’ (Woke) கொள்கைகள், டிரம்பின் பழமைவாதக் கொள்கைகளுக்கு நேர் எதிராக உள்ளன.
-
இறையாண்மை பாதுகாப்பு: சர்வதேச அமைப்புகள் என்ற பெயரில் மற்ற நாடுகள் அமெரிக்காவின் உள்நாட்டு விவகாரங்களில் அல்லது பொருளாதார முடிவுகளில் தலையிடுவதை டிரம்ப் நிர்வாகம் கடுமையாக எதிர்க்கிறது.
பட்டியலில் உள்ள முக்கிய அமைப்புகள்
இந்த 66 அமைப்புகளின் பட்டியல் உலக அரசியலை மாற்றியமைக்கும் வல்லமை கொண்டது:
-
காலநிலை மாற்ற அமைப்புகள்: UNFCCC மற்றும் IPCC போன்ற காலநிலை தொடர்பான அமைப்புகளிலிருந்து வெளியேறுவதன் மூலம், பாரிஸ் ஒப்பந்தத்தின் மிச்சமீதித் தொடர்புகளையும் அமெரிக்கா துண்டிக்கிறது.
-
ஐநா சார்பு அமைப்புகள்: UN Women, UN Population Fund போன்ற முக்கிய அமைப்புகளுக்கு இனி அமெரிக்க நிதி கிடைக்காது.
-
சர்வதேச சூரியசக்தி கூட்டணி (ISA): இந்தியா மற்றும் பிரான்ஸ் முன்னெடுத்த இந்த முக்கியமான எரிசக்தி அமைப்பிலிருந்தும் அமெரிக்கா விலகுவது குறிப்பிடத்தக்கது.
மார்கோ ரூபியோவின் எச்சரிக்கை
அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மார்கோ ரூபியோ இது குறித்துக் கூறுகையில், “அமெரிக்காவை பலவீனப்படுத்தும் மற்றும் உலகளாவிய ஆதிக்கத்தை நிலைநாட்டத் துடிக்கும் அமைப்புகளுக்கு அமெரிக்கா இனி ஏடிஎம் (ATM) இயந்திரமாக இருக்காது” என்று அதிரடியாகத் தெரிவித்துள்ளார்.
உலக நாடுகளின் கவலை
அமெரிக்காவின் இந்தத் தனிமைப்படுத்தல் கொள்கை, பல சர்வதேசத் திட்டங்களைப் பாதிக்கும்:
-
ஏழை நாடுகளுக்கான மருத்துவ மற்றும் கல்வி உதவிகள் குறையும்.
-
சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான உலகளாவிய முயற்சிகள் பின்னடைவைச் சந்திக்கும்.
-
சர்வதேச அளவில் அமெரிக்காவின் தலைமைப் பண்பு கேள்விக்குள்ளாகும்.
மொத்தத்தில் அதிபர் டிரம்பின் இந்த அதிரடி ஆட்டம், இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய உலக ஒழுங்கை மாற்றியமைப்பதாக உள்ளது. “அமெரிக்காவின் பணம் அமெரிக்கர்களுக்கே” என்ற அவரது பிடிவாதம் ஒருபுறம் பாராட்டப்பட்டாலும், உலக நாடுகளுடனான உறவில் இது ஒரு நீண்டகால விரிசலை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை.
டாக்டர். ரமாபிரபா


