செய்தித் திருட்டுக்கு முற்றுப்புள்ளி? ஏஐ-க்கு எதிராகத் திரும்பிய முன்னணி ஊடகங்கள்
அண்மைக்காலமாகச் செய்தித் துறையில் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் வளர்ச்சி நம்மை மிரள வைக்கிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு வரை, ஒரு முக்கியச் செய்தியைத் திரட்டி, களத்தில் நின்று தகவல்களைச் சேகரித்து, அதைச் சரிபார்த்து, பிழை திருத்தி மக்களிடம் கொண்டு போய் சேர்க்க சுமார் 100 முதல் 200 நிருபர்களும், துணை ஆசிரியர்களும் தேவைப்பட்டனர். ஆனால், இன்று நிலைமை தலைகீழாக மாறியிருக்கிறது.
ஒரு ஏஐ டூல், உலகெங்கும் உள்ள ஆயிரக்கணக்கான செய்தித் தளங்களைச் சில நிமிடங்களில் ஊடுருவி, அங்கிருக்கும் தகவல்களைச் சுரண்டி, மிக நேர்த்தியான ஒரு செய்திக் கட்டுரையைச் சில நொடிகளில் உருவாக்கி அசத்துகிறது. ஏஐ-க்கு இந்த விஸ்வரூப வெற்றியைச் சாத்தியமாக்குவது எது தெரியுமா? இணையத்தில் கொட்டிக்கிடக்கும் முன்னணி செய்தித் தளங்களின் தரவுகள் தான்.

79% செய்தி நிறுவனங்கள் போட்ட ‘நோ என்ட்ரி’ போர்டு!
தனது தகவல்கள் திருடப்படுவதை உணர்ந்த செய்தி நிறுவனங்கள் இப்போது விழித்துக்கொண்டன. உலகத்தரம் வாய்ந்த 100 முன்னணி செய்தித் தளங்களின் robots.txt (பாட்கள் நுழைவதைக் கட்டுப்படுத்தும் கோப்பு) கோப்புகளை ஆய்வு செய்ததில் ஒரு அதிரடித் தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 79% செய்தி நிறுவனங்கள் தங்களது தரவுகளை ஏஐ மாடல்கள் பயிற்சி எடுக்க (Training) அனுமதிக்காமல் தடுத்துள்ளன.
எதற்காக இந்தத் தடை?
செய்தி நிறுவனங்களின் இந்த முடிவுக்குப் பின்னால் இருக்கும் முக்கியமான காரணங்கள் இதோ:
-
உழைப்புச் சுரண்டல்: நிருபர்கள் உயிரைப் பணயம் வைத்துச் சேகரிக்கும் செய்திகளை, ஏஐ நிறுவனங்கள் எவ்வித அனுமதியுமின்றித் தங்கள் மென்பொருளைப் பயிற்றுவிக்கப் பயன்படுத்துகின்றன.
-
வருவாய் இழப்பு: ஒரு வாசகர் ஏஐ தளத்திலேயே செய்தியின் சுருக்கத்தைப் படித்துவிடுவதால், அவர் மூல செய்தித் தளத்திற்கு வருவது குறைகிறது. இது ஊடகங்களின் விளம்பர வருவாயைப் பெரிய அளவில் பாதிக்கிறது.
-
ஆதாரங்கள் மறைப்பு: 71% செய்தி நிறுவனங்கள் தங்களது செய்திகள் ஏஐ தேடல் முடிவுகளில் (Live Search) ஆதாரங்களாகக் காட்டப்படுவதையும் தடுத்துவிட்டன.
ஆய்வு சொல்லும் புள்ளிவிவரங்கள்:
-
அதிகம் தடுக்கப்பட்ட பாட்கள்: ‘Common Crawl’ எனப்படும் CCBot-ஐ 75 சதவீதத் தளங்களும், ஓபன் ஏஐ (OpenAI)-ன் GPTBot-ஐ 62 சதவீதத் தளங்களும் தடுத்துள்ளன.
-
கூகுளுக்கு விலக்கு: சுவாரஸ்யமாக, கூகுளின் ‘Google-Extended’ பாட்டை 46 சதவீதத் தளங்கள் மட்டுமே தடுத்துள்ளன. தேடுதளங்கள் மூலம் வரும் வாசகர் வருகையை இழக்க ஊடகங்கள் விரும்பாததே இதற்கு முக்கியக் காரணம்.
எதிர்காலம் என்ன?
100 பேர் செய்ய வேண்டிய வேலையை ஒரு டூல் செய்யும் போது, நிருபர்கள் மற்றும் ஆசிரியர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகிறது. “தகவல் திருட்டில்” ஈடுபடும் ஏஐ நிறுவனங்கள், இனி செய்தி நிறுவனங்களுடன் முறையாக ஒப்பந்தம் செய்து, ராயல்டி பணம் கொடுத்தால் மட்டுமே தரவுகளைப் பெற முடியும் என்கிற சூழலை இந்தத் தடைகள் உருவாக்கியுள்ளன.
தொழில்நுட்ப வளர்ச்சி ஒரு பக்கம் வியக்க வைத்தாலும், செய்தித் துறையின் நேர்மையையும், மனித உழைப்பையும் பாதுகாக்க வேண்டிய கட்டாயத்தில் இன்று ஊடகங்கள் டிஜிட்டல் போர் நடத்தி வருகின்றன.
நிலவளம் ரெங்கராஜன்


