ரோகிட் ஸ்டைல்: திரையில்லா ஏஐ கண்ணாடி- CES 2026-ன் புதிய புரட்சி!
லாஸ் வேகாஸில் நடைபெற்று வரும் CES 2026 தொழில்நுட்பக் கண்காட்சியில், ஸ்மார்ட் கண்ணாடி தயாரிப்பில் முன்னணியில் இருக்கும் ‘ரோகிட்’ (Rokid) நிறுவனம், தனது புதிய படைப்பான ‘ரோகிட் ஸ்டைல்’ (Rokid Style) ஏஐ ஸ்மார்ட் கண்ணாடிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. திரை (Display) இல்லாத, முற்றிலும் ஏஐ (AI) மற்றும் குரல் வழித் தேடலை மையமாகக் கொண்டது இந்தக் கண்ணாடி. ஆம்.. ஸ்மார்ட் கண்ணாடிகள் என்றாலே ஒரு சிறிய திரையோ அல்லது கண்களுக்கு முன்னால் பிம்பங்களோ தோன்றும் என்ற பிம்பத்தை ‘ரோகிட் ஸ்டைல்’ உடைத்துள்ளது. சாதாரணக் கண்ணாடி போலவே தோற்றமளிக்கும் இது, முழுக்க முழுக்க செயற்கை நுண்ணறிவின் (AI) உதவியுடன் செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
1. இலகுவான வடிவமைப்பு (Featherweight Design)
வெறும் 38.5 கிராம் எடையுடன், உலகிலேயே மிகவும் இலகுவான ஏஐ ஸ்மார்ட் கண்ணாடிகளில் ஒன்றாக இது அறிமுகமாகியுள்ளது. இதன் முக்கியச் சிறப்பம்சம் என்னவென்றால், இது சாதாரண பார்வைத் திறன் குறைபாடு உள்ளவர்களுக்கான பிரஸ்கிரிப்ஷன் (Prescription) கண்ணாடிகளுடனும் பொருந்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. நாள் முழுவதும் அணிந்திருந்தாலும் எவ்வித அசௌகரியமும் தராத வகையில் இதன் எடை குறைக்கப்பட்டுள்ளது.

2. திறந்தநிலை ஏஐ சூழல் (Open AI Ecosystem)
பெரும்பாலான ஸ்மார்ட் கண்ணாடிகள் ஒரு குறிப்பிட்ட ஏஐ மாடலுடன் (உதாரணமாக மெட்டா – லமா) மட்டுமே இணைக்கப்பட்டிருக்கும். ஆனால், ரோகிட் ஸ்டைல் பல ஏஐ இன்ஜின்களை ஆதரிக்கிறது:
-
ChatGPT-5 மற்றும் DeepSeek போன்ற முன்னணி ஏஐ மாடல்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
-
Google Maps உதவியுடன் குரல் வழி நேவிகேஷன் (Navigation).
-
Microsoft AI Translation மூலம் சுமார் 89 மொழிகளில் நிகழ்நேர மொழிபெயர்ப்பு (Real-time Translation).
3. கேமரா மற்றும் பேட்டரி திறன்
-
இதில் 12MP Sony சென்சார் பொருத்தப்பட்டுள்ளது. இது 4K தரத்தில் வீடியோக்களைப் பதிவு செய்யும் திறன் கொண்டது.
-
குறிப்பாக, இன்ஸ்டாகிராம் மற்றும் டிக்டாக் தளங்களுக்கு ஏற்ப 9:16 போன்ற மூன்று வெவ்வேறு கோணங்களில் (Aspect Ratios) வீடியோக்களைப் பதிவு செய்யலாம்.
-
மெட்டா ரே-பான் கண்ணாடிகளை விட அதிகமாக, தொடர்ச்சியாக 10 நிமிடங்கள் வரை இதில் வீடியோ பதிவு செய்ய முடியும்.
-
ஒருமுறை சார்ஜ் செய்தால் 12 மணிநேரம் வரை பயன்படுத்தலாம்.
4. டூயல் சிப் தொழில்நுட்பம்
இதன் சீரான செயல்பாட்டிற்கு குவால்காம் (Qualcomm AR1) மற்றும் NXP RT600 ஆகிய இரண்டு சிப்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஒன்று ஏஐ மற்றும் கேமரா வேலைகளையும், மற்றொன்று குறைந்த மின்சாரத்தில் கண்ணாடியைத் தொடர்ச்சியாக இயங்க வைக்கும் பணிகளையும் கவனிக்கின்றன.
5. விலை மற்றும் வரத்து
சர்வதேச சந்தையில் இதன் விலை 299 டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ₹25,000) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது ஜனவரி 19, 2026 முதல் விற்பனைக்கு வரவுள்ளது.
ஆக., செல்போனைப் பையிலிருந்து எடுக்காமலேயே கூகுள் மேப்ஸைப் பயன்படுத்துவது, தெரியாத மொழியை மொழிபெயர்ப்பது என ஒரு தனிப்பட்ட உதவியாளராக ரோகிட் ஸ்டைல் செயல்படுகிறது. இது ஸ்மார்ட் கண்ணாடிகளின் அடுத்தகட்டப் பரிணாமமாகப் பார்க்கப்படுகிறது.
பிருத்விராஜ்


