அமெரிக்காவின் பைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசிக்கு அனுமதி!

அமெரிக்காவின் பைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசிக்கு அனுமதி!

உலக சுகாதார நிறுவனம் அமெரிக்காவின் பைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசிக்கு அவசர கால பயன்பாட்டு ஒப்புதல் அளித்துள்ளது. இதனால், உலக நாடுகள் பைசர் தடுப்பூசிக்கு விரைந்து ஒப்புதல் அளிக்க வழி ஏற்படுத்தி தந்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்த பல்வேறு நாடுகளும் தடுப்பூசிகளைக் கண்டு பிடித்துள்ளன. இதில் அமெரிக்காவின் பைசர், ஜெர்மனின் பயான்டெக் நிறுவனமும் இணைந்து கொரோனா தடுப்பூசியை தயாரித்துள்ளன. இந்த தடுப்பூசியை இங்கிலாந்து, அமெரிக்கா, கனடா, ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும் ஏற்றுக் கொண்டு தடுப்பூசி போடத் தொடங்கி உள்ளன. இங்கி லாந்தில் டிசம்பர் 8ம் தேதி இந்த தடுப்பூசி பயன்பாடு தொடங்கியது.

இந்நிலையில், பைசர் தடுப்பு மருந்துக்கு உலக சுகாதார நிறுவனம் அவசரகால பயன்பாட்டு அனுமதியை வியாழக்கிழமை வழங்கி உள்ளது. இது குறித்து உலக சுகாதார நிறுவனத்தின் அதிகாரி மரியேஞ்சலா சிமாவோ கூறுகையில், இதன் மூலமாக உலக அளவில் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டை உறுதி செய்ய மேலும் ஒரு அடி எடுத்துவைக்கப்பட்டு உள்ளது, என்றார்.

அவசர கால பயன்பாட்டு அனுமதி வழங்கப்பட்டதன் மூலம், பல்வேறு நாடுகளின் மருத்துவ கட்டுப்பாட்டு அமைப்புகள் இந்த மருந்துக்கு ஒப்புதல் அளிக்க வழிவகை செய்யப்பட்டு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த மருந்தை, தேவையான நாடுகளுக்கு வாங்கி, விநியோகிக்க யுனிசெப் மற்றும் அமெரிக்க சுகாதார நிறுவனம் ஈடுபட உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

தடுப்பூசி மருந்துக்கு இருக்க வேண்டிய பாதுகாப்பு மற்றும் திறன் பைசர் தடுப்பூசியில் இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

error: Content is protected !!