AanthaiReporter.Com | Tamil Multimedia News Web ⚡ AMP

உலக நகர்ப்புறவியம் நாள் 2026: திட்டமிடப்பட்ட நகரங்களே நிலையான எதிர்காலம்!

By admin | Nov 08, 2026

சுற்றுச்சூழல் சமநிலை, சமூக நலன் மற்றும் சீரான பயன்பாடு ஆகியவற்றின் அடிப்படையில் நகரங்களை உருவாக்குவது எத்துணை முக்கியம் என்பதை உலகிற்கு உணர்த்தும் நாளே உலக நகர்ப்புறவியம் நாள் ஆகும். ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 8 அன்று சர்வதேச அளவில் அனுசரிக்கப்படும் இந்நாள், நகர்ப்புற மற்றும் பிராந்திய திட்டமிடலின் அவசியத்தை சமுதாயத்திற்கு விரிவாக எடுத்துக்காட்டுகிறது.

வரலாற்று பின்னணி மற்றும் தொடக்கம்

நகர்ப்புற திட்டமிடல் பற்றிய சர்வதேச விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், 1949 ஆம் ஆண்டு அர்ஜென்டினாவின் புவெனஸ் அயர்ஸ் பல்கலைக்கழகப் பேராசிரியர் கார்லோஸ் மரியா டெல்லா பாவோலேரா அவர்களால் இந்நாள் முதன்முதலில் தொடங்கப்பட்டது. தற்கால நகரங்கள் சந்திக்கும் நெரிசல், மாசுபாடு மற்றும் வளப் பற்றாக்குறை போன்ற பிரச்சனைகளுக்கு முறையான திட்டமிடலே சிறந்த தீர்வு என்பதை உலகம் உணர்ந்த தருணம் அதுவாகும்.

உலக நகரங்கள் தினத்திலிருந்து மாறுபட்ட தனித்துவம்

அக்டோபர் 31 அன்று கொண்டாடப்படும் உலக நகரங்கள் தினம் என்பது நகரமயமாக்கலின் பொதுவான அம்சங்களையும், நகர்ப்புற வாழ்க்கையையும் மையமாகக் கொண்டதாகும். ஆனால், நவம்பர் 8 அன்று அனுசரிக்கப்படும் உலக நகர்ப்புறவியம் நாள் முற்றிலும் மாறுபட்டது. இது பிரத்தியேகமாக நகர மற்றும் பிராந்திய திட்டமிடல் துறை, திட்டமிடல் வல்லுநர்கள், கட்டிடக் கலைஞர்கள் மற்றும் கொள்கை வகுப்பாளர்களின் பங்களிப்பை மட்டுமே முதன்மைப்படுத்துகிறது.

2026 ஆம் ஆண்டிற்கான அதிகாரப்பூர்வ கருப்பொருள்

குளோபல் பிளானர்ஸ் நெட்வொர்க் (GPN) அமைப்பினால் அறிவிக்கப்பட்டுள்ள 2026 ஆம் ஆண்டின் 77-வது உலக நகர்ப்புறவியம் நாளுக்கான அதிகாரப்பூர்வ தீம்:

“Great communities are built on planning!”

இதன் தமிழ் வடிவம்: “சிறந்த சமூகங்கள் திட்டமிடலால் உருவாக்கப்படுகின்றன!”

இதன் இணை முழக்கமாக “Together we deliver, together we thrive, together we sustain” என்ற உன்னதக் கருத்தும் முன்மொழியப்பட்டுள்ளது. அதாவது “ஒன்றாக நாம் வழங்குகிறோம், ஒன்றாக நாம் செழிக்கிறோம், ஒன்றாக நாம் நிலைத்திருக்கிறோம்” என்ற நோக்கில் நகரமைப்பின் முக்கியத்துவத்தை இது வலியுறுத்துகிறது.

நகர்ப்புற திட்டமிடலின் முதன்மை நோக்கம்

நவீன உலகத்தில் நகர்ப்புற திட்டமிடல் என்பது வெறும் கட்டிடங்களையும் சாலைகளையும் அமைப்பது மட்டுமன்று. தூய்மையான காற்று, தடையில்லாத குடிநீர் விநியோகம், சிறந்த கழிவு மேலாண்மை, பசுமைப் பகுதிகள் மற்றும் பாதுகாப்பான போக்குவரத்து அமைப்புகளை உருவாக்குவது ஆகும். திட்டமிடப்படாத நகரமயமாக்கல் இயற்கை வளங்களை சீரழிப்பதோடு, வெள்ளம் மற்றும் வெப்ப அலைகள் போன்ற காலநிலை மாற்றத்தின் பாதிப்புகளையும் அதிகரிக்கச் செய்கிறது.

எதிர்கால நகரங்களும் சமூக நலனும்

முறையான நகர திட்டமிடல் மட்டுமே அனைத்து மக்களுக்குமான சமமான வாய்ப்புகளையும் ஆரோக்கியமான வாழ்க்கைச் சூழலையும் உறுதி செய்யும். பசுமை ஆற்றல் பயன்பாடு, திறந்தவெளிப் பூங்காக்கள், எளிய பொதுப் போக்குவரத்து ஆகியவை ஒருங்கிணைக்கப்படும் போது தான் ஒரு நகரம் நிலையான வளர்ச்சிப் பாதையில் பயணிக்க முடியும்.

2026 ஆம் ஆண்டின் உலக நகர்ப்புறவியம் நாளில், சுற்றுப்புறச் சூழலையும் மக்கள் நலனையும் பாதுகாக்கும் தொலைநோக்குத் திட்டமிடலை முன்னெடுக்க நாம் அனைவரும் உறுதியேற்போம்.

நிலவளம் ரெங்கராஜன்