மனித குலத்தின் மிகச்சிறந்த அனுபவங்களில் ஒன்றாகவும், வாழ்வின் சலிப்பூட்டும் சூழலில் இருந்து புத்துணர்ச்சி பெறும் உன்னத வழியாகவும் சுற்றுலா காலங்காலமாகத் திகழ்ந்து வருகிறது. கற்றது கைமளவு, கல்லாதது உலகளவு என்ற பொன்மொழிக்கு ஏற்ப, நாம் வாழும் உலகத்தைப் புரிந்து கொள்ளவும், உலகின் பல்வேறு மூலைகளில் உள்ள கலாச்சாரங்களை நேரில் அனுபவிக்கவும் சுற்றுலா பெரிதும் உதவுகிறது. அன்றாடம் ஓடிக்கொண்டிருக்கும் இயந்திரத்தனமான வாழ்க்கையில் இருந்து விடுபட்டு, மனதிற்கு அமைதியையும் புத்துணர்ச்சியையும் தருவதில் பயணங்களுக்கு எப்போதும் முதலிடம் உண்டு. வெறும் பொழுதுபோக்காகத் தொடங்கி, இன்று உலகப் பொருளாதாரத்தின் முக்கியத் தூண்களில் ஒன்றாக உருவெடுத்துள்ள சுற்றுலாத் துறையானது, நவீன தொழில்நுட்பங்களின் வருகையால் மிகவேகமான மற்றும் வியக்கத்தக்க மாற்றங்களைச் சந்தித்து வருகிறது. தனிமனிதனின் மன அழுத்தத்தைப் போக்குவது தொடங்கி, நாடுகளின் அன்னியச் செலாவணியை உயர்த்துவது மற்றும் பல கோடி பேருக்கு வேலைவாய்ப்புகளை வழங்குவது வரை சுற்றுலாவின் பங்கு அளப்பரியது.
சுற்றுலா தினத்தின் வரலாற்றுப் பின்னணி
மேலே சொன்ன பேராவில் உள்ள காரணத்தை உரத்தக் குரலில் சொல்லவே ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 27 ஆம் தேதி உலக சுற்றுலா தினம் சர்வதேச அளவில் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. சுற்றுலாத் துறையின் சமூக, கலாச்சார, அரசியல் மற்றும் பொருளாதார முக்கியத்துவம் குறித்து உலகளாவிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இத்தினத்தின் மிக முக்கிய நோக்கமாகும். உலக நாடுகளுக்கு இடையே கலாச்சாரப் பரிமாற்றத்தை மேம்படுத்துவதோடு, சுற்றுலாப் பயணிகளுக்குத் தேவையான பாதுகாப்பான மற்றும் உகந்த சூழலை உருவாக்கவும் இந்த நாள் நினைவுகூரப்படுகிறது. ஐக்கிய நாடுகள் உலக சுற்றுலா அமைப்பின் சட்டங்கள் முறையே 1970 ஆம் ஆண்டு செப்டம்பர் 27 ஆம் நாள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நாளை நினைவுகூரும் வகையில், 1980 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 27 ஆம் தேதி உலக சுற்றுலா தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. சர்வதேச அளவில் சுற்றுலாத் துறையின் வளர்ச்சியை ஊக்குவிக்கவும், நாடுகளுக்கு இடையேயான நல்லுறவை வளர்க்கவும் இந்த நாள் ஒரு முக்கிய பாலமாகச் செயல்படுகிறது.
2026 ஆம் ஆண்டிற்கான உலக சுற்றுலாத் தீம்
காலத்திற்கேற்ப சுற்றுலாவின் வடிவமும் அதன் தேவைகளும் மாறிக்கொண்டே இருக்கின்றன. அந்த வகையில், நடப்பாண்டிற்கான உலக சுற்றுலா தினம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, தொழில்நுட்பம் எவ்வாறு பயணங்களை மாற்றியமைக்கிறது என்பதை இது வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. டிஜிட்டல் நிகழ்ச்சி நிரல் மற்றும் செயற்கை நுண்ணறிவு மூலம் சுற்றுலாவை மறுவடிவமைத்தல் என்பதே இந்த ஆண்டின் கருப்பொருளாகும். இந்தத் தீம், நவீன தொழில்நுட்பங்கள் எவ்வாறு பயண அனுபவங்களை எளிமையாக்குவது மற்றும் சுற்றுலாத் துறையை மேம்படுத்துவது என்பதை மையமாகக் கொண்டுள்ளது. செயற்கை நுண்ணறிவு மற்றும் நவீன டிஜிட்டல் கருவிகள் இன்றைய சுற்றுலாத் துறையை முற்றிலும் மாற்றி அமைத்துள்ளன. குறிப்பாக, தனிப்பயனாக்கப்பட்ட பயணத் திட்டங்களை உருவாக்கும் பணியில் ஏஐ தொழில்நுட்பம் பெரிதும் உதவுகிறது. ஒரு பயணியின் விருப்பம், பட்ஜெட் மற்றும் நேரத்திற்கு ஏற்ப சிறந்த இடங்கள், ஹோட்டல்கள் மற்றும் பயண வழிகளை நொடியில் இது பரிந்துரைக்கிறது.
தொழில்நுட்பமும் பயண அனுபவங்களும்
மேலும், மெய்நிகர் சுற்றுலா தொழில்நுட்பம் மூலம் பயணிகள் தாங்கள் செல்ல விரும்பும் வரலாற்றுச் சின்னங்கள் மற்றும் தொலைதூர இடங்களைத் தங்களது இருப்பிடத்திலிருந்தே முப்பரிமாணக் காட்சிகளாகக் கண்டு ரசிக்க முடியும். உலகெங்கிலும் உள்ள சுற்றுலாத் தலங்களில் ஏற்படும் மொழித் தடைகளைத் தகர்க்க நிகழ்நேர மொழிபெயர்ப்பு கருவிகள் பெரிதும் உதவுகின்றன. முன்பதிவுகள், வழிகாட்டிகள் தேடுதல் போன்ற அனைத்துச் சேவைகளும் தற்போது ஸ்மார்ட்போன் செயலிகள் மூலமாக எளிமையாக்கப்பட்டுள்ளன. தொழில்நுட்பங்கள் எவ்வளவோ வளர்ந்திருந்தாலும், சுற்றுலா தரும் உண்மையான மனநிறைவு என்பது மனித உணர்வுகளுடன் ஆழமாகப் பிணைந்துள்ளது. சிறுவயதுப் பள்ளிக் சுற்றுலாக்களின் போது பேருந்துகளில் நண்பர்களுடன் உற்சாகமாகப் பாடிக்கொண்டே சென்ற அந்த இனிய தருணங்களை எவராலும் மறக்க முடியாது. கோடை விடுமுறையில் குடும்பத்தினருடன் ஊட்டி, கொடைக்கானல் அல்லது குற்றாலம் போன்ற மலைப்பிரதேசங்களுக்குச் சென்ற நினைவுகள் எப்போதும் நம் மனதுக்குப் புத்துணர்ச்சி தருபவையாகும். இன்றைய தலைமுறையினர் மன அமைதிக்காகவும், புதிய கலாச்சாரங்களை அறிந்துகொள்வதற்காகவும் தனித்துவமான சோலோ பயணங்களையும் ஆர்வமுடன் மேற்கொண்டு வருகின்றனர்.
பொறுப்பான சுற்றுலாவும் எதிர்காலமும்
இன்றைய டிஜிட்டல் யுகத்தில் சுற்றுலா என்பது ஒரு இடத்திற்குச் சென்று திரும்புவது மட்டுமல்லாமல், அந்த இடத்தின் இயற்கை வளங்களையும் பாரம்பரியத்தையும் பாதுகாப்பதும் அவசியமாகும். பொறுப்பான சுற்றுலாவை ஊக்குவிப்பதன் மூலம் நமது இயற்கையை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்ல முடியும். செயற்கை நுண்ணறிவு மற்றும் டிஜிட்டல் கருவிகளைச் சரியான முறையில் பயன்படுத்தி, உலகத்தை இன்னும் எளிதாகவும், அழகாகவும், பாதுகாப்பாகவும் வலம் வருவோம்.
இனிய உலக சுற்றுலா தின நல்வாழ்த்துகள்!
தமிழ் செல்வன்