உலகளவில் மனிதர்களின் உயிரைப் பறிக்கும் மற்றும் நிரந்தர ஊனத்தை ஏற்படுத்தும் முதன்மை நோய்களில் பக்கவாதம் மிக முக்கியமான இடத்தை வகிக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 29-ஆம் தேதி சர்வதேச பக்கவாத விழிப்புணர்வு தினமாக (World Stroke Day) உலகம் முழுவதும் கடைப்பிடிக்கப்படுகிறது. பக்கவாதம் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தவும், அதன் அறிகுறிகளை முன்கூட்டியே கண்டறிந்து விரைந்து செயல்படுவதன் அவசியத்தை வலியுறுத்தவும் இந்த நாள் ஒதுக்கப்பட்டுள்ளது.
2026-ஆம் ஆண்டின் சர்வதேச பக்கவாத பிரச்சாரத்தின் மையக் கருத்து மற்றும் முழக்கமாக “எவ்ரி மினிட் கவுண்ட்ஸ்” (Every Minute Counts – ஒவ்வொரு நிமிடமும் முக்கியம்) என்பது அறிவிக்கப்பட்டுள்ளது. உலக பக்கவாத அமைப்பு (World Stroke Organization – WSO) வெளியிட்ட தகவல்களின்படி, பக்கவாதத்தின் போது விரயமாகும் ஒவ்வொரு நொடியும் ஒருவரின் வாழ்க்கையை தீர்மானிக்கும் காரணியாக அமைகிறது.
2026-ஆம் ஆண்டின் சிறப்பு மற்றும் “20 குரல்கள்” முயற்சி
2026-ஆம் ஆண்டு உலக பக்கவாத அமைப்பின் விழிப்புணர்வு பிரச்சாரத்திற்கு ஒரு சிறப்புமிக்க மைல்கல்லாக திகழ்கிறது. ஏனெனில், இவ்வாண்டு உலக பக்கவாத பிரச்சாரத்தின் 20-ஆவது ஆண்டு நிறைவு விழாவாக கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு, “20 வாய்ஸஸ் சேஞ்சிங் ஸ்ட்ரோக்” (20 Voices Changing Stroke) எனும் சிறப்பு விழிப்புணர்வு முயற்சி தொடங்கப்பட்டுள்ளது.
இந்த முயற்சியின் கீழ், பக்கவாத பாதிப்பிலிருந்து மீண்டு வந்தவர்கள், மருத்துவ வல்லுநர்கள் மற்றும் பராமரிப்பாளர்களின் 20 நிஜ வாழ்க்கை அனுபவங்களும், அவர்கள் சமூகத்தில் ஏற்படுத்திய நேர்மறை தாக்கங்களும் உலகிற்கு எடுத்துக்காட்டப்படுகின்றன. பக்கவாதம் வந்த பிறகும் சரியான சிகிச்சையினாலும் தன்னம்பிக்கையினாலும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப முடியும் என்பதை இந்த கதைகள் உணர்த்துகின்றன.
பக்கவாதம் என்றால் என்ன? அதன் அபாய அளவு
மூளைக்குச் செல்லும் ரத்த ஓட்டத்தில் அடைப்பு ஏற்படுவதோ அல்லது மூளையில் உள்ள ரத்தக் குழாய் உடைந்து ரத்தக்கசிவு ஏற்படுவதோ பக்கவாதம் (Stroke) எனப்படுகிறது. இதனால் மூளைக்குத் தேவையான ஆக்சிஜன் மற்றும் ஊட்டச்சத்துக்கள் கிடைக்காமல் மூளைச் செல்கள் செயலிழக்கத் தொடங்குகின்றன.
உலகளாவிய புள்ளிவிவரங்களின்படி, உலகில் உள்ள 4 பேரில் ஒருவருக்கு அவர்களின் வாழ்நாளில் ஏதேனும் ஒரு தருணத்தில் பக்கவாதம் ஏற்படுவதற்கான அபாயம் உள்ளது. இது எந்த வயதினருக்கும் வரக்கூடும் என்றாலும், முறையான விழிப்புணர்வு மூலம் பெருமளவிலான பக்கவாத நிகழ்வுகளைத் தடுக்க முடியும்.
நேர இழப்பு மூளை இழப்பு (Time Lost is Brain Lost)
பக்கவாதம் ஏற்பட்ட நபருக்கு சிகிச்சை அளிப்பதில் நேரம் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. மருத்துவ உலகில் “டைம் லாஸ்ட் இஸ் ப்ரெயின் லாஸ்ட்” (தாமதிக்கப்படும் ஒவ்வொரு நிமிடமும் மூளையின் இழப்பு) என்ற பொன்மொழி பயன்படுத்தப்படுகிறது.
பக்கவாதம் ஏற்படும் போது, ஒவ்வொரு நிமிடமும் சுமார் 19 லட்சம் மூளைச் செல்கள் மடிகின்றன. சிகிச்சை அளிப்பதில் தாமதம் ஏற்படும் ஒவ்வொரு மணி நேரமும், மூளையானது சுமார் 3.6 ஆண்டுகள் முதிர்வடைவதற்குச் சமமான சேதத்தைச் சந்திக்கிறது. எனவே, அறிகுறிகள் தென்பட்ட உடனே மருத்துவமனைக்குச் செல்வது மூளைச் சேதத்தைக் குறைத்து, உயிரைக் காப்பாற்ற உதவும்.
ஆபத்தை உணர்த்தும் வேகமான அறிகுறிகள் (#ActFAST)
பக்கவாதத்தின் அறிகுறிகளைச் சாதாரண மக்கள் மிக எளிதாக நினைவில் வைத்துக்கொள்ளவும், உடனடியாகச் செயல்படவும் “ஃபாஸ்ட்” (FAST) என்ற ஆங்கிலக் குறியீடு பயன்படுத்தப்படுகிறது. சர்வதேச பக்கவாத அமைப்பு #ActFAST என்ற ஹேஷ்டேக் மூலம் இந்தச் செய்தியை உலகெங்கும் கொண்டு சேர்க்கிறது.
எஃப் – ஃபேஸ் (Face – முகம்): பாதிக்கப்பட்ட நபரைப் புன்னகைக்கச் சொல்ல வேண்டும். அவருடைய முகத்தின் ஒரு பகுதி கோணலாகவோ அல்லது தொங்கிய நிலையிலோ காணப்படுகிறதா என்பதைச் சரிபார்க்க வேண்டும்.
ஏ – ஆர்ம் (Arm – கை/கால்): பாதிக்கப்பட்ட நபரை இரண்டு கைகளையும் மேலே உயர்த்தச் சொல்ல வேண்டும். ஒரு கை பலவீனமாகி கீழே விழுகிறதா அல்லது உணர்வின்றி இருக்கிறதா என்பதை கவனிக்க வேண்டும்.
எஸ் – ஸ்பீச் (Speech – பேச்சு): ஒரு எளிய வாக்கியத்தைப் பேசச் சொல்ல வேண்டும். அவருடைய பேச்சு தடுமாறுகிறதா, குழப்பமாக இருக்கிறதா அல்லது மற்றவர் பேசுவதைப் புரிந்துகொள்வதில் சிரமம் உள்ளதா என்பதைப் பார்க்க வேண்டும்.
டி – டைம் (Time – நேரம்): மேற்கண்ட அறிகுறிகளில் ஏதேனும் ஒன்றைக்கண்டாலும், சிறிதும் தாமதிக்காமல் உடனடியாக அவசர மருத்துவ உதவிக்கு அழைக்க வேண்டும் அல்லது பக்கவாதத்திற்கு அவசர சிகிச்சை அளிக்கும் வசதி கொண்ட அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும்.
பக்கவாதத்தைத் தடுக்கும் வழிமுறைகள்
பெரும்பாலான பக்கவாத பாதிப்புகளைச் சில எளிய வாழ்வியல் மாற்றங்கள் மூலம் தடுக்க முடியும்:
* ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்தல்.
* நீரிழிவு நோய் மற்றும் கொலஸ்ட்ரால் அளவை தொடர் பரிசோதனை மூலம் பராமரித்தல்.
* புகைபிடித்தல் மற்றும் மதுப்பழக்கத்தைக் முழுமையாகத் தவிர்த்தல்.
* தினசரி உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தைப் பின்பற்றுத்தல்.
* உடல் எடையைச் சீராக வைத்திருத்தல்.
மொத்தத்தில் பக்கவாதம் என்பது திடீரெனத் தாக்கும் ஒரு அவசர மருத்துவ நிலை. அதை எதிர்கொள்ள வீண் பயமோ அலட்சியமோ கூடாது; விழிப்புணர்வும் உடனடி செயல்பாடே தேவை. “ஒவ்வொரு நிமிடமும் முக்கியம்” என்பதை மனதில் கொண்டு, பக்கவாத அறிகுறிகளை முன்கூட்டியே கண்டறிந்து #ActFAST கொள்கையைப் பின்பற்றுவோம். பக்கவாதம் இல்லாத ஆரோக்கியமான உலகத்தை உருவாக்க அனைவரும் இணைந்து விழிப்புணர்வைப் பரப்புவோம்.
வாத்தீ அகஸ்தீஸ்வரன்