மனித உடலின் தன்னாட்சி இயங்குமுறைகளில் தைராய்டு சுரப்பியின் பங்கு முதன்மையானது. தொண்டைப் பகுதியில் அமைந்துள்ள இந்தச் சிறிய சுரப்பி, தைராக்ஸின் (T4) மற்றும் டிரைஅயோடோதைரோனின் (T3) ஆகிய இரு அத்தியாவசிய ஹார்மோன்களைச் சுரப்பதற்கு அயோடின் என்னும் நுண்ணூட்டச் சத்து அடிப்படைத் தேவையாக உள்ளது. மனித உடலால் அயோடினைத் தாமாக உற்பத்தி செய்ய முடியாது என்பதால், அது உட்கொள்ளும் உணவு மற்றும் நீர் வழியே பெறப்பட வேண்டும்.
புவிப்பரப்பின் பெரும்பாலான பகுதிகள், குறிப்பாகப் பெருவெள்ளப் பெருக்குக்கு உட்படும் சமவெளிகள் மற்றும் பனிப்பாறை உறைவிடங்களாக இருந்த மலைப்பகுதிகளின் மண் அடுக்கில் உள்ள அயோடின் சத்து மழையினாலும் வெள்ளத்தினாலும் அடித்துச் செல்லப்பட்டு விடுகிறது. இதனால் அங்கு விளையும் தாவரங்களிலும், அதை நம்பி வாழும் உயிரினங்களின் உடலிலும் அயோடின் பற்றாக்குறை இயல்பாகவே உருவாகிறது. இதனை அறிவியல் உலகம் ‘அயோடின் குறைபாட்டு மண்டலங்கள்’ என வரையறுக்கிறது.
அயோடின் கண்டுபிடிப்பும் வரலாற்றுப் பின்னணியும்
1811 ஆம் ஆண்டு பிரெஞ்சு வேதியியலாளர் பெர்னார்ட் கோர்டோயிஸ் (Bernard Courtois) பிரெஞ்சு கடற்படைக்காக வெடிமருந்து தயாரிக்கத் தேவையான பொட்டாசியம் நைட்ரேட்டைப் பிரித்தெடுக்கும் ஆய்வில் ஈடுபட்டிருந்தார். கடல் பாசிகளின் சாம்பலைச் செறிவூட்ட அடர் கந்தக அமிலத்தைச் சேர்த்தபோது, எதிர்பாராத விதமாக அடர் ஊதா நிறப் புகை வெளிப்பட்டது. அது குளிர்ந்தபோது ஊதா நிறப் படிகங்களாக மாறியது. கிரேக்க மொழியில் ‘ஐயோட்ஸ்’ (Iodes) என்றால் ஊதா நிறம் என்று பொருள். இதன் அடிப்படையிலேயே இதற்கு அயோடின் எனப் பெயரிடப்பட்டது.
பத்தொன்பதாம் நூற்றாண்டின் மத்தியில், சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த மருத்துவர் காஸ்பர் அடோல்ஃப் சாட்டின் (Gaspard Adolphe Chatin) என்பவர், முன்கழுத்து கழலை (Goiter) நோய் அதிகமாகக் காணப்படும் பகுதிகளில் வாழும் மக்களின் குடிநீரிலும் மண்ணிலும் அயோடின் அளவு குறைவாக இருப்பதை முதன்முதலில் கண்டுபிடித்து, இந்த நோய்க்கும் அயோடின் பற்றாக்குறைக்கும் உள்ள தொடர்பை உலகிற்கு வெளிப்படுத்தினார்.
உடலியல் தாக்கமும் அயோடின் குறைபாட்டுக் கோளாறுகளின் வீச்சும்
அயோடின் பற்றாக்குறை என்பது வெறும் முன்கழுத்து கழலை வீக்கத்துடன் முடிந்துவிடுவதில்லை. அது மனித வாழ்நாளின் ஒவ்வொரு கட்டத்திலும் வெவ்வேறு தீவிரமான உடலியல் சிக்கல்களை உருவாக்குகிறது. மருத்துவ அறிவியல் இதனை ‘அயோடின் குறைபாட்டுக் கோளாறுகள்’ (Iodine Deficiency Disorders – IDD) என்ற பரந்த கருத்தாக்கத்தின் கீழ் வகைப்படுத்துகிறது.
கருவறை வளர்ச்சி மற்றும் நரம்பியல் பாதிப்பு:
கருவுற்ற பெண்களின் உடலில் அயோடின் பற்றாக்குறை ஏற்படும் போது, அது கருவின் மூளை வளர்ச்சியை நேரடியாகப் பாதிக்கின்றது. இதன் மிகக் கடுமையான வடிவமே ‘கிரெட்டினிசம்’ (Cretinism) எனப்படும் நரம்பியல் மற்றும் உடலியல் வளர்ச்சி முடக்கம் ஆகும். இந்நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்குத் தீவிர மனவளர்ச்சிக்குறைவு, காது கேளாமை, தசை இறுக்கம் மற்றும் குள்ளத்தன்மை ஆகியவை ஏற்படுகின்றன.
வளர்ச்சிதை மாற்றச் சீர்குலைவு:
முதியவர்கள் மற்றும் நடுத்தர வயதினருக்கு அயோடின் குறையும் போது தைராய்டு சுரப்பி போதிய ஹார்மோன்களைச் சுரக்க முடியாமல் ‘ஹைபோதைராய்டிசம்’ (Hypothyroidism) நிலைக்குத் தள்ளப்படுகிறது. இதனால் உடலின் வளர்ச்சிதை மாற்றம் (Metabolism) மந்தமடைந்து நாள்பட்ட சோர்வு, உடல் எடை அதீத உயர்வு, தீவிர மன அழுத்தம், தோல் வறட்சி மற்றும் இதயத் துடிப்பு சீரற்ற நிலை போன்றவை உருவாகின்றன.
உலகளாவிய பொது சுகாதார உத்தியும் உப்பு அயோடினேற்றமும்
20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சுவிட்சர்லாந்து மற்றும் அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலத்தில் மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வுகள், அன்றாடம் பயன்படுத்தும் சமையல் உப்பில் அயோடினைச் சேர்ப்பதன் மூலம் முன்கழுத்து கழலையைக் கட்டுப்படுத்த முடியும் என்பதை நிருபித்தன.
உப்பு ஏன் தேர்ந்தெடுக்கப்பட்டது?
சமூகத்தின் அனைத்துத் தரப்பு மக்களாலும், அனைத்துக் காலநிலைகளிலும், ஏறத்தாழ ஒரே அளவில் தினமும் உட்கொள்ளப்படும் ஒரே உணவுப் பொருள் உப்பு மட்டுமே. மேலும் உப்பில் அயோடினைச் சேர்ப்பது மிகவும் செலவு குறைந்த மற்றும் எளிமையான தொழில்நுட்ப முறை என்பதால் உலக சுகாதார நிறுவனம் (WHO) மற்றும் யுனிசெப் (UNICEF) ஆகிய அமைப்புகள் இதனை உலகளாவிய உத்தியாக ஏற்றுக்கொண்டன.
பொட்டாசியம் அயோடேட் (Potassium Iodate) வடிவில் உப்பில் சேர்க்கப்படும் அயோடின், ஈரப்பதம் மற்றும் சூரிய ஒளிக்கு ஆட்படும் போது ஆவியாகும் தன்மையுடையது. எனவேதான் அயோடின் கலந்த உப்பைக் காற்றுப்புகாத, இருண்ட கலன்களில் சேமித்து வைக்க வேண்டியது அவசியமாகிறது.
தொழில்நுட்பப் புரட்சியும் இன்றைய நிலையும்
அக்டோபர் 21 உலக அயோடின் குறைபாட்டுக் கோளாறுகள் தடுப்பு தினமாக அறிவிக்கப்பட்டதன் நோக்கம், அயோடின் பற்றாக்குறையால் உருவாகும் தவிர்க்கக்கூடிய மூளைச் சேதங்களை உலக அளவில் முற்றிலுமாக ஒழிப்பதாகும். 1990-களில் உலகளவில் வெறும் 20 சதவீத வீடுகளே அயோடின் கலந்த உப்பைப் பயன்படுத்தி வந்த நிலையில், தீவிர பொது சுகாதாரப் பிரச்சாரங்களின் விளைவாக இன்று அது 80 சதவீதத்திற்கும் அதிகமான நிலையை எட்டியுள்ளது.
இருப்பினும், தற்காலத்தில் பதப்படுத்தப்பட்ட உணவுகளின் அதிகப்படியான பயன்பாடு, அயோடின் கலக்கப்படாத பாறை உப்பு (Rock salt / Pink salt) பயன்பாட்டின் திடீர் அதிகரிப்பு மற்றும் முறையான சேமிப்புப் பழக்கமின்மை காரணமாகச் சில பகுதிகளில் மீண்டும் அயோடின் குறைபாடு தலைதூக்குவது மருத்துவ உலகிற்குப் புதிய சவாலாக உருவெடுத்துள்ளது.
நிலவளம் ரெங்கராஜன்