AanthaiReporter.Com | Tamil Multimedia News Web ⚡ AMP

டப்பிங் மயமாகி விட்ட நம்மூர் சேனல்களில் தமிழுக்கு மதிப்பில்லாமல் போனது! ஏன்? ஏன்? ஏன்? – மினி அலசல்

By admin | Aug 08, 2016

முப்பது வருஷங்களுக்கு முன்னால் வரை மகாபாரதம், ராமாயணம் போன்ற இதிகாச தொடர்களை மட்டுமே டப் செய்து ஒளிபரப்பிய பிரபல தொலைக்காட்சி தற்போது நாகினி என்ற டப் செய்யப்பட்ட புதிய நெடுந்தொடரை ஒளிபரப்ப ஆரம்பித்துள்ளது. ஏற்கெனவே பல முன்னணி தொலைக்காட்சிகள் டப்பிங் சீரியல்களில் கொடிகட்டி பறக்கின்றன. இந்நிலையில் இந்த பிரபல தொலைக்காட்சியும் டப்பிங் சீரியல்களுக்கு மாறியுள்ளது. இத்தனைக்கும் தமிழக சின்னத்திரை நடிகர் சங்க தலைவராக நளினி தேர்ந்தெடுக்கப்பட்டபோது, டப்பிங் சீரியலை எதிர்த்து போராட்டம் நடத்தப்படும் என அறிவித்தார். மேலும் கடந்த அண்டு துளசி, பயணம், பந்தம், உறவுகள், அரசி, காயத்ரி, புகுந்த வீடு, செல்வி, ரோஜா உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட நெடுந்தொடர்களை இயக்கிய பாலாஜி யாதவ். அழகான வாழ்க்கை, புது வீடு, என சந்தோஷமாய் வாழ்ந்தவர் தன் வாழ்வின் பொக்கிஷமாய் தத்தெடுத்த குழந்தையையும், அதன் உரிமையாளரிடமே கொடுத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். இவரது இந்த திடீர் முடிவுக்கு காரணமாக சொல்லப்படுவது சீரியலில் வாய்ப்பில்லை என்பதும், அதனால் ஏற்பட்ட கடன் பிரச்சனைகளும்தான். இதை கவனத்தில் கொண்டு சின்னத்திரை கலைஞர்கள் சீரியஸாக ஒரு சின்ன அப்செட் + ஆவேசக் கூட்டம் போட்டு விட்டு முடங்கி போனார்கள்.

இது குறித்து நம்மிடம் பேசிய தூர்தர்ஷன் ரிப்போர்ட்டர் ஒருவர், “90களில் ஒன் அண்ட் ஒன்லியாக இருந்த டி. டி.யில் நாடகங்கள் தொடர்களாக ஒளிபரப்பாயின. வாரம் தோறும் அல்லது வாரம் இருமுறை என்ற அமைப்பிலும் 13 வாரத்தொடர் என்ற அமைப்பிலும் வெளிவந்தன. பெரும்பாலும் அவை தூர்தர்சன் ஸ்டூடியோவுக்குளேயே மிகக் குறைந்த செலவில் எடுக்கப்பட்டவைதான். ஒருவிதத்தில் அவை “வீட்டுக்குள் அரங்கேறிய மேடைநாடகங்கள்” என்ற அளவில் இருந்தன. அவற்றால் மக்கள் திரைப்படத்திலிருந்து கொஞ்சம் மனசை மாற்றி கொண்டார்கள்.

பின்னர் 1993 முதல் டப்பிங் தொடர்கள் வர ஆரம்பித்தன. முதல் மெகா சீரியலான சாந்தி (தூர்தர்ஷன்) மிகப் பெரிய வரவேற்பு பெற்றது. தொடர்ந்து ஷோபா டே எழுதிய ஸ்வாபிமான் சுயமரியாதை என்ற பெயரில் பெரிய ஹிட் ஆனது. ஜுனூன் பத்திரிகைகளால் வாரப்பட்டாலும் பெரிய வெற்றி. அப்போது தூர்தர்ஷனில் இரவு 9 முதல் தொடர்ச்சியாகப் பல தமிழாக்கத் தொடர்கள் வரும். சுஜாதா கூட கணையாழியின் கடைசிப் பக்கங்களில் இவை பற்றி எழுதினார். மேலும் 2000 வாக்கில் சன் டி வி உள்ளிட்ட சேனல்களில் நாடகங்கள் திரைப்படத் தரத்தில் பெருந்தொடராக (மெகா சீரியல்) நாள்தோறும் வெளிவரத் தொடங்கின. அப்போது கூட பிறமொழி நாடகங்கள் தரமற்ற மொழிபெயர்ப்பில் வெளிவந்தன. ஆதலால், அவற்றை மக்கள் வரவேற்கவில்லை. அதேவேளையில் தமிழ் மெகா சீரியர்கள் தரமுடன் தயாரிக்கப்பட்டன. வெளிப்புறப் படப்பிடிப்பு, தெளிவான ஒளி-ஒலி, பெண்களின் குடும்பப் போராட்டங்களை மையப்படுத்திய கதையமைப்பு, பாடல்கள், சண்டைக் காட்சிகள் என அவை தம்மைத் திரைப்படங்கள் போலவே பாவித்துக்கொண்டன. அதில் மனத்தைப் பறிகொடுத்தத் தமிழ்ப் பெண்கள் அவற்றைத் “தொடர்த் திரைப்படங்கள்” என்று கருதிக் கண்டு களித்தார்கள்.

பின்னர் 2010களில் பிறமொழி மெகா சீரியல்கள் தமிழில் தரமாக மொழியாக்கம் செய்யப்பட்டு வெளிவரத்தொடங்கின. குறிப்பாக ஹிந்திமொழி மெகா சீரியல்கள் பல 2013இன் தொடக்கத்தில் தமிழ் மொழியாக்கத்தில் வெளிவரத் தொடங்கின. அவற்றின் தரம் தமிழ்ப் பெண்களைத் தமிழ் மெகா சீரியல்களுக்கு இணையாக ரசிக்கும் அளவுக்குச் செய்துள்ளன.
70களிலிருந்து தமிழர்கள் தமிழ்ப் படங்களுக்கு இணையான வரவேற்பை ஹிந்திப் படங்களுக்கும் வழங்கிவருகின்றனர். அதைப் போலவே தமிழ்ப் பெண்கள் தமிழில் டப்பிங் செய்து ஒளிபரப்பப்படும் ஹிந்தி மெகா சீரியர்களுக்கும் இப்போது வரவேற்பு அளிக்கின்றனர்” என்றார்.

இதே டப்பிங் சீரியல் சீரியஸ் பற்றி இயக்குநரும், இணைய விமரிசகருமான கேபிள் சங்கர், ”சினிமா தியேட்டர்களுக்கு பெண்களின் வரத்து குறைந்த காரணம் டிவி சீரியல் என்று சினிமாக்காரர்கள் சொல்வார்கள். கிட்டத்தட்ட அது உண்மையும் கூட. பெண்களுக்கு விருப்பமான கதைகள் தொலைக்காட்சியிலேயே வருவதால் சினிமாவிற்கு போவது குறையத்தான் செய்தது. திரைப்படம் தயாரித்த நிறுவனமெல்லாம் சீரியல் தயாரிக்க வந்து பெரும் லாபம் சம்பாதித்து வந்த காலமெல்லாம் கூட உண்டு. அப்ப இப்போதெல்லாம் சீரியல்கள் லாபமில்லையா? என்று கேட்டீர்களானால் இல்லை என்று குரலும் எங்க எங்களை சீரியல் எடுக்க விடுறாங்க என்கிற புலம்பலைத்தான் கேட்க முடிகிறது. புலம்பல் போராட்டமாய் வெடிக்க ஆரம்பித்திருக்கிறது. விகடன், ராடன், திருமுருகன் போன்றவர்கள் தொடர்ந்து சீரியல் எடுத்து நன்றாக சம்பாதித்துக் கொண்டுதானேயிருக்கிறார்கள். எல்லா டிவிக்களிலும் மாலையிலிருந்து இரவு வரை ஏதேனும் ஒரு சீரியல் போய்க் கொண்டுதானேயிருக்கிறது பிறகென்ன? என்று கேட்கிறீர்களா? அங்கே தான்  பிரச்சனையே ஆரம்பம்.

இன்றளவில் தமிழ் சீரியல்களின் மகாராஜா என்றால் அது சன் டிவிதான். என்னதான் இப்போது போட்டிக்கு நிறைய சேனல்கள் வந்திருந்தாலும், அதனுடய ஜி.ஆர்.பி குறைந்திருந்தாலும் தமிழ் சீரியல்களில் அதிகப் பட்ச டி.ஆர்.பியை தக்க வைத்துக் கொண்டிருப்பதில் நம்பர் ஒன் சன். சன்னில் ஸ்லாட் கிடைப்பது என்பது அப்படியொன்றும் சாதாரண விஷயம் கிடையாது. ஒவ்வொரு அரை மணிநேரத்தையும் விலைக்கு வாங்கித்தான் சீரியல் தயாரிக்க வேண்டும், பின்பு அதை மார்கெட் செய்ய வேண்டும், லாபம் சம்பாதிக்க வேண்டும்.இவர்களின் சீரியல்களுக்கு பிறகு விஜய் டிவி சீரியல்கள் சிலதைத் தவிர, வேறெந்த சேனலில் சீரியல் போட்டாலும் செல்ப் எடுக்காமல் போனதால் என்ன செய்வது என்று முழி பிதுங்கிக் கொண்டிருந்தனர் சேனல் வட்டாரம். குறைந்தபட்சம் ஒரு எபிசோடுக்கு 50 ஆயிரமாவது செலவு செய்தால் தான் ஓரளவுக்கு குவாலிட்டியான சீரியலை செய்ய முடியும். ஆனால் செலவு செய்யும் காசுக்கு சேனலே வெளியாருக்கு பணம் கொடுத்து தயாரித்து வாங்கிய சீரியல்களை சன்னின் சீரியலுக்கு போட்டியாய் மார்கெட் செய்ய முடியாமல் அரைகுறையாய் முடித்துவிட வேண்டிய கட்டாயம் எல்லாம் சிறு சேனல்களுக்கும் வர ஆரம்பித்தது. மாலை நேரத்தில் மக்களுக்கு சீரியல் தான் பெரும் டி.ஆர்.பி எனும் பட்சத்தில் சீரியல் போடாமல் இருந்தால் கிடைக்கிற டி.ஆர்.பியும் போய் விடும் அபாயம் இருப்பதால் ஏதாவது செய்தே ஆக வேண்டிய கட்டாயம். யோசித்தனர் சிறு சேனல் தயாரிப்பாளர்கள்.

சின்ன கல்லு பெத்த லாபம் என்ற தாரக மந்திரத்தை வைத்து அவர்கள் செய்த ஐடியாத்தான் டப்பிங் சீரியல்கள். தெலுங்கிலிருந்து தமிழில் ஆரம்பித்தார்கள். பின்பு கொஞ்சம் கொஞ்சமாய் மலையாள ஐய்யப்ப சீரியல்கள் மாலை நேர டி.ஆர்பியை பிடிக்க, ஏன் நாம் ஹிந்தி சீரியல்களை விலைக்கு வாங்கி டப் செய்து ஒளிபரப்பக்கூடாது என்று யோசனையில் கலர்ஸ் போன்ற சேனல்களில் வெளியாகி ஹிட்டத்துக் கொண்டிருக்கும் சீரியல்களை சல்லீசான விலையில் வாங்கி டப்பிங் செய்து ஒளிபரப்ப ஆரம்பித்தார்கள். உதாரணமாய் ராஜ் டிவியில் சிந்து பைரவி என்கிற ஹிந்தி டப்பிங் சீரியல் மாலை நேர ப்ரைம் டைமில் நல்ல ரேட்டிங்கைப் பெற மற்ற சேனல்களும் அதையே பின்பற்ற ஆரம்பித்தது.

பாலிமர், ஜீதமிழ், போன்ற சேனல்களுக்கு இப்போது நல்ல டி.ஆர்.பி தருவது இந்தி டப்பிங் சீரியல்களே. நல்ல ரிச்சான அட்மாஸ்பியர். பெரிய பட்ஜெட், அழகழகான நடிகைகள். நல்ல குவாலிட்டியான மேக்கிங் எல்லாம் ப்ளான் செய்தால் கூட நம் தமிழ் மொழியில் இந்த தரத்தை, பட்ஜெட்டை கொடுக்க முடியாது என்பதினால் சேனல்கள் நேரடி தமிழ் சீரியல்களை தயாரிப்பதற்கு பதிலாய் டப்பிங் சீரியல்களுக்கு தங்கள் பச்சைக் கொடியை காட்ட ஆரம்பித்தார்கள். இங்கேதான் பிரச்சனை ஆரம்பமாகியது.

சில வருடங்களுக்கு முன்னால் சென்னையில் கிட்டத்தட்ட நூற்றுக்கும் மேற்பட்ட சீரியல்கள் தயாரித்துக் கொண்டிருந்தார்கள். அத்துனை சேனல்களிலும் ரெண்டு டெய்லி சீரியலாவது தயாரித்துக் கொண்டிருக்க, நடிக்க ஆர்வமாயிருக்கும் நடிக, நடிகைகள், எழுத்தாளர்கள், டெக்னீஷியன்கள், இயக்குனர்களுக்கு எல்லாம் அவர்களின் கனவு நினைவாகும் வாய்ப்பாக அமைந்திருந்தது.ஆனால் இந்த டப்பிங் சீரியல்களின் வரவால் இவர்களுக்கான வேலை வாய்ப்பு போனது. மாதம் பத்தாயிரம் ரூபாய் வரை சம்பாதித்துக் கொண்டிருந்த சிறு சிறு கேரக்டர்கள் நடிக்கும் நடிகர்கள் எல்லாம் வாய்ப்பு இல்லாமல் மீண்டும் வறுமை நிலைக்கு சென்று விட்டார்கள். அங்கே இங்கே கஷ்டப்பட்டு எடிட் சூட் போட்டு ரெண்டு சீரியல் கையில் இருந்தால் பொழைச்சுக்கலாம் என்ற தொழில் நடத்திக் கொண்டிருந்த எடிட் சூட்டெல்லாம் இழுத்து மூடப்பட்டது.

இப்படி தமிழ் டிவி சீரியல் உலகமே கிட்டத்தட்ட ஆட்டத்தை மூடிவிட,நூற்றுக் கணக்கில் தயாரிக்கப்பட்டுக் கொண்டிருந்த சீரியல்கள் இன்றைக்கு மொத்தமாய் முப்பது நிகழ்ச்சிகளுக்கு மேல் தயாரிப்பில் இருந்தால் அதிசயம்தான். அதிலும் தற்போதைய ரியாலிட்டி ஷோக்களில் இன்வெஸ்ட் செய்தால் சீரியலை விட லாபம் அதிகமாகவும், இரண்டு சீரியல்கள் போடும் நேரத்தில் ஒரு ரியாலிட்டி நிகழ்ச்சி என்று போட்டால் டி.ஆர்.பிக்கு டி.ஆர்பியும் ஆச்சு. செலவும் குறைத்தாகிவிட்டது என்று நினைக்க ஆரம்பித்தது சீரியல் உலகம்.

சீரியல் தயாரிப்பு என்பது ஒரு கட்டத்தில் குடிசை தொழில் போன்ற நிலையில் இருக்க, ஒரு லட்சம் ரூபாய் பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட சீரியல்கள் எல்லாம் சன்னின் சீரியல் டி.ஆர்.பியோடு போட்டி போட முடியாமல் பட்ஜெட்டை குறைக்க ஆரம்பிக்க,கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாய் சீரியல்களின் தரமும் குறைய ஆர்மபித்தது. அதனால் பார்வையாளர்கள் குறைய ஆரமபித்தார்கள்.” என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் மொழிமாற்று தொடர்களால் தமிழ் தொலைக்காட்சியை நம்பி வாழும் சின்னத்திரை கலைஞர்கள் பெரிதும் பாதிக்கப்படுவதை தடுக்க அறவழி விழிப்புணர்ச்சி போராட்டம் வரும் ஆகஸ்ட் 14ம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறவிருக்கிறதாம்.

இதுகுறித்து சின்னத்திரை சங்க தலைவர் தளபதி பேசுகையில், அன்று முதல் இன்று வரை சின்னத்திரை சீரியல்களை விரும்பி பார்ப்பதே பெண்கள்தான் அவர்கள் தற்போது இந்தி சீரியல்களில் வரும் பெண்களின் ஆடைகள் முதல் அணிகலன்கள் வரை அனைத்தையும் ரசிக்க ஆரம்பித்துவிட்டார்கள். அவர்களின் ரசனை நம் கலாச்சாரத்தைவிட்டு எங்கேயோ சென்று கொண்டிருக்கிறது. நம் கலாச்சாரத்தை நாம் தான் காப்பாற்ற வேண்டும். இதனை வலியுறுத்தும் வகையில் கையெழுத்து வேட்டையும் நடத்தவிருக்கிறோம். சின்னத்திரை முதல் பெரிய திரை வரை உள்ள அனைத்து சங்கங்களில் உள்ள அனைத்து உறுப்பினர்கள் வரை அனைவரிடமும் கையெழுத்து வாங்கி அதை மாண்புமிகு அம்மா அவர்களிடம் கொடுக்க திட்டமிட்டுள்ளோம்” என்றார்

துண்டு செய்தி:

ஹிந்தியில் நம் பட்ஜெட் சீரியல்களை டப்பிங்கில் வெளியிட முடியாது. அதற்கு அங்கே வியாபார வாய்ப்பேயில்லை. அதே போல மலையாளத்தில் தமிழ் சீரியல்களை டப் செய்து வெளியிட்டால் கலாச்சார ரீதியாகவே செட்டாகாது என்பதால் அதுவும் வேலைக்காகவில்லை. கன்னடத்தில் கடந்த 28 ஆண்டுகளுக்கு மேலாய் டப்பிங் சீரியல்களுக்கு அனுமதி கிடையாது. நேரடியாய்த்தான் எடுத்து ஆக வேண்டும்.