AanthaiReporter.Com | Tamil Multimedia News Web ⚡ AMP

’விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’-விமர்சனம்!

By admin | Aug 15, 2026

திரைக்கதை அமைப்பில் வழக்கமான ஆக்ஷன் பாதையை விடுத்து, குடும்பங்கள் கொண்டாடும் உணர்வுபூர்வமான பாதையைத் தேர்ந்தெடுத்ததற்காகவே நடிகராகச் சூர்யாவை முதலில் மனதாரப் பாராட்டலாம். இயக்குநர் வெங்கி அட்லுரி இயக்கத்தில் வெளியாகியுள்ள ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ திரைப்படம், வயது வித்தியாசம் கொண்ட காதல் மற்றும் குடும்ப உறவுகளுக்குள் இருக்கும் சிக்கல்களை எந்தவித முகம்சுளிப்பும் இன்றி மிக இயல்பாகவும் அழகாகவும் கையாண்டு வெற்றி பெற்றுள்ளது.

கதைக்களம்

சஞ்சய் விஸ்வநாத் (சூர்யா) சிறுவயதில் பெற்றோர் பிரிவால் ஏற்பட்ட கசப்பான அனுபவத்தால் திருமண அமைப்பின் மீது நம்பிக்கையற்ற ஒரு தொழிலதிபர். வாரிசு வேண்டும் என்ற தாயின் (ராதிகா) ஏக்கம் தாங்காமல், அமெரிக்காவில் வாடகைத்தாய் முறை மூலம் ஒரு குழந்தையைப் பெறுகிறார். ஆனால், பிறந்த குழந்தைக்கு ஏற்படும் மருத்துவப் பிரச்சனை சஞ்சயின் வாழ்க்கையை தலைகீழாக மாற்றுகிறது.

குழந்தையைக் காப்பாற்ற வாடகைத்தாயான பிரேமாவை (மமிதா பைஜு) நாட வேண்டிய கட்டாயம் சஞ்சய்க்கு ஏற்படுகிறது. பணத்திற்காக இந்த ஒப்பந்தத்திற்கு சம்மதித்த இளம் பெண் பிரேமா, குழந்தையின் நிலை அறிந்து சஞ்சயுடன் பயணிக்கிறார். அந்தப் பயணத்தில் குழந்தையோடு சேர்த்து, தன்னை விட 20 வயது மூத்த சஞ்சய் மீதும் காதல் கொள்கிறார். இந்த வயது வித்தியாசக் காதலையும், குடும்பக் சூழலையும் சஞ்சய் எப்படி எதிர்கொள்கிறார் என்பதை மேல்தட்டு மனிதர்களின் உணர்வுப்பூர்வ நாடகமாகப் படம் பேசுகிறது.

நடிப்பு மற்றும் கதாபாத்திரங்கள்

முதல் பாதியில் அமைதியாக வந்து செல்லும் சூர்யா, இடைவேளைக்குப் பிறகான காட்சிகளில் தனது முதிர்ச்சியான நடிப்பால் அசத்துகிறார். குறிப்பாகக் குழந்தையின் உயிருக்குப் போராடும் காட்சிகளிலும், எமோஷனல் தருணங்களிலும் தனது அனுபவமிக்க நடிப்பைக் கொடுத்து படத்தின் தரத்தை உயர்த்தியுள்ளார். ஒரு தொழிலதிபராகவும், தந்தையாகவும் சூர்யாவின் பரிமாணம் ரசிக்கும்படியாக உள்ளது.

நாயகி மமிதா பைஜு படத்திற்குப் மிகப்பெரிய பலம். துருதுறுப்பான இளம்பெண்ணாக, எதையும் நேரடியாகப் பேசும் தைரியமான கதாபாத்திரத்தில் ரசிகர்களின் மனதை உடனடியாகக் கவர்கிறார். 20 வயது வித்தியாசத்தைக் கடந்து அவர் வெளிப்படுத்தும் தீவிரமான காதல் உணர்வுகளும், ராதிகாவுடனான இயல்பான கொஞ்சல்களும் திரையரங்கில் கைதட்டல் பெறுகின்றன.

அம்மாவாக வரும் ராதிகா, எமோஷன் மற்றும் நகைச்சுவை இரண்டையும் சரிவிகிதத்தில் கலந்து டாப் ஸ்கோர் செய்துள்ளார். ராஜீவ் மேனன், ரவீனா டாண்டன், நாசர் மற்றும் காளி வெங்கட் ஆகியோர் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பாத்திரங்களை நிறைவாகச் செய்துள்ளனர்.

தொழில்நுட்பக் குழுவின் பலம்

ஜி.வி. பிரகாஷ் குமாரின் மெல்லிய மெலடி பாடல்களும், காட்சிகளுக்கு ஏற்ப அமைந்த பின்னணி இசையும் கதையின் உணர்வை அழகாகக் கடத்துகின்றன. ஒளிப்பதிவாளர் நிமிஷ் ரவியின் ஒவ்வொரு கோணமும் படத்திற்குப் பிரம்மாண்டமான தோற்றத்தையும் ஸ்டைலிஷான அமைப்பையும் தருகிறது. நவீன் நூலியின் படத்தொகுப்பு எமோஷனல் காட்சிகளுக்குத் தேவையான இடைவெளியை அளித்து ரசிக்க வைக்கிறது.

நிறை குறைகள்

சீரியஸான கருப்பொருளாக இருந்தாலும், படம் முழுவதும் தூவப்பட்டுள்ள நகைச்சுவைக் காட்சிகள் எங்கேஜிங்காக நகர்கின்றன. “நம்ம லட்சியத்துக்காகவும், கனவுக்காகவும் எதை வேணும்னாலும் இழக்கலாம். ஆனா எதற்காகவும் இலட்சியத்தையும், கனவையும் விட்டுத்தரக்கூடாது” என்பது போன்ற வாழ்க்கையின் தத்துவங்களை விளக்கும் கூர்மையான வசனங்கள் படத்தின் கூடுதல் பலம்.

முதல் பாதியில் இருந்த சுவாரஸ்யமும் வேகமும் இரண்டாம் பாதியில் சற்று குறைவதைப் போலத் தோன்றினாலும், வன்முறையோ ஆபாசமோ இல்லாத தூய்மையான குடும்ப நாடகமாக இப்படம் மிளிர்கிறது.

மொத்தத்தில் குடும்பத்தோடு திரையரங்கிற்குச் சென்று மனதார ரசித்து வரக்கூடிய ஒரு அழகான, இனிமையான திரைப் படைப்பு!

மார்க் 4/5