தெலுங்கில் நடிகர் விஜய்தேவரகொண்டா நடிப்பில் வெளியாகி ஹிட் அடித்த அர்ஜூன் ரெட்டி படத்தை இயக்குநர் பாலா தமிழில் ரீமேக் செய்துள்ளார். இந்தப் படத்தின் மூலம் நடிகர் விக்ரமின் மகன் துருவ் சினிமாவில் நடிகராக அறிமுகமாகிறார். துருவ் விக்ரமுக்கு ஜோடியாக வங்காள மொழி நடிகை மேகா நடித்துள்ளார். இ4 என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு இயக்குநர் ராஜு முருகன் வசனம் எழுதுகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராகி வரும் நிலையில் துருவ்வின் பிறந்த நாளான இன்று படத்தின் டீசர் வெளியிடப்பட்டது.
இவ்விழாவில் நடிகர் விக்ரம் பேசும் போது, “இரண்டு வருடங்களுக்கு முன் துருவ் செய்த டப்மாஸ் பாத்த பாலா நீ காலி என்றார். அதை பார்த்த தயாரிப்பாளர் முகேஷ், துருவ் வைத்து அர்ஜுன் ரெட்டி தமிழ் ரீமேக் செய்யலாம் என்ற போது அதை இயக்குவது யார் என்ற கேள்வி வந்தது. செண்டிமெண் டாகவே சின்ன வயதில் இருந்து துருவ் படம் நான் பண்ணுவேன் என்று பாலா சொல்லிக் கொண்டிருந்தார்.
நான் நடித்த எல்லா பட இயக்குநர்களும் சிறந்த இயக்குநர்கள். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பலம். பாலாவின் பலம் எல்லோருக்கும் தெரியும். ஒரு கல்லை கூட நடிக்க வைப்பவர். நான் மற்றவர்களுக்கும் சொல்வது பாலா படத்தில் நடிக்க வேண்டும் என்பது. அதனால் துருவ் நடிக்க கூடிய முதல் படமே ஒரு நல்ல மோதிர கையால் கொட்டு பட வேண்டும் என்று நினைத்தேன்.
அது நடந்து விட்டது. ரீமேக்கே பண்ணாத ஒரு மணுஷன், எனக்காகவும், துருவ்-க்காகவும் செய்ததற்கு நன்றி பாலா. இதில் கண்டிப்பாக துருவ் நடிப்பாற்றல் இருக்கும். படப்பிடிப்பு முதல் நாள் முடித்து வந்ததும் துருவ் டென்ஷனாவே இருந்தான். இப்படி பண்ணி இருக்கலாமே, அப்படி பண்ணி இருக்கலாமேன்னு. பாலா இரண்டாவது நாள் போன் பண்ணி சொல்லும் போது ‘அவன் ஃபார்ம்க்கு வந்துட்டான்’ என்றார். துருவ் எனக்கு போட்டியா வருவான் என்ற நம்பிக்கை இருக்கிறது” என்றார்.
இயக்குநர் பாலா பேசும் போது, “சேது படம் பண்ணும் போது துருவ் ஆறு மாதம். ரொம்ப புத்திசாலி அவன். படத்தில் நடிக்கும் போது என்னை ரொம்ப கஷ்டப்படுத்தவில்லை. சொன்னதை செய்திருக் கிறான். இந்த படம் இளைஞருக்குப் பிடிக்கும் வகையில் எடுக்கப்பட்டிருக்கிறது” என்றார்.
அடுத்ததாக படத்தின் நாயகன் துருவ் பேசும் போது, “இன்று பேசுவதற்காக கண்ணாடி முன் நின்று பயிற்சி எடுத்தேன். அதெல்லாம் இப்ப மறந்துருச்சு. பாலா மாமா இந்த படம் எடுக்கவில்லை என்றால், இங்கு நான் வந்திருக்க மாட்டேன். அமெரிக்காவில் படித்துக் கொண்டிருந்தேன். பாலா மாமாவை வீட்டில் வைத்துத்தான் அதிகம் பார்த்திருக்கிறேன். முதல் மூன்று நாட்கள் கேமரா முன் நடிப்பதற்கு பதட்டமாக இருந்தது. சேது மூலம் அப்பாக்கு உயிர் கொடுத்தவர் பாலா மாமா. இப்ப வர்மா மூலம் எனக்கு உயிர் கொடுக்கிறார், இதை இங்கு சொல்வதில் பெருமைப்படுகிறேன்.
சுகுமார் மாமா, இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார். என்னையும், அக்காவையும் வைத்து சின்ன வயதில், போட்டோ சூட் முதன் முதலில் எடுத்தவர் அவர்தான். இந்த படத்தில் வேலை பார்க்கும் போது குடும்பமாகத்தான் உணர்ந்தேன். அப்பாவோட பெரிய ஃபேன் நான்” என்று துருவ் பேசிய பின், மேடையிலேயே துருவ்வின் 22வது பிறந்த நாள் கொண்டாடப்பட்டது.