AanthaiReporter.Com | Tamil Multimedia News Web ⚡ AMP

அரிக்கொம்பன் விழாவில் சங்க ஒற்றுமை, மானிய விவகாரம், வனப் படப்பிடிப்பு அனுபவங்கள்!

By admin | Nov 26, 2026

மேஜிக் பிக்சர்ஸ் சார்பில் கரு. நாகராஜன் தயாரிப்பில், மிதுன் மகேஸ்வரன் இயக்கி நாயகனாக நடித்துள்ள ‘அரிக்கொம்பன்’ திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இயற்கை, வனவிலங்குப் பாதுகாப்பு மற்றும் மனித வாழ்வியலை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படம், வரும் டிசம்பர் 11-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. விழாவில் பங்கேற்ற சிறப்பு விருந்தினர்கள் மற்றும் படக்குழுவினரின் முழுமையான உரைகள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன.

சிறிய படங்களும் வாரத்திற்கு 11 ரிலீஸ்களும்

நிகழ்ச்சியில் பேசிய ஞானகுமார், தயாரிப்பாளர் நாகராஜ் அண்ணனுடன் தனக்கு சுமார் 30 ஆண்டுகாலப் பழக்கம் உள்ளதாகவும், அதேபோல் முருகசாமியும் மிகச்சிறந்த மனிதர் என்றும் குறிப்பிட்டார். எப்படிப்பட்ட சூழலிலும் அனைவருக்கும் உரிய மரியாதையை அளிக்கும் பண்பு அவர்களிடம் உள்ளது. தனது மகனை மிகுந்த அன்புடனும் பாசத்துடனும் வளர்த்து, தமிழ் சினிமாவுக்கு ஒரு சிறந்த கலைஞராக வழங்கியிருக்கிறார். அவரது அன்பான உபசரிப்பும் விருந்தோம்பலும் பாராட்டுக்குரியது.

இன்றைய சூழலில் ஒரே வாரத்தில் 11 திரைப்படங்கள் வெளியாகின்றன. இதனால் சிறிய படங்களுக்குப் போதிய திரையரங்குகள் கிடைப்பதில் சிக்கல் ஏற்படுகிறது. இதற்குத் தீர்வுகாணும் வகையில், ஜனவரி மாதம் முதல் வாரத்திற்கு நான்கு சிறிய படங்களும் ஒரு பெரிய படமும் வெளியாகும் வகையில் வழிமுறைகளை உருவாக்குவது குறித்து தமிழ்குமரனுடன் ஆலோசித்தோம். திரையரங்க உரிமையாளர்களுடன் பல்வேறு பேச்சுவார்த்தைகளை நடத்தி, ஓடிடி தொடர்பான பிரச்சினைகள் உள்ளிட்ட பல சவால்களுக்குத் தீர்வு காண்பதிலும் தமிழ்குமரன்  தொடர்ந்து முயற்சி செய்து வருகிறார்.

குறிப்பாக, பல தயாரிப்பாளர்கள் நீண்ட காலமாகப் பெற முடியாமல் இருந்த மானியத் தொகையை, அவர் தலைமையேற்ற ஆறு முதல் ஏழு மாதங்களுக்குள் அனைவருக்கும் பெற்றுத் தந்திருக்கிறார். இதன் மூலம் பல தயாரிப்பாளர்கள் மகிழ்ச்சியுடன் தீபாவளியைக் கொண்டாடும் சூழல் உருவாகியுள்ளது. இன்றைய காலகட்டத்தில் சிறிய படங்களும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன. 2026-ஆம் ஆண்டு தமிழ் சினிமாவுக்குச் சிறப்பான ஆண்டாக அமைந்துள்ளது. அந்த வரிசையில் இந்தப் படமும் வெற்றிபெற வேண்டும்.

சேலத்தில் உள்ள சுமார் 200 ஏக்கர் பரப்பளவு கொண்ட காட்டுப் பகுதியில் படப்பிடிப்பு நடைபெற்றதாகத் தெரிவித்தனர். கதாநாயகன், கதாநாயகி, ஒளிப்பதிவாளர் உள்ளிட்ட அனைவரும் சிறப்பாகப் பணியாற்றியுள்ளனர். மற்ற மாநிலங்களில் மக்கள் திரையரங்குகளுக்குச் சென்று திரைப்படங்களைப் பார்க்கும் வழக்கம் அதிகமாக உள்ளது. ஆனால் தமிழகத்தில் பலர் கைப்பேசியிலும் தொலைக்காட்சியிலும் திரைப்படங்களைப் பார்க்கின்றனர். இதைத் தவிர்த்து, குடும்பத்துடன் திரையரங்குகளுக்குச் சென்று திரைப்படங்களைப் பார்க்க வேண்டும். ஒரு திரைப்படத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கு விளம்பரமும் ஊடகங்களின் ஆதரவும் மிகவும் அவசியம்.

தமிழ்குமரன்  தலைமையேற்ற பிறகு தயாரிப்பாளர் சங்கத்திற்கும் பெப்சி அமைப்பிற்கும் இடையிலான உறவில் நல்ல மாற்றம் ஏற்பட்டுள்ளது. முன்பு இரு அமைப்புகளுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் இருந்த நிலையில், தற்போது இரு தரப்பினரும் நண்பர்களாகவும் தோளோடு தோள் நின்றும் செயல்பட்டு வருகின்றனர். தொழில்நுட்பக் கலைஞர்களுடன் இணைந்து பேச்சுவார்த்தை நடத்தி, சம்பளப் பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் சுமுகமாகத் தீர்க்கப்பட்டுள்ளன. சுமார் 25,000 தொழிலாளர்களைக் கட்டிக்காத்து வரும் செல்வமணி அண்ணனின் பணியும் பாராட்டுக்குரியது. இந்தப் படம் வெற்றிபெற்று, தமிழ்குமரன் அண்ணன் தலைமையில் வெற்றி விழா நடைபெற வேண்டும் என்பதே எனது விருப்பம் என்று ஞானகுமார் தெரிவித்தார்.

புகழ் தலைக்கேறக் கூடாது

இயக்குநரும் பெப்சி தலைவருமான ஆர்.கே. செல்வமணி பேசுகையில், இந்த நிகழ்ச்சியில் தான் கலந்துகொள்வதற்கு கரு. நாகராஜனுடனான நட்பே முக்கியக் காரணம் என்றார். மனிதர்களின் தரம், தகுதி ஆகியவற்றைப் பார்த்துப் பழகாமல், மனிதர்களை மனிதர்களாக நேசிக்கும் பண்பு கரு. நாகராஜனிடம் உள்ளது. ஒரு தந்தை தனது மகனுக்குக் கொடுக்கக்கூடிய மிகப்பெரிய சொத்து பணமோ, பொருளோ அல்ல; நல்ல பண்பாடுதான். பெற்றோர் தங்களது பிள்ளைகளுக்குச் சிறந்த பண்பாட்டைக் கற்றுக்கொடுத்தால் மட்டுமே அவர்கள் குடும்பத்தின் பெருமையையும் சொத்துகளையும் பாதுகாக்க முடியும். நிகழ்ச்சிக்கு வந்தவர்களை வரவேற்ற விதத்திலேயே கரு. நாகராஜனின் மகனிடம் காணப்பட்ட பண்பையும் கலாசாரத்தையும் உணர முடிந்தது.

இந்தப் படத்தின் ஒளிப்பதிவு மிகவும் சிறப்பாக இருக்கிறது. ஒரு திரைப்படத்திற்கான காடுகளைத் தேடி இந்தியா முழுவதும் சுமார் 40 ஆயிரம் கிலோமீட்டர் பயணம் செய்த அனுபவம் எனக்கு இருக்கிறது. தென்னிந்தியாவின் பல்வேறு வனப்பகுதிகளில் படப்பிடிப்பு நடத்தியிருக்கிறேன். ஆனால், சேலம் அருகே இவ்வளவு பிரமாண்டமான இயற்கை எழில் கொஞ்சும் வனப்பகுதி இருப்பது வியப்பாக இருக்கிறது. இவ்வளவு அழகாகக் காட்சிப்படுத்திய ஒளிப்பதிவாளர் அனிலுக்கு வாழ்த்துகள். இசையமைப்பாளர் சேவியரின் இசை பழைய ராஜா சாரின் பாடல்களைக் கேட்கும்போது ஏற்படும் இனிமையான உணர்வைத் தருகிறது. கலை இயக்குநர் தினேஷ் உருவாக்கிய கிராமப்புறக் காட்சிகள் உண்மையான கிராமத்தையே கண்முன் நிறுத்துகின்றன.

கதாநாயகி தேவிகாவை லட்சுமி மேனனுடன் ஒப்பிட்டுப் பாராட்ட விரும்புகிறேன். அவருடைய புன்னகையும் இயல்பான நடிப்பும் தமிழ் சினிமாவுக்கு நல்ல வரவாக இருக்கும். கதாநாயகனைப் பார்க்கும்போது ‘பருத்திவீரன்’ திரைப்படத்தில் கார்த்தியின் நடிப்பு நினைவுக்கு வருகிறது.

ஒரு திரைப்படத்தின் வெற்றி அதன் படப்பிடிப்புத் தளத்திலேயே தொடங்கிவிடுகிறது. ‘கேப்டன் பிரபாகரன்’ படப்பிடிப்பின்போது சாலக்குடி பகுதியில் தொழில்நுட்பக் கலைஞர்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் பணியாற்றிய அனுபவங்கள் இன்றும் நினைவில் உள்ளன. ‘அரிக்கொம்பன்’ படக்குழுவினரிடமும் அத்தகைய ஒற்றுமையையும் ஈடுபாட்டையும் காண முடிகிறது.

நடிகர்களுக்கு வெற்றியும் புகழும் கிடைக்கும்போது, அவர்கள் மக்களிடமிருந்தும் தொழில்நுட்பக் கலைஞர்களிடமிருந்தும் விலகிவிடக் கூடாது. ஒரு காலத்தில் எம்.ஜி.ஆர்., சிவாஜி போன்ற மிகப்பெரிய நடிகர்கள் மக்களுடன் நெருக்கமாக இருந்தார்கள். ஆனால், இன்றைய சூழலில் சில நடிகர்களைச் சந்திப்பதற்கே ரசிகர்கள் பல தடைகளைக் கடக்க வேண்டியிருக்கிறது. படப்பிடிப்புத் தளங்களில் செல்போன்களின் பயன்பாடு பணிகளுக்கு இடையூறாக இருப்பதைத் தவிர்த்து, அனைவரும் பணியில் கவனம் செலுத்த வேண்டும்.

ஒரு திரைப்படம் 100 கோடி ரூபாய் வசூலை எட்டுகிறது என்றால், அந்த வெற்றிக்குப் பின்னால் நூற்றுக்கணக்கான தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பும் அர்ப்பணிப்பும் இருக்கின்றன. குறிப்பாக, கடல் மற்றும் நீர்நிலைகளில் உயிரைப் பணயம் வைத்துப் படப்பிடிப்பு நடத்தும் தொழிலாளர்களின் மதிப்பை நாம் உணர வேண்டும். லாபத்தைத் தயாரிப்பாளர் எடுத்துக்கொள்ளலாம்; ஆனால் வெற்றியையும் அங்கீகாரத்தையும் அனைவரும் பகிர்ந்துகொள்ள வேண்டும்.

தயாரிப்பாளர் எல்ரெட் குமார் ‘விடுதலை’ படத்திற்குப் பிறகு இயக்குநர் வெற்றிமாறனை நம்பி 180 நாட்கள் படப்பிடிப்புக்கு வாய்ப்பளித்துப் பிரமாண்டங்களை உருவாக்குவது பாராட்டுக்குரியது. இன்றைய தமிழ் சினிமாவில் நல்ல கதையும், அதை நம்பி முதலீடு செய்யும் தயாரிப்பாளரும் இருந்தால் பெரிய கதாநாயகர்கள் இன்றியே சிறிய படங்களும் மிகப்பெரிய வெற்றியைப் பெற முடியும். ஜி.கே. மணியின் மகன் தமிழ்குமரன் அனைவரிடமும் அன்பாகவும் எளிமையாகவும் பழகும் விதம் அவரை மேலும் உயர்ந்த இடத்திற்குக் கொண்டு செல்லும். ‘அரிக்கொம்பன்’ திரைப்படம் ‘கும்கி’, ‘கேப்டன் பிரபாகரன்’ போன்ற வெற்றிப் படங்களின் வரிசையில் இடம்பெற வேண்டும் என்று செல்வமணி வாழ்த்தினார்.

பெப்சி – தயாரிப்பாளர் சங்க நட்பு

தயாரிப்பாளர் தமிழ்குமரன் பேசுகையில், கரு. நாகராஜன் அண்ணன் தனது தந்தையின் நெருங்கிய நண்பர் என்றும், அனைவரிடமும் பாசத்துடனும் அன்புடனும் பழகக்கூடியவர் என்றும் குறிப்பிட்டார். அதேபோல் அவரது அன்புத் தம்பி மிதுனும் அன்பாகப் பழகக்கூடியவர்.

படத்தின் டிரெய்லரும் பாடல்களும் மிகவும் பிரமாதமாக உள்ளன. காட்டுப் பகுதியில் யானையை மையமாக வைத்து உருவாக்கப்படும் ‘கேப்டன் பிரபாகரன்’, ‘பேராண்மை’, ‘மைனா’, ‘கும்கி’ போன்ற வெற்றிப் படங்களை நினைவுபடுத்தும் வகையில் ‘அரிக்கொம்பன்’ அமைந்துள்ளது. கதாநாயகி லட்சுமி மேனனைப் போலவே இருக்கிறார்.

தயாரிப்பாளர் சங்கத்தின் செயல்பாடுகள் குறித்துப் பேசிய தமிழ்குமரன், தானும் தலைவர் ஆர்.கே. செல்வமணியும் சங்கத்தின் வளர்ச்சிக்காகவும் தயாரிப்பாளர்களின் நலனுக்காகவும் தனிப்பட்ட நேரத்தை ஒதுக்கி, எந்தவிதச் சம்பளமும் இல்லாமல் சேவையாக உழைத்து வருவதாகக் கூறினார். ஒரு வாரத்தில் மூன்று நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதைப் பார்த்து, இதே வேலையாக இருந்தால் சாப்பாட்டுக்கு என்ன செய்வீர்கள் என்று ஒரு இசையமைப்பாளர் நகைச்சுவையாகக் கேட்டதையும் நினைவுகூர்ந்தார்.

பெரிய படங்கள் மட்டுமின்றி சிறிய படங்களுக்கும் முக்கியத்துவம் அளித்து வருகிறோம். தயாரிப்பாளர் சங்கத்துக்கும் பெப்சி அமைப்புக்கும் இடையே முன்பு இருந்த பிரச்சினைகள் நீங்கி, தற்போது இரு அமைப்புகளும் ஒற்றுமையுடன் இணைந்து தயாரிப்பாளர்களுக்கு ஆக்கப்பூர்வமான திட்டங்களை முன்னெடுத்து வருகின்றன. தமிழக அரசும் முதல்வரும் திரைத்துறையின் கோரிக்கைகளுக்குச் சாதகமான நடவடிக்கைகளை மேற்கொண்டு, திரைப்படங்களுக்கு மானியம் வழங்குவது உள்ளிட்ட திட்டங்களைச் செயல்படுத்தி வருகின்றனர். இயக்குநர் சுப்பிரமணிய சிவா சினிமாவுக்காகவே வாழ்பவர் என்றும், எப்போதும் சினிமாவின் வளர்ச்சியைப் பற்றியே பேசுபவர் என்றும் பாராட்டிய தமிழ்குமரன், ‘அரிக்கொம்பன்’ மாபெரும் வெற்றி பெற வாழ்த்தினார்.

பச்சைமலை அடிவாரமும் உண்மைச் சம்பவமும்

தயாரிப்பாளர் கரு. நாகராஜன் பேசுகையில், முன்பு எதிரெதிர் திசைகளில் பயணித்த பெப்சி மற்றும் தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர்கள் இன்று ஒற்றுமையுடன் இணைந்து இந்த நிகழ்ச்சிக்கு வந்திருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது என்றார். அச்சு, தொலைக்காட்சி ஊடகங்களைத் தாண்டி சமூக ஊடகங்களின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், அனைவரும் விமர்சகர்களாகவும் ஆசிரியர்களாகவும் மாறியுள்ள இன்றைய சூழலில் நல்ல திரைப்படங்களுக்கு ஊடகங்களும் சமூக ஊடகங்களும் உரிய ஆதரவை வழங்க வேண்டும். மேலும், செய்தியாளர்களுக்குச் சிறப்புக் காட்சிகள் ஏற்பாடு செய்வதைப் போல, முக்கிய இயக்குநர்களுக்கும் தனியாகச் சிறப்புக் காட்சிகள் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று பெப்சி தலைவர் ஆர்.கே. செல்வமணியிடம் கோரிக்கை வைத்தார்.

‘அரிக்கொம்பன்’ திரைப்படத்திற்காகப் படக்குழுவினர் சுமார் இரண்டு மாதங்கள் காடுகள் மற்றும் மலைப்பகுதிகளில் பயணம் செய்து இடங்களைத் தேடியதாகத் தெரிவித்த அவர், ஆரம்பத்தில் ‘எறும்புத்தின்னி’ என்ற கதையை உருவாக்கும் முயற்சியில் இருந்ததாகவும், பின்னர் ஒரு யானை கிராமத்திற்குள் வருவதால் ஏற்படும் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட கதையைத் தேர்வு செய்ததாகவும் கூறினார். மிகவும் எளிய குடும்பத்தில் பிறந்து, கடின உழைப்பால் இன்று சேலத்தில் உள்ள முக்கிய மருத்துவமனையின் பங்குதாரராக உயர்ந்துள்ள தனது நண்பர் மருத்துவர் மற்றும் அவரது குடும்பத்தினர் இப்படத்திற்கு அளித்த பங்களிப்பையும் நன்றியுடன் நினைவுகூர்ந்தார்.

படப்பிடிப்பு அனுபவங்களைப் பகிர்ந்த கரு. நாகராஜன், துறையூர், உப்பிலியாபுரம் வழியாகச் சோமனாபுரம் சென்று, அங்கிருந்து பச்சைமலை வனப்பகுதியின் அடிவாரத்தில் படக்குழுவினர் நிரந்தரமாகத் தங்குவதற்கு ஏற்ற வகையில் தனித்தனி அறைகள், தடுப்புகள், குளிர்சாதன வசதிகள், மின்சார இணைப்பு, ஜெனரேட்டர் என அனைத்தையும் ஏற்பாடு செய்ததாகக் கூறினார். இடையில் இரண்டு நாட்கள் மழையாலும், ஒரு நாள் காவல்துறை தொடர்பான பிரச்சினையாலும் தடைகள் ஏற்பட்டபோதிலும், அவற்றைச் சமாளித்து ஒரே படப்பிடிப்புத் திட்டத்தில் படத்தை நிறைவு செய்தோம். படப்பிடிப்பில் தனது தலையீடு இருக்கக் கூடாது என்பதற்காக நேரடியாக இரண்டு நாட்கள் மட்டுமே படப்பிடிப்புத் தளத்திற்குச் சென்றதாகவும் தெரிவித்தார்.

மலையாளத் திரையுலகில் மம்முட்டி, மோகன்லால் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் பணியாற்றிய ஒளிப்பதிவாளர் அனிஸ்லால் மற்றும் தனது மனைவியுடன் இணைந்து வீட்டிலிருந்தே படப்பிடிப்புக்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்த சகிஸ்னா ஆகியோரின் அர்ப்பணிப்பு பாராட்டுக்குரியது. படக்குழுவினரின் இந்தக் கடின உழைப்புக்கான பலனை ரசிகர்களும் மக்களும் வழங்கி, ‘அரிக்கொம்பன்’ திரைப்படத்தை வெற்றிப் படமாக்க வேண்டும் என்று கரு. நாகராஜன் கேட்டுக்கொண்டார்.