AanthaiReporter.Com | Tamil Multimedia News Web ⚡ AMP

உலகம் முழுக்க 12 கோடி மக்கள் பட்டினி! ஆனா இதுக்குக் காரணம் பஞ்சம் இல்லை!

By admin | Mar 26, 2018

‘உலகம் முழுவதும் சுமார் 12 கோடி மக்கள் பட்டினியால் இறக்கும் ஆபத்தான நிலையில் இருக்கின்றனர். மேற்குறிப்பிட்ட நாடுகளில் உள்ள மக்கள், உணவின்றி பட்டினியால் வாடுவதற்கு முக்கிய காரணமாக விளங்குவது உள்நாட்டுக் குழப்பம் மட்டுமே’ என்று ஐக்கிய நாடுகள் சபையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் அமெரிக்காவின் நியூயார்க்கில் அண்மையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், வீடியோ கான்பரன்ஸ் மூலமாக ஐ.நா.வின் உலக உணவு அமைப்பின் செயல் இயக்குநர் டேவிட் பியாஸ்லி உரையாற்றினார்.

அப்போது அவர், “ஐம்பது, நூறு ஆண்டுகளுக்கு முன்பு வரை, பல்வேறு உலக நாடுகளை பஞ்சம் தாக்கி வந்தது. இதில், போதிய உணவும், நீரும் இல்லாமல் ஏராளமான மக்கள் மடிந்தனர். ஆனால், தற்போது அந்த நிலைமை மாறிவிட்டது. ஒவ்வொரு நாடும் வேளாண்மைக்கு முக்கியத்துவம் அளிக்க தொடங்கியுள்ளதால் உணவு உற்பத்தி கணிசமாக அதிகரித்துள்ளது. அதனால், எந்த நாட்டிலும் பஞ்சம் ஏற்படும் சூழ்நிலை இப்போது இல்லை.

அதேசமயத்தில், போர் மற்றும் உள்நாட்டு மோதல்களால் அரசியல் ஸ்திரமற்ற சூழல் நிலவி வரும் நாடுகளில், கடுமையான உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, சோமாலியா, யேமன், தெற்கு சூடான், நைஜீரியா ஆகிய நாடுகளில் உணவுப் பஞ்சம் நிலவுகிறது. இந்த நாடுகளில் மட்டும் சுமார் 32 கோடி பேர் பசி வேளைக்கு உணவின்றி பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல், உலகம் முழுவதும் சுமார் 12 கோடி பேர், பட்டினியால் மடியும் ஆபத்தான நிலையில் இருக்கின்றனர்.

மேற்குறிப்பிட்ட மக்கள், உணவின்றி பட்டினியால் வாடுவதற்கு பிரதான காரணமாக விளங்குவது உள்நாட்டு குழப்பம் மட்டுமே. எனவே, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் இந்த விவகாரங்களில் தலையிட்டு அதுபோன்ற நாடுகளில் அமைதி ஏற்பட உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார். –