சமந்தா நடிப்பில் உருவாகியிருக்கும் யு-டர்ன் படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
2016 – ம் ஆண்டு கன்னட மொழியில் யு-டர்ன் படம் வெளியானது. இப்படத்தை லூசியா பட இயக்குநர் பவன்குமார் இயக்கியிருந்தார். ஒரு மேம்பாலத்தில் விதிமுறை மீறி யு-டர்ன் எடுப்பவர்கள் இறந்து போகிறார்கள். அதற்கு பின்னால் இருக்கும் மர்மத்தைப் பற்றியதே இந்தப் படத்தின் கதை. கடந்த வருடம் இதே படம் மலையாளத்தில் கேர்ஃபுல் என்ற பெயரில் வெளியானது. தற்போது தமிழ் மற்றும், தெலுங்கில் மொழிமாற்றம் செய்யப்பட்டு உருவாகியுள்ளது. அதிக வசூலை குவித்த இந்தப் படத்தை இந்தியிலும் இயக்க உள்ளார் இயக்குநர் பவன் குமார்.
தமிழ் மற்றும் தெலுங்கில் சமந்தா, ஆதி, ராகுல் ரவிந்திரன், பூமிகா சாவ்லா, நரைன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்நிலையில் இந்தப் படம் செப்டம்பர் 13-ம் தேதி திரைக்கு வரும் என்று படக் குழுவினர் அறிவித்துள்ளனர். முன்னதாக யு-டர்ன் படத்தின் ட்ரெய்லரை இசையமைப்பாளர் அனிருத் வெளியிட்டிருந்தார்.
தற்போது இப்படத்தை கிரியேட்டிவ் என்டர்டெய்ன்மெண்ட்ஸ் மற்றும் டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் சார்பில் தனஞ்செயன் ரிலீஸ் செய்கிறார்.ஜி தனஞ்செயன் இது குறித்து கூறும்போது, “எங்கள் நிறுவனமான BOFTAல் எப்போதும் உலகளாவிய பார்வையாளர்களுக்கான தரமான படங்களை எடுக்க ஆர்வமாக உள்ளோம். யு-டர்ன் தயாரிப்பாளர்களுடன் வியாபார ரீதியில் இணைந்தது நிச்சயமாக BOFTAக்கு மிகப்பெரிய சாதனையாகும். குறைந்த காலத்திலேயே யூடியூபில் அதிக பார்வையாளர்களை கொண்ட இந்த படத்தின் சிறப்பான ட்ரைலர் முதல், இந்த படம் சம்பந்தப்பட்ட எல்லாமே ரசிகர் களை கவர்ந்திழுக்கும் விஷயங்களை கொண்டது. புதுமையான அணுகுமுறையுடன் இந்தத் திரைப் படத்தை முன்னெடுத்துச் செல்ல சிறந்த முயற்சிகளை நாங்கள் மேற்கொள்வோம். இந்த வாய்ப்பை அளித்த தயாரிப்பாளர்களான ஸ்ரீனிவாச சித்தூரி (ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன்) மற்றும் ராம்பாபு பண்டாரு (ஒய்.வி கம்பைன்ஸ் மற்றும் BR8 கிரியேஷன்ஸ்) ஆகியோருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்தார்.
தயாரிப்பாளர் ஸ்ரீனிவாச சித்தூரி கூறும்போது, “இந்த திரைப்படத்திற்காக தனஞ்செயன் போன்ற ஒரு அனுபமிக்க தயாரிப்பாளருடன் இணைந்தது எங்களுக்கு ஒரு பெரிய கௌரவம். அவரது திரைப்படங்களை மேம்படுத்துவதற்காக புதுமையான வழிமுறைகளை கண்டுபிடிப்பதற்கான ஒரு உத்வேகம் அவர். அவரிடம் இருந்து இந்த ” யு-டர்ன்” படத்தை சிறந்த முறையில் கொண்டு சேர்க்க கூடுதலாக விஷயங்களை பெறும் என்பதில் நான் உறுதியாக உள்ளேன்” என்றார். தயாரிப்பாளர் ராம்பாபு பண்டாரு கூறும்போது, “நாங்கள் மொத்த குழுவும் மகிழ்ச்சியுடனும் உற்சாகத்துடனும் இருக்கிறோம். தனஞ்செயன் அவர்களின் புதுமையான அணுகுமுறை அவரது மிகப்பெரிய யு.எஸ்.பி. அது இப்போது எங்கள் படத்துக்கும் கிடைத்ததை மதிப்புமிக்க தருணமாக நினைக்கிறேன்” என்றார்.