AanthaiReporter.Com | Tamil Multimedia News Web ⚡ AMP

தட்டச்சு தினம்: வரலாறும், வாழ்வாதாரமும், நவீனத் தேவையும்

By admin | Jan 08, 2026

லகெங்கும் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 8-ஆம் தேதி சர்வதேச தட்டச்சு தினமாகக் கொண்டாடப்படுகிறது. ஒரு காலத்தில் தட்டச்சு என்பது வெறும் அலுவலகப் பணி சார்ந்த விஷயமாக இல்லாமல், பல நடுத்தர வர்க்கக் குடும்பங்களின் பொருளாதாரத் தூணாகத் திகழ்ந்தது. குறிப்பாக 80-களில், பள்ளிப்படிப்பை முடித்தவுடன் உயர்கல்விக்குச் செல்ல முடியாத வாரிசுகளுக்கு அரசு வேலைக்கான ஒரே நுழைவுச்சீட்டாகத் தட்டச்சுப் பயிற்சி விளங்கியது. வீட்டிலிருந்த தொந்தரவிற்காகப் பயிலகங்களுக்குச் சென்ற பல மாணவர்கள், பின்னாள்களில் அரசு அலுவலகங்களில் உயர்பதவிகளில் அமர்ந்தது ஒரு பொற்காலம். பட்டதாரிகளுடன் சரிசமமாகப் பணிபுரியும் கௌரவத்தையும், அரசுப் பணியில் தட்டச்சராகச் சேர்ந்து ஐ.ஏ.எஸ். அதிகாரிகளாக உயரும் வாய்ப்பையும் இந்தப் பயிற்சி அள்ளிக்கொடுத்தது. பல தலைமுறைகளை வாழ்வித்த இக்கலை, இன்று கணினி யுகத்தில் அதன் பாரம்பரியப் பெருமையை மீண்டும் ஒருமுறை நமக்கு நினைவூட்டுகிறது.

தமிழ் தட்டச்சின் தந்தை: ஆர். முத்தையா

தமிழ் மொழியைத் தட்டச்சு இயந்திரத்திற்குள் அடக்கிய பெருமை ஆர். முத்தையா அவர்களையே சாரும். 1886-ல் இலங்கையின் யாழ்ப்பாணத்தில் பிறந்த இவர், ரயில்வே துறையில் பணியாற்றியபோது சுருக்கெழுத்து மற்றும் தட்டச்சில் நிபுணத்துவம் பெற்றார்.

80-களின் வாழ்வாதாரமும் தற்போதைய நிலையும்

அன்று ‘டைப்ரைட்டிங் கிளாஸ்’ என்பது மாணவர்களின் அடிப்படைத் தேவையாக இருந்தது. 90-களின் கணினிப் புரட்சிக்குப் பிறகு, தட்டச்சு இயந்திரங்கள் மெல்ல மறைந்து கணினிகள் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கின.

தட்டச்சு தினத்தின் நோக்கம்

தட்டச்சு இயந்திரத்தின் வேகம், துல்லியம் மற்றும் திறனைப் போற்றும் வகையில் இந்நாளில் பல்வேறு தட்டச்சுப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இன்று நாம் பயன்படுத்தும் கணினி விசைப்பலகைக்கு அடித்தளம் இட்ட அந்த இயந்திரங்களையும், அதை வடிவமைத்த மேதைகளையும் போற்றுவது நம் கடமையாகும்.

மொத்தத்தில் பேனாக்கள் பயன்படுத்தப்படாத இன்றைய டிஜிட்டல் உலகில், கணினி மேஜைக்குப் பின்னால் இருக்கும் ஒவ்வொருவருக்கும் தட்டச்சு என்பது ஓர் அடிப்படை ஆயுதம். 80-களின் அந்தப் பழைய தட்டச்சுப் பயிலகங்களின் ஒலியையும், ஆர். முத்தையா போன்றவர்களின் அர்ப்பணிப்பையும் நினைவு கூர்வதே இந்த நாளின் உண்மையான வெற்றியாகும்.

வாத்தீ அகஸ்தீஸ்வரன்