சமூகவலைத்தளத்தின் புதிய வரவான த்ரெட் தொடர்பான எல்லா தகவல்களையும் தனது வலைதளம் மற்றும் செயலியில் பகிர ட்விட்டர் நிறுவனம், தடை செய்து விட்டது. கூடவே ஏற்கெனவே பகிரப்பட்ட த்ரெட் தகவல்களையும் நீக்கியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேர்ல்ட் பேமஸ் சோசியல் மீடியாவான பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா ஜூலை 6-ம் தேதி த்ரெட் என்ற புதிய சமூக வலைதளத்தை அறிமுகப்படுத்தியது. 100 கோடி பயனாளர்களையும் பெற அந்த நிறுவனம் திட்மிட்டுள்ளது. சமீப காலமாக பெரும் வம்படி செய்து வரும் ட்விட்டருக்குப் போட்டியாக, அதேபோன்று உருவாக்கப்பட்ட இந்த சமூக வலைதள செயலியை 10 கோடிக்கும் அதிகமானோர் இதுவரை தரவிறக்கம் செய்துள்ளனர். இந்த புதிய செயலியின் அறிமுகத்திற்கு பிறகு ட்விட்டர் பயன்பாடு 11 சதவீதம் குறைந்துள்ளதாக பல இணைய ஆய்வு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
இதில் கடுப்பாகி, எங்களைக் காப்பியடித்து தான் மெட்டா த்ரெட் செயலியை உருவாக்கியுள்ளதாக ட்விட்டர் நிறுவனம் குற்றம்சாட்டியது. அத்துடன், அதுதொடர்பாக அறிவுசார் சொத்துரிமை சட்டத்தின் கீழ் வழக்கும் தொடர்ந்துள்ளது. இந்த நிலையில், ட்விட்டர் நிறுவனம், தனது வலைதளம் மற்றும் செயலியில் த்ரெட் தொடர்பான எல்லா தகவல்களையும் பகிரத் தடைசெய்துள்ளது. ஒரு பயனாளர் த்ரெட் செயலியில் பகிர்ந்த செய்தியை, ட்விட்டரில் பகிர்ந்தால், அவை உடனடியாக தடுக்கப்படுவதோடு, ஏற்கெனவே பகிரப்பட்ட தகவல்கள் நீக்கப்பட்டுள்ளன. இது ட்விட்டர் பயனாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எலான் மஸ்க்கின் ட்விட்டர் ஏற்கெனவே இதுபோல் பல தகவல்களை நீக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.