AanthaiReporter.Com | Tamil Multimedia News Web ⚡ AMP

அசாத்தியம் என்று நினைப்பதை சாத்தியப்படுத்தும் முயற்சி!

By admin | Jun 19, 2023

சமீபத்தில் ‘LinkedIn‘ தளத்தில் மாணவர் ஒருவரின் பதிவு ஆச்சரியப்படுத்தியது…! தனது எம்டெக் (M.Tech) படிப்பின் புராஜெக்ட் (Project)-இல் மொத்தம் நான்கு ஆய்வுக் கட்டுரைகளை எழுதியிருக்கிறார்.. அவற்றில் இரண்டு மிக மதிப்பிற்குரிய ஆய்விதழ்களில் (high impact factor) பதிப்பிக்கும் தருவாயில் உள்ளது..! இத்தகுதிகளோடு அவர் புகழ்ப்பெற்ற சர்வதேசப் பல்கலை ஏதேனும் ஒன்றில் பிஎச்டி பயில விண்ணப்பிக்கையில் தாராளமாய் அவருக்கு ஏதேனும் அமெரிக்க, ஆசிய அல்லது ஐரோப்பிய நாடுகளின் தரமிகு பல்கலையின் ஒரு ஆய்வகத்தில் முழு உதவித்தொகையோடு இடம் கிடைக்கும்..! அப்பட்டத்தோடு அவருக்கு முதுமுனைவர் பணியிட (postdoctoral researcher) வாய்ப்பும் எளிதாக அமையும்..!

இதைத்தான் தமிழக கல்லூரி மற்றும் பல்கலையில் ஆராய்ச்சியில் ஆர்வம் உடைய, முதுகலை பயிலும் மாணவ-மாணவியர் செய்ய வேண்டும்..! வெறுமனே கல்விச் சான்றிதழ்களோடு பிஎச்டி பயில சர்வதேச அல்லது உள்நாட்டுப் பல்கலைகளில் விண்ணப்பிப்பதற்கும், அத்துறையில் நீங்கள் எழுதிய ஆராய்ச்சிக் கட்டுரைகளோடு விண்ணப்பத்தைச் சமர்ப்பிதற்கும் மிகப்பெரும் வித்தியாசம் உள்ளது..!

ஆராய்ச்சிக் கட்டுரைகள் (research articles), காப்புரிமை (patents) போன்றவை பற்றிய அறிமுகம் இளங்கலை இறுதியாண்டிலும், அவற்றை எழுதுவது எப்படி என்பதன் பயிற்சி முதுகலை முதலாண்டிலும் அறிவியல் மாணவர்களுக்கு பாடத்திட்டத்தில் கட்டாயம் தரப்பட வேண்டும்..! இப்புரிதல் அவர்கள் முதுகலை இரண்டாம் ஆண்டில் செய்யும் புராஜெக்ட்-ஐ எப்படி ஆய்வுக் கட்டுரையாக மாற்றுவது என்பதாகச் சென்றடையும்..! மிகப்பெரிய ஆய்விதழ்களில்தான் பிரசுரிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லையென்றாலும் தங்கள் ஆய்வு முடிவுகளுக்குத் தகுந்தாற்போல பொருத்தமான ஆய்விதழ்களில், எளியமுறையில் எப்படி அதைப் பிரசுரிப்பது என்பது மாணவ-மாணவியருக்கு பேராசிரியர்களால் கட்டாயம் கற்றுத் தரப்பட வேண்டும்..!

இந்த மாற்றம் நடக்கும் பட்சத்தில் ஆராய்ச்சியில் ஆர்வம் உடைய தமிழக மாணவர்கள் தங்களுடைய பிஎச்டி படிப்பிற்காக உலகம் முழுக்க உள்ள தரமிகு பல்கலைக்கழகங்களை சாதாரணமாக ஆக்கிரமிப்பார்கள்..! அனுபவமே இல்லாத காரணத்தால் ஆய்வுக் கட்டுரை எழுத முனைவர் பட்ட ஆய்வுக் காலத்தில் ஏற்படும் தாமதம் வெகுவாகக் குறையும்..!

மேலும் சிறிய மாத உதவித்தொகை கூட இல்லாது நம்முடைய கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் அல்லலுறும் முனைவர் பட்ட மாணவர்களின் துயரமும் குறையும்..! தவிர, பல்வேறு சர்வதேசப் பல்கலைகழகங்களிலும் பிற்காலத்தில் பேராசிரியப் பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கு இது அவர்களுக்கு பெரும் உதவியாக இருக்கும்..!

அசாத்தியம் என்று நினைப்பதை சாத்தியப்படுத்தும் முயற்சிகளில்தான் மாற்றம் நிகழும்..

அனந்தகுமார் சூசைமாணிக்கம்