அமெரிக்காவில் 2016ம் ஆண்டு அதிபர் தேர்தலின்போது, அமெரிக்க பொருட்களையே வாங்க வேண்டும், அமெரிக்கர்களுக்கே வேலை வழங்க வேண்டும் எனக்கூறி, ட்ரம்ப் பிரச்சாரம் செய்தார். அமெரிக்க அதிபராக அவர் பதவியேற்றது முதலே, வேலைவாய்ப்பில் அமெரிக்கர்களுக்கு முன்னுரிமை வழங்கும் விதமாக நடவடிக்கை எடுத்து வருகிறார்.இதன்படி, வெளிநாடுகளில் இருந்து அமெரிக்காவில் பணிபுரிய வருபவர்களுக்கு வழங்கப்படும் எச்1பி விசாவுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அமெரிக்காவில் நிரந்தரமாக வசிக்க உதவும் கிரீன்கார்டுக்கு விண்ணப்பித்து இருந்தால், அது வரை எச்1பி விசாவை நீட்டிக்க வாய்ப்பு வழங்கப்பட்டு வந்தது. ஆனால் இதற்கு தடை விதித்து அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்பு துறை உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆம்.. இப்பொழுது கிரீன் கார்டு கோரி விண்ணப்பித்தவர்களுக்கு விசா நீடிப்பை நிறுத்திவிடலாம் என்று அமெரிக்க அரசு கருதுகிறது.
இ த்தனைக்கும் தற்போது பத்துலட்சம் பேர் கிரீன் கார்டு கோரி விண்ணப்பித்து விட்டு அதற்காக காத்திருக்கிறார்கள். இந்த பத்துலட்சம் பேரில் பெரும்பான்மையினர் இந்தியர்கள். விசா நீடிப்பை அமெரிக்கா நிறுத்தினால் உடனடியாக பத்துலட்சம் பேருக்கான வேலை வாய்ப்பு பறி போகும் என எதிர்பார்க்கப்படுகிறது. நம் இந்தியாவில் புதிய வேலைவாய்ப்புகள் மிகவும் குறைவாக உள்ளன. இந்நிலையில் அமெரிக்காவும் வாய்ப்புகளை மூடுவது இந்தியாவுக்கு பேரும் சிக்கலாக அமையும் எனக் கூறப்படுகிறது.