AanthaiReporter.Com | Tamil Multimedia News Web ⚡ AMP

டிரெண்ட் மோகமும் பயோமெட்ரிக் அபாயமும்: ஏஐ புகைப்பட மோகத்தின் மறுபக்கம்!

By admin | Sep 10, 2026

ன்ஸ்டாகிராம் மற்றும் ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களைத் திறந்தால் போதும், பயனர்களின் எண்பதுகளின் கால கட்ட ட்ரெண்ட் புகைப்படங்களே எங்கு பார்த்தாலும் நிரம்பிக் கிடக்கின்றன. ஜென்-சீ தலைமுறையினர் மட்டுமல்லாமல், எண்பதுகளில் பிறந்த மில்லனியல்களும் தங்களை இந்த டிரெண்ட் கேமில் இணைத்துக் கொண்டு குதூகலித்து வருகின்றனர். மகிழ்ச்சி, வெறுப்பு அல்லது பச்சாதாபம் எதுவாக இருந்தாலும் இப்போதெல்லாம் அது ஒரு கும்பல் மனப்பான்மையாகவே சமூக வலைதளங்களில் பிரதிபலிக்கிறது. இது போன்ற வைரல் மோகங்கள் தற்காலிகமான மகிழ்ச்சியைத் தந்தாலும், இதன் பின்னணியில் உள்ள ஆபத்துகளைப் பலரும் சிந்திப்பதில்லை.

வைரலாகும் ஏஐ டிரெண்டுகளின் பின்னணி

தற்போது பரவி வரும் எண்பதுகளின் ரெட்ரோ ஸ்டைல் புகைப்படங்களுக்கு முன்னர் பல விதமான ஏஐ டிரெண்டுகள் இணையத்தை வலம் வந்தன. அதில் ஜப்பானிய அனிமேஷன் ஸ்டுடியோவின் பாணியில் புகைப்படங்களை மாற்றும் ஜிப்லி ஸ்டைல், கூகுளின் ஜெமினி ஏஐ மூலம் படங்களை உருவாக்கும் நானோ பனானா மற்றும் தங்களை ஒரு பொம்மை அல்லது சிற்பம் போல மாற்றிக்கொள்ளும் சேகரிக்கக்கூடிய பொம்மை போன்ற பல டிரெண்டுகள் மக்களின் ஆர்வத்தால் தொடர்ச்சியாக வலம் வந்தன. இதுபோன்ற ரெட்ரோ ஸ்டைல் படங்களை உருவாக்குவதற்காக நாம் நம்முடைய சொந்த புகைப்படங்களை ஏஐ செயலிகளில் அப்லோட் செய்கிறோம். ஆனால், அந்தப் புகைப்படங்களை அதன்பிறகு நம்மால் முழுமையாக அழிக்கவே முடியாது என்பதைப் பலரும் மறந்துவிடுகின்றனர். சாட் ஹிஸ்டரியில் இருந்து அவற்றை டெலீட் செய்துவிட்டாலும், சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் சர்வர்களில் அதற்கான பிரதி தொடர்ந்து இருக்கும். அதுமட்டுமின்றி, நமது பாசக்கார உறவினர்கள் மற்றும் நண்பர்கள் எனப் பலரும் அந்தப் படங்களை டவுன்லோட் செய்திருக்க வாய்ப்புள்ளது.

முகம் என்பது வெறும் படமல்ல, அது ஒரு பயோமெட்ரிக் தரவு

இந்த புகைப்படங்கள் இணையத்தில் இருப்பதில் என்ன தவறு, அது நல்லதுதானே என்று எண்ணுபவர்கள் கவனத்திற்கு, அது முற்றிலும் தவறு. நமது முகம் என்பது வெறுமனே ஒரு படம் மட்டுமல்ல, அது ஒருவிதமான பயோமெட்ரிக் டேட்டாவாகும். இன்றைய உலகம் பாஸ்வேர்டுகளைக் கைகழுவத் துடித்துக்கொண்டிருக்கிறது, அதற்கடுத்த மாற்றுவழியாக பயோமெட்ரிக் தொழில்நுட்பமே பார்க்கப்படுகிறது. முகம் என்பது மிக எளிதில் கிடைக்கக்கூடிய பயோமெட்ரிக் தரவாகும், அதற்கு ஒரு கேமரா மட்டுமே போதுமானது. ஏஐ படங்களை உருவாக்க ஹை-ரெசல்யூஷன் எனப்படும் தெளிவான புகைப்படங்கள் அவசியமாகின்றன, இதன் மூலம் ஒருவரின் முகத்திலிருந்து பல்வேறு ரகசியத் தகவல்களை எளிதாக உறிஞ்ச முடியும்.

குழந்தைகளின் எதிர்காலமும் பிரைவசி சிக்கல்களும்

தங்களின் சொந்தப் படங்களை அப்லோட் செய்பவர்களை ஒருகணம் மன்னிக்கலாம், ஆனால் பலரும் தங்களது பச்சிளம் குழந்தைகளின் புகைப்படங்களையெல்லாம் சேர்த்து இதுபோன்ற செயலிகளில் அப்லோட் செய்கிறார்கள். இவர்களில் பலருக்கும் டிஜிட்டல் பிரைவசி குறித்த தெளிவான புரிதல்கள் இருப்பதில்லை. அந்தக் குழந்தைகள் வளர்ந்து பெரியவர்களாகும்போது, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பன்மடங்கு கூரானதாக மாறியிருக்கும். அவர்களின் ஒப்புதல் இல்லாமல் அவர்களின் முகத் தரவுகளைச் சகட்டுமேனிக்கு இணையத்தில் அப்லோட் செய்வது எந்தவிதத்தில் நியாயம்? இதன் நீண்ட கால விளைவுகள் எவ்வாறு இருக்கும் என்பதை இப்போதே கணிப்பது மிகவும் கடினமான காரரியமாகும்.

தகவல் திரட்டும் தூண்டில் வலைகள்

இதுபோக இன்னும் ஒரு பெரிய சிக்கலும் இதில் அடங்கி இருக்கிறது. நாம் அப்லோட் செய்யும் புகைப்படங்களில் நமது முகம் மட்டும் தனியாக இருப்பதில்லை; அதன் பின்னணியில் உள்ள இன்ன பிற பொருட்களும் பதிவாகின்றன. இவற்றின் மூலம் நீங்கள் வசிக்கும் இடம், உங்களின் விருப்பு வெறுப்புகள், வாழ்க்கை முறை என அனைத்து விதமான ரகசிய விவரங்களையும் ஒரு ஏஐ மாடலால் மிகத் துல்லியமாகக் கணிக்க இயலும் என்பது மிகவும் திகிலூட்டும் ஒரு தகவலாகும். இதுவும் ஒருவகையிலான தகவல் சேகரிக்கும் வழிமுறைதான், எளிமையாகச் சொன்னால் இது மக்களுக்கான ஒரு தூண்டில் மீன் போன்றது ஆகும். அப்லோட் செய்பவர்கள் பலருக்கும் இந்தத் தீவினைகள் எல்லாமே நன்றாகத் தெரியும், ஆயினும் ஏன் இதைத் தொடர்ந்து செய்கிறார்கள் என்ற கேள்வி எழுகிறது.

FOMO மனநிலை மற்றும் ஏஐ குறித்த தவறான பார்வைகள்

ஊரே செய்யும்போது நாம் மட்டும் விலகியிருக்க அசாத்தியத் துணிச்சல் வேண்டும், மிஸ் செய்துவிடுவோமோ என்ற பயம் (Fear of Missing Out – FOMO) மனிதர்களைச் பொத்தவரை இயல்பான ஒன்றாகும். நீரோட்டத்துடன் செல்வது எளிது, ஆனால் எதிர்த்து நீந்துவது மிகவும் கடினமான செயலாகும். இந்த வைரல் புகைப்படங்கள் சில தினங்கள் மட்டுமே தொடரும், அதன் பின்னர் ஒரு சிறிய ஓய்வு கிடைக்கும். பின்னர் மீண்டும் வேறொரு புதிய டிரெண்ட் வரும், அப்போதும் கூட நாம் எந்தவித சலிப்புமின்றி மீண்டும் புகைப்படங்களை அப்லோட் செய்வோம். ஒருபுறம் ஏஐ மாதிரிகள் நமது கைமீறிப் போய்விட்டன என்று நிபுணர்கள் கதறிக் கொண்டிருக்கின்றனர், இன்று அதுவுமே கூட ஒரு டிரெண்டாக மாறிவிட்டது. செயற்கை நுண்ணறிவை மொத்தமாகக் கொடூர வில்லன் போலச் சித்தரிப்பதோ அல்லது வாலாட்டும் நாய்க்குட்டி போலச் செல்லம் கொஞ்சிக் கொண்டிருப்பதோ – இந்த இரண்டு நிலைப்பாடுகளுமே முற்றிலும் சரியானவை அல்ல.