ஆண்டுதோறும் நவம்பர் மாதம் 25-ஆம் தேதி ‘பெண்களுக்கு எதிரான அனைத்துலக வன்முறை ஒழிப்பு நாளாக’ (International Day for the Elimination of Violence Against Women) உலகம் முழுவதும் கடைப்பிடிக்கப்படுகிறது. குடும்ப வன்முறை, பாலியல் வன்முறை, பணியிடப் பாகுபாடு, அதிகார துஷ்பிரயோகம், பெண் சிசுக்கொலை மற்றும் குழந்தைத் திருமணம் எனப் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிராக இழைக்கப்படும் அனைத்து விதமான அநீதிகளையும் வேரறுக்க வேண்டும் என்ற நோக்கோடு ஐக்கிய நாடுகள் சபையால் இந்த நாள் பிரகடனப்படுத்தப்பட்டது.
நீதியும் பாதுகாப்பும்: 2026-ஆம் ஆண்டின் இலக்கு
இந்த 2026-ஆம் ஆண்டிற்கான ஐக்கிய நாடுகள் சபையின் அதிகாரப்பூர்வக் கருப்பொருள், “பெண்கள் மற்றும் பெண்குழந்தைகளுக்கு எதிரான வன்முறையை முடிவுக்குக் கொண்டுவர ஒன்றுசேருங்கள்: நீதியை உறுதிசெய்யுங்கள், பிழைத்தோரைப் பாதுகாக்கவும், தண்டனையின்றித் தப்பித்தலை முடிவுக்குக் கொண்டுவாருங்கள்” (UNiTE to End Violence Against Women and Girls: Ensure justice, protect survivors, end impunity) என்பதாகும்.
வெறும் விழிப்புணர்வுப் பிரச்சாரங்களோடு நின்றுவிடாமல், குற்றவாளிகளுக்குத் தண்டனை பெற்றுத் தருவதும், பாதிக்கப்பட்ட பெண்கள் சமூகத்தில் தலைநிமிர்ந்து வாழ அவர்களுக்கு உரிய பாதுகாப்பையும் நீதியையும் வழங்குவதுமே இந்த ஆண்டின் முதன்மை இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
வரலாற்றுப் பின்னணி: மிராபல் சகோதரிகளின் தியாகம்
இந்த நாள் உருவானதற்குப் பின்னால் ரத்தமும் கண்ணீரும் நிறைந்த ஒரு வரலாறு உள்ளது. டொமினிகன் குடியரசின் சர்வாதிகாரி ரஃபேல் ட்ருஜில்லோவின் கொடுங்கோல் ஆட்சிக்கு எதிராகப் போராடியவர்கள் பாட்ரியா, மினெர்வா மற்றும் மரியா தெரசா ஆகிய மூன்று ‘மிராபல் சகோதரிகள்’.
‘வண்ணத்துப்பூச்சிகள்’ என்று அன்போடு அழைக்கப்பட்ட இவர்கள், சர்வாதிகாரத்திற்கு எதிராக மக்களைத் திரட்டினர். இதன் காரணமாக, 1960-ஆம் ஆண்டு நவம்பர் 25-ஆம் தேதி ட்ருஜில்லோவின் ரகசியப் படையினரால் இவர்கள் மூவரும் மிகக் கொடூரமாக அடித்துக் கொல்லப்பட்டனர். அந்த வீரமங்கைகளின் தியாகத்தைப் போற்றும் வகையிலும், பெண்களுக்கு எதிரான வன்முறைக்கு எதிராகக் குரல் கொடுக்கும் வகையிலும் 1999-ஆம் ஆண்டு டிசம்பர் 17-ஆம் தேதி ஐ.நா. பொதுச்சபை நவம்பர் 25-ஐ சர்வதேச நாளாக அறிவித்தது.
மாறிவரும் வன்முறையின் வடிவங்கள்
பெண்களுக்கு எதிரான வன்முறை என்பது உடல் ரீதியான தாக்குதல்களோடு மட்டும் சுருங்கிவிடுவதில்லை. இன்றைய நவீன யுகத்தில் அது பல நுட்பமான வடிவங்களை எடுத்துள்ளது:
1. குடும்ப வன்முறை மற்றும் உளவியல் சித்திரவதை: வீட்டிற்குள்ளேயே நிகழும் உடல் ரீதியான தாக்குதல்கள், வரதட்சணைக் கொடுமை மற்றும் பெண்களின் சுயமரியாதையைச் சிதைக்கும் வார்த்தைப் பிரயோகங்கள்.
2. இணையவழி வன்முறை (Cyber Violence): சமூக வலைதளங்களில் பெண்களை அவதூறு செய்தல், தனிப்பட்ட புகைப்படங்களைத் தவறாகப் பயன்படுத்துதல், ஆன்லைன் மிரட்டல்கள் மற்றும் டிஜிட்டல் கண்காணிப்பு.
3. பணியிடப் பாகுபாடு மற்றும் பாலியல் சீண்டல்கள்: சம வேலைக்குச் சம ஊதியம் மறுக்கப்படுவது, பதவி உயர்வுகளில் பாகுபாடு காட்டுவது மற்றும் பணியிடங்களில் பாதுகாப்பற்ற சூழல் நிலவுவது.
4. பால்ய விவாகம் மற்றும் கருச்சிதைவு: கல்வி மறுக்கப்பட்டு இளம் வயதிலேயே திருமணம் செய்து வைக்கப்படுவதும், சட்டவிரோத கருக்கலைப்புகள் மூலம் பெண் சிசுக்கள் அழிக்கப்படுவதும் இன்றும் தொடரும் அவலங்களாகும்.
16 நாட்கள் செயல்பாட்டு இயக்கமும் ஆரஞ்சு நிறமும்
நவம்பர் 25-ஆம் தேதி தொடங்கும் இந்த விழிப்புணர்வு இயக்கம், சர்வதேச மனித உரிமைகள் தினமான டிசம்பர் 10-ஆம் தேதி வரை ‘பாலின அடிப்படையிலான வன்முறைக்கு எதிரான 16 நாட்கள் செயல்பாடு’ (16 Days of Activism) என்ற பெயரில் முன்னெடுக்கப்படுகிறது.
இந்த நாட்களில் ‘உலகை ஆரஞ்சு வண்ணமாக்குங்கள்’ (Orange the World) என்ற முழக்கத்துடன் ஆரஞ்சு நிறம் அடையாளமாகப் பயன்படுத்தப்படுகிறது. ஆரஞ்சு நிறம் என்பது வன்முறையற்ற, பிரகாசமான மற்றும் நம்பிக்கையான எதிர்காலத்தைக் குறிக்கிறது. உலகின் புகழ்பெற்ற நினைவுச்சின்னங்கள் கூட இந்த நாட்களில் ஆரஞ்சு நிற விளக்குகளால் ஒளிரூட்டப்படுகின்றன.
தண்டனையின்றித் தப்பித்தலை முடிவுக்குக் கொண்டுவருதல்
உலகளவில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பதற்கு மிக முக்கியக் காரணம், குற்றவாளிகள் சட்டத்தின் ஓட்டைகள் வழியாகத் தப்பித்துவிடுவதுதான். பாதிக்கப்பட்ட பெண்கள் சமூக அவமானத்திற்கு அஞ்சியும், காவல் நிலையம் மற்றும் நீதிமன்ற அலைச்சல்களுக்குப் பயந்தும் புகார் அளிக்கத் தயங்குகின்றனர்.
2026-ஆம் ஆண்டின் கருப்பொருள் வலியுறுத்துவது போல, வன்முறையிலிருந்து மீண்டு வந்தவர்களை (Survivors) சமூகம் குற்ற உணர்ச்சிக்கு உள்ளாக்காமல் அரவணைக்க வேண்டும். விரைவான நீதி விசாரணை, பாதிக்கப்பட்டவர்களுக்கான உளவியல் மற்றும் பொருளாதார மறுவாழ்வு, கடுமையான சட்ட அமலாக்கம் ஆகியவை மட்டுமே குற்றவாளிகளின் மனதில் பயத்தை ஏற்படுத்தும்.
ஆக மொத்தம் பெண்களுக்கு எதிரான வன்முறை என்பது தனிப்பட்ட ஒரு பெண்ணின் பிரச்சனை அல்ல; அது ஒட்டுமொத்த மனிதகுலத்தின் வளர்ச்சிக்கும் தடையாக இருக்கும் சமூகப் பேரிடர். சட்டங்கள் இயற்றுவதோடு அரசின் கடமை முடிந்துவிடுவதில்லை. வீட்டிலிருந்தே சமத்துவத்தை விதைப்பதும், ஆண் குழந்தைகளுக்குப் பெண்களை மதிக்கும் பண்பைக் கற்றுக்கொடுப்பதும் ஒவ்வொரு குடும்பத்தின் கடமையாகும். இந்த நவம்பர் 25-ஆம் நாளில், எந்தவொரு பெண்ணும் அச்சமின்றி வாழும் சூழலை உருவாக்கவும், நீதியை நிலைநாட்டவும் நாம் அனைவரும் ஒன்றிணைந்து உறுதியேற்போம்.
ரமாபிரபா