AanthaiReporter.Com | Tamil Multimedia News Web ⚡ AMP

பா.ஜ.க.வும் ரஜினியும் இணையலாம்! – ‘துக்ளக் ‘ குருமூர்த்தி யோசனை!

By admin | Jan 15, 2018

துக்ளக் பத்திரிக்கையின் 48வது ஆண்டு விழா சென்னை மியூசிக் அகடமியில் நடந்தது. இதில் கலந்து கொண்ட மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி விழா புத்தகங்களை வெளியிட்டார்.

இந்த நிகழ்ச்சியில் ஆடிட்டர் குருமூர்த்தி பேசிய போது, “மக்கள், இளைஞர்களை ஈர்க்கும் சக்தி திமுகவிற்கு இல்லை. அதனால், திமுக ஆட்சிக்கு வர வாய்ப்பில்லை. தமிழகத்தில் காங்கிரஸ், பா.ஜ.க வளர வேண்டும் என்றால், திராவிட கட்சிகளுடன் கூட்டணி வைக்க கூடாது. ஆண்டாள் குறித்து கவிஞர் வைரமுத்து பேசியது தவறானது. அவரை போன்றவர்களுக்கு விருதுகளை வழங்கி ஊக்கப்படுத்தக் கூடாது.

இந்து நம்பிக்கையை அவமானம் செய்வது திராவிட டி.என்.ஏ வில் உள்ளது. கடந்த 50 ஆண்டுகளாக திராவிட கட்சிகள் ஆன்மிகத்தை மறக்கடித்துள்ளனர். ஆன்மிகம் என்றால் என்ன என்பதை விளக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 12-ல் உச்ச நீதிமன்றத்தில் நடந்த சம்பவம், குழாயடி சண்டை போல் இருந்தது.

ரஜினி ஆன்மீக அரசியல் என்று கூறியது, கழக கட்சிகளை போல் தன்னுடைய ஆட்சி இருக்காது என்பதை காட்டுகிறது. தமிழக அரசியலில் ரஜினிக்கு சிறந்த வாய்ப்பு உள்ளது, பா.ஜ.க.வும் ரஜினியும் இணைந்தால் தமிழகத்தின் தலையெழுத்தை மாற்ற முடியும். கமலின் அரசியல் வருகை கழகங்களின் தொடர்ச்சியாகவே இருக்கும்” என்றார்.

இவ்விழாவில் கலந்து கொண்ட மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி,”மோடி ஆட்சிக்கு முன்பிருந்த அரசு எதற்கும் உதவாத அரசாகவே இருந்தது. ஒரு குடும்பமே நாட்டை கைபற்றி ஆட்சி செய்து வந்தது. நாட்டில் எதிர்ப்புணர்வை தூண்டுவது சில சூழ்ச்சி சக்திகள் மட்டுமே. நாட்டை பிளவுபடுத்த வேண்டும் என குரல் கொடுப்பவர்களுக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவளிக்கிறது.

பண மதிப்பிழப்பு நடவடிக்கை, ஊழலை ஒழிக்க எடுக்கப்பட்ட மிக முக்கிய நடவடிக்கை. கடினமான மனநிலையில்தான் ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கை எடுக்கப்பட்டது. ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கைக்கு பின் டிஜிட்டல் பண பரிவர்த்தனை அதிகரித்துள்ளது.

பிரதமரின் நடவடிக்கையால் நாட்டின் வரி வருவாய் அதிகரித்துள்ளது. செலவினங்களை குறைக்கும் விதமாக பாராளுமன்றம் மற்றும் அனைத்து மாநில சட்டமன்ற தேர்தல்களை ஒன்றாக நடத்துவது குறித்து விரைவில் முடிவெடுக்கப்படும்”என்று கூறினார்.

டெயில் பீஸ்:

பிரபல எழுத்தாளர் ஞாநி சங்கரன்(64) உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் காலமானார். எழுத்தாளர், நாடக ஆசிரியர், பத்திரிகையாளர், அரசியல் விமர்சகர் என பன்முகத்தன்மை கொண்டவர் ஞாநி சங்கரன். ஞாநியின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக கே.கே.நகரில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.

நேற்று கூட அவர் துக்ளக் ஆண்டு விழா குறித்து தமது முகநூலில் பதிவிட்டுள்ளார். அதில் கூறியதாவது :துக்ளக் ஆண்டு விழா வீடியோ கொஞ்ச நேரம் பார்த்தேன். குருமூர்த்தி பகிரங்கமாக பி.ஜே.பி நிலை எடுக்கிறார். சோ இவ்வளவு பகிரங்கமாக செய்ய மாட்டார். பி.ஜே.பியையும் லேசாக கிண்டல் செய்வார். குருமூர்த்தி முழுக்க முழுக்க பி.ஜே.பி சங்கப் பரிவாரத்தின் குரலாகவே ஒலிக்கிறார். இப்படி வெளிப்படையாக இருப்பது வரவேற்கத் தக்கது. முழுக்க அம்பலமானால்தான் மக்களுக்குப் புரியும் என்று தெரிவித்தார்.