கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக ஸ்மார்ட்போன்களின் அதீத வளர்ச்சி மற்றும் ஓடிடி (OTT) தளங்களின் பெருக்கம் காரணமாக தொலைக்காட்சி ஊடகம் அழிந்துவிடும் என்ற கணிப்புகள் பரவலாக நிலவி வருகின்றன. பார்வையாளர்கள் சிதறிவிட்டதாகவும், விளம்பர வருவாய்கள் டிஜிட்டல் மயமாகிவிட்டதாகவும் கூறப்பட்டாலும், தொலைக்காட்சியின் வீழ்ச்சி பற்றிய இத்தகைய அவசரமான அனுமானங்கள் உண்மையான மற்றும் பெரிய கதையைத் தவறவிடுகின்றன என்று அண்மையில் வெளியாகியுள்ள ஒரு முக்கிய ஆய்வு தெரிவிக்கிறது.
தொழில்நுட்ப மாற்றம் மற்றும் மனிதர்களின் பகிர்வுப் பழக்கம்
தொலைக்காட்சி என்பது கடந்த காலத்தில் ஒரு பெட்டி, ஒரு சேனல் மற்றும் அதற்கான பிரத்யேக இணைப்பு என்ற ஒரே கட்டமைப்பிற்குள் முடங்கியிருந்தது. ஆனால் இன்று நிலைமை முழுமையாக மாறிவிட்டது. அதே தொலைக்காட்சித் திரையில் நேர்க்கோட்டுச் செய்திச் சேனல்கள் (Linear TV) தொடங்கி யூடியூப், ஓடிடி தொடர்கள், நேரலை கிரிக்கெட் போட்டிகள் மற்றும் டிஜிட்டல் சேவைகள் என அனைத்தும் கிடைக்கின்றன. ஆனாலும், தொலைக்காட்சியுடன் தொடர்புடைய சமூகப் பழக்கவழக்கங்கள் இன்னும் மாறாமல் வலுவாக உள்ளன. கனெக்டெட் டிவி (CTV) பார்வையில் சுமார் 80 சதவீதத்திற்கும் அதிகமான நிகழ்வுகள் குடும்பத்தினருடனோ அல்லது நண்பர்களுடனோ இணைந்து ரசிக்கப்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றன. ஸ்மார்ட்போன்கள் தனிநபர் பயன்பாட்டிற்குரியதாகச் சுருங்கும் நிலையில், பெரிய திரை மனிதர்களைக் குடும்பங்களாக இணைக்கும் தன்மையைத் தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டுள்ளது.
நிகழ்நேரத் தரவுகளும் தொலைக்காட்சியின் வீச்சும்
பாரம்பரிய லீனியர் தொலைக்காட்சி சில சவால்களைச் சந்தித்து வருவது உண்மைதான் என்றாலும், அது பார்வையாளர்களின் எண்ணிக்கையில் எவ்விதச் சரிவையும் சந்திக்கவில்லை. ஈஒய் (EY) தரவுகளின்படி, லீனியர் தொலைக்காட்சி ஒவ்வொரு வாரமும் சுமார் 745 மில்லியன் மக்களைச் சென்றடைகிறது. மேலும், மாதாந்திர பார்வையாளர்களின் எண்ணிக்கையைப் பொறுத்தவரை தொலைக்காட்சி சுமார் 831 மில்லியன் மக்களை அடைய, யூடியூப் போன்ற தளங்கள் சுமார் 491 மில்லியன் மக்களை மட்டுமே சென்றடைகின்றன. கிராமப்புறங்கள் முதல் பெருநகரங்கள் வரை அனைத்துத் தரப்பு மக்களையும் ஒரே நேரத்தில் இணைக்கும் மிகப்பெரிய தளமாக தொலைக்காட்சி இன்னும் திகழ்கிறது. தேர்தல்கள், நேரலை விளையாட்டுப் போட்டிகள் மற்றும் முக்கியச் செய்தி வெளியீடுகளுக்கு தொலைக்காட்சி வழங்கும் ஒட்டுமொத்தப் பங்கு எப்போதுமே தனித்துவமானது.
விரியும் தொலைக்காட்சி உலகமும் புதிய மாற்றங்களும்
தொலைக்காட்சி அழிந்து வருவதாகக் கூறப்படும் வாதத்திற்கு மாறாக, இந்தியாவில் தொலைக்காட்சி சந்தை தொடர்ந்து விரிவடைந்து வருகிறது. தொலைக்காட்சி சந்தாதாரர்களின் எண்ணிக்கை கடந்த சில ஆண்டுகளாகத் தொடர்ந்து அதிகரித்து வருவதோடு, ஆயிரத்திற்கும் மேற்பட்ட சேனல்கள் குறிப்பாக இலவச ஒளிபரப்புச் சேனல்கள் (Free-to-Air) பெரும்பான்மையாகச் செயல்பட்டு வருகின்றன. பழைய மற்றும் புதிய தொழில்நுட்பங்கள் இரண்டும் ஒன்றுக்கொன்று மாற்றாக இல்லாமல், இணையாக வளர்ந்து வருவதுதான் இன்றைய ஊடக உலகத்தின் யதார்த்தமாகும்.
விளம்பரச் சந்தையின் புதிய முகமும் பெரிய திரையின் எழுச்சியும்
பாரம்பரிய தொலைக்காட்சிக்கான விளம்பர வருவாயில் சிறிய அளவிலான மாற்றங்கள் ஏற்பட்டாலும், கனெக்டெட் டிவி (CTV) போன்ற புதிய தொழில்நுட்பங்களின் வருகையால் ‘பெரிய திரை’க்கான ஒட்டுமொத்த விளம்பர முதலீடு கணிசமாக உயர்ந்துள்ளது. லீனியர் தொலைக்காட்சியும் கனெக்டெட் டிவியும் இணைந்து பெரிய திரை (Large Screen) என்ற புதிய பரிமாணத்தை உருவாக்கி வருகின்றன. இதன் மூலம் ஒளிபரப்பாளர்கள் தங்களது உள்ளடக்கங்களை லீனியர் டிவி, ஓடிடி, யூடியூப் மற்றும் டிஜிட்டல் தளங்கள் என அனைத்திலும் வெற்றிகரமாகக் கொண்டு சேர்க்க முடிகிறது.
மொத்ததில் தொலைக்காட்சி தனது முந்தைய ஏகபோக உரிமையைத் இழந்து வரலாம்; ஆனால் அது முழுமையாக மறைந்துவிடவில்லை. கனெக்டெட் டிவியின் எழுச்சி மற்றும் நவீன டிஜிட்டல் வசதிகள் தொலைக்காட்சியின் இரண்டாவது அங்கத்திற்கு வித்திட்டுள்ளன. ஊடகங்களின் விநியோக முறையில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றம் தொலைக்காட்சியின் முடிவல்ல, மாறாக அதன் பிரம்மாண்டமான பரிணாம வளர்ச்சியைக் குறிக்கிறது.
ஷ்யாம்