அண்மையில்தான், ‘ஆங்கிலத்தில் பேசும் இந்தியர்கள் வெட்கப்பட வேண்டிய நாள் வெகு தொலைவில் இல்லை!’ என்று நமது மாண்புமிகு உள்துறை அமைச்சர் அமித் ஷா அவர்கள் ஒருபோடு போட்டார். கூடவே, ‘நமது பண்பாடு, கலாசாரம், வரலாறுகளையெல்லாம் அந்நிய மொழியில் படித்துப் புரிந்து கொள்ள முடியாது’ என்றும் ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார். அமைச்சர் ஐயா அவர்களின் கூற்றுப்படி பார்த்தால், நாமெல்லாம் இந்தியாவில் பேசப்படும் அத்தனை மொழிகளையும் கற்றுக் கொண்டால்தான் பல்வேறு பண்பாடுகளையும் கலாசாரங்களையும் கொண்ட இந்திய வரலாற்றைப் புரிந்து கொள்ள முடியும் போலிருக்கிறது.
இது சாத்தியமா? சாத்தியமில்லை என்பது அமைச்சருக்குத் தெரியாதா என்ன? அமைச்சருடைய நோக்கமும் இலக்கும் ‘ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே கலாசாரம்’ என்பதுதான். அதற்குத் தடையாக இருப்பது ஆங்கிலம்தான். ஆங்கிலம் இருப்பதால்தானே, அதைப் படிக்கும் தென்னாட்டவர்கள் குறிப்பாகத் தமிழர்கள் வேலை தேடி வட இந்தியாவுக்கு வராமல், வெளிநாடுகளுக்கு ஓடிவிடுகிறார்கள். ஆங்கிலத்திற்கு ஆப்படித்து விட்டால்? இந்திதான் படித்தாக வேண்டும். குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓட்டுவதுபோல் இந்தியாவுக்குள்தான் வேலை வாய்ப்புகளைத் தேடி அலைந்தாக வேண்டும். உடலுழைப்புச் செய்வதற்கு எந்த மொழியுமே தேவையில்லைதான். ஆனால் மூளையுழைப்புச் செய்வதற்கு ஆங்கிலம் அவசியமாகிறது. அதனால்தான் தமிழன் ஆங்கிலத்தை ஆர்வத்தோடு படிக்கிறான். உலகெங்கும் சென்று வேலை செய்கிறான். இதுதான் அமைச்சரய்யாவுக்குப் பிரச்னை போலிருக்கிறது.
அடுத்து முருக பக்தர்கள் மாநாடு. முழுக்க முழுக்க பக்தி மாநாடு என்றுதான் சொன்னார்கள். அதெல்லாம் சும்மா, உலவாங்காட்டிக்கும் என்பது அனைவருக்குமே தெரியும். பக்தி மாநாடு என்று சொல்லப்பட்டாலும் அது 2026 தேர்தலை மனதில் கொண்ட மாநாடுதான் என்பதைக் காக்கை குருவிகளும் அறியும். ‘தேர்தல்களில் இந்துக்கள் ஒற்றுமையாக இருந்து இந்துக்களின் வாக்கு வங்கியை நிரூபிக்க வேண்டும்’ என்பது அங்கே போடப்பட்ட ஆறு தீர்மானங்களில் ஒன்று. இது பக்தியா, அரசியலா? இன்னொரு முக்கியமான தீர்மானம், இந்து சமய அறநிலையத்துறை கோயிலை விட்டு வெளியேற வேண்டும் என்பது. இதெல்லாம் தலையைச் சுற்றி மூக்கைத் தொடுகிற சாகசம். இதற்கு உண்மையான அர்த்தம் என்ன தெரியுமா? கோயில் பூஜை புனஸ்காரங்களிலிருந்து எப்படி எட்டி நிற்கிறார்களோ அப்படியே அன்றாட நிர்வாகப் பொறுப்புகளிலிருந்தும் சூத்திரர்கள் எட்டி நிற்க வேண்டும் என்பதுதான்.
ஆக, கோயில் என்பது மக்களுக்கானதா? அல்லது ஒரு குறிப்பிட்ட சிலருக்கானதா? இப்படியெல்லாம் கேட்டால், நம்மை இந்து விரோதி என்பார்கள். நாமெல்லாம் இந்துவாக இருப்பதற்கான ஒரே தகுதி, எந்தக் கேள்வியும் கேட்காமல், சூத்திரர்களாகவே இருப்பதுதான். நாம் இப்படியிருப்பதில்தான் அவர்கள் ஆதாயமும் ஆனந்தமுமடைகிறார்கள் என்பதில் வியப்பேதுமில்லை; ஆனால், தாங்கள் சூத்திரர்களாயிருப்பதிலேயே நம்மவர்களில் சிலரும் பேரானந்தம் கொள்கிறார்கள் என்பதுதான் கொடுமையிலும் கொடுமை.
‘தமிழன் என்று சொல்லடா, தலை நிமிர்ந்து நில்லடா..’ என்று நாமக்கல் கவிஞர் பாடியதைக் கோடரிக் காம்புகள் வேண்டுமானால் மறந்து போகலாம். ஆனால், உண்மையான தமிழர்கள் ஒருபோதும் மறக்க மாட்டார்கள்.