ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி பல ஆண்டுகளாக சிறையிலுள்ள பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலை குறித்து தமிழக அரசே முடிவெடுக்கலாம் என சுப்ரீம் கோர்ட் இன்று தெரிவித்துள்ளது.
முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் கருணை மனுக்கள் மீது ஜனாதிபதி மிகவும் தாமதமாக முடிவெடுத்ததாகக் கூறி, அவர்களின் தண்டனையை ஆயுள் தண்டனையாக சுப்ரீம் கோர்ட் குறைத்தது. அது மட்டுமின்றி, இந்த வழக்கில் இந்த மூவருடன் சேர்த்து ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த நளினி, (முருகனின் மனைவி), ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகியோர் ஏற்கெனவே 20 ஆண்டுகள் சிறையில் தண்டனையைக் கழித்துள்ளதால் அவர்களை விடுதலை செய்வது குறித்து தமிழக அரசு முடிவு எடுக்கலாம் என்றும் அக்கோர்ட் தெரிவித்திருந்தது.
இதை அடுத்து, 7 பேரையும் விடுதலை செய்ய தமிழக சட்டப்பேரவையில் 2014, பிப்ரவரியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இது தொடர்பாக 2014ம் ஆண்டு பிப்ரவரி 19-ஆம் தேதி தமிழக அரசு, மத்திய அரசுக்கு கடிதம் எழுதியது. இந்நிலையில், இந்த நடவடிக்கையை எதிர்த்து மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தது. இந்த மேல்முறையீட்டு மனுவை அப்போதைய தலைமை நீதிபதி எச்.எல். தத்து தலைமையிலான அரசியல் சாசன அமர்வு 2014, ஜூலை 15-ஆம் தேதி தொடங்கி 11 நாள்கள் விசாரணை நடத்தியது.
இதைத் தொடர்ந்து, 2015, டிசம்பர் 2-ஆம் தேதி அளித்த தீர்ப்பில், “மத்திய அரசின் புலனாய்வு அமைப்புகளால் தொடுக்கப்பட்ட வழக்குகளில் தண்டனைக் கைதிகளை விடுதலை செய்யும் அதிகாரம் மத்திய அரசுக்கே உண்டு. அதன்படி, தொடர்புடைய அரசுகள் என்பதை வழக்கின் தன்மைக்கு ஏற்ப மத்திய, மாநில அரசுகள் எனவும், ஆலோசனை என்ற வார்த்தையை ஒப்புதல் எனவும் கருத வேண்டும். குற்றவாளிக்கு தன்னிச்சையாக தண்டனையைக் குறைக்க குற்றவியல் தண்டனைச் சட்டம் 432 (1) பிரிவு வழி வகுக்கவில்லை. சம்பந்தப்பட்ட குற்றவாளி அளிக்கும் மனுவைப் பரிசீலித்து, அதன் மீது நீதிபதி விசாரித்து திருப்தி அடைந்த பிறகே அவரது தண்டனையைக் குறைக்க முடியும்”என குறிப்பிடப்பட்டிருந்தது.
ஆனாலும் ராஜீவ் காந்தி கொலைக் கைதிகளை விடுவிப்பது தொடர்பாக தமிழக அரசு மத்திய அரசுக்கு கடந்த 2017ஆம் ஆண்டு மார்ச் 2-ஆம் தேதி மீண்டும் கடிதம் எழுதியது. தண்டனைக் கைதிகள் சார்பிலும் சுப்ரீம் கோர்ட்டிலும் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இது தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட் நீதிபதி ரஞ்சன் கோகோய் அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ராஜூவ்காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலை குறித்து தமிழக அரசே முடிவெடுக்கலாம் என்றும் இது தொடர்பாக ஆளுநருக்கு, தமிழக அரசு பரிந்துரைக்கலாம் என்றும் தெரிவித்துள்ளது.