‘பியார் பிரேமா காதல்’, ‘ஸ்டார்’ ஆகிய வெற்றிப் படங்களைத் தொடர்ந்து இயக்குநர் இளன் முதன்முறையாகக் கதாநாயகனாக அறிமுகமாகும் ‘பியார் பிரேமா கல்யாணம்’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா இன்று திரைப்பலங்கள் மற்றும் படக்குழுவினர் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. ரைஸ் ஈஸ்ட் என்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ள இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
மாமனார் வீட்டில் மாப்பிள்ளை: வித்தியாசமான கதைக்களம்
திருமணத்திற்குப் பிறகு தனது தாய் வீட்டை விட்டு வெளியேற விரும்பாத மனைவியின் முடிவால், கணவனும் வேறு வழியின்றி மாமனார் வீட்டிலேயே சென்று வசிக்க வேண்டிய சூழல் உருவாகிறது. இந்தச் சூழலால் திருமண வாழ்க்கை, குடும்ப உறவுகள், காதல் எதிர்பார்ப்புகள் மற்றும் அதனால் ஏற்படும் நகைச்சுவையான சம்பவங்களை மையமாகக் கொண்டு முற்றிலும் புதிய கோணத்தில் இக்கதை உருவாக்கப்பட்டுள்ளது. திரைக்களத்தில் இளனுடன் இணைந்து சான்வி மேக்னா கதாநாயகியாக நடிக்க, ராதிகா சரத்குமார், யோகி பாபு, எம்.எஸ். பாஸ்கர், கீதா கைலாசம், இளங்கோ குமரவேல், நகைச்சுவை நடிகர் செந்தில், மாறன் மற்றும் டீப்ஸ் சைரஸ் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
டிரெய்லர் வெளியீட்டு விழாவில் திரைப்பிரபலங்கள் பேசியவை
இயக்குநர் வெற்றிமாறன்:
“ஒரு நடிகராக இருந்து இயக்குநராக மாறுவதற்கே பெரும் தைரியம் வேண்டும். ஆனால், அந்தத் தைரியம் இளனிடம் இயல்பாகவே இருக்கிறது. டிரெய்லரின் சில நிமிடங்களிலேயே நம்மைச் சிரிக்க வைக்கும் காட்சிகள் நிறைந்துள்ளன. நான் கூச்ச சுபாவம் கொண்டவன், என்னையே ‘ஸ்டார்’ படத்தில் இரண்டு ஷாட் நடிக்க வைத்தார். அப்போது அவர் மீது கோபம் வந்தது, ஆனால் இப்போது அவரே நடிகராகிவிட்ட நிலையில் படம் பெரிய வெற்றியடைய வாழ்த்துகிறேன்.”
நடிகை ராதிகா சரத்குமார்:
“என் பிறந்தநாளன்றே இந்தப் படம் ஓடிடீயில் வெளியாவது எனக்குக் கிடைத்த சிறந்த பிறந்தநாள் பரிசு. இது இன்றைய இளைஞர்களின் காதல், திருமணம் மற்றும் வாழ்க்கையைப் பற்றிய பார்வையையும், அதை மூத்த தலைமுறையினர் எப்படிக் கையாள்கிறோம் என்பதையும் பேசும் படம். குடும்பப் படம் என்பதைத் தாண்டி, சமுதாயத்தில் ஏற்பட்டுள்ள மனநிலை மாற்றங்களை நேர்மையாகப் படம்பிடித்துக் காட்டியுள்ளனர்.”
நடிகர் செந்தில்:
“இளனின் நடிப்பையும் கதாபாத்திரத்தையும் பார்க்கும்போது எனக்கு இயக்குநர் பாக்யராஜ் சார் நடித்த படங்களை நினைவூட்டுகிறது. திரைக்கதையிலும் இயக்கத்திலும் அவர் கலக்கியுள்ளார். அதேபோல் கதாநாயகியும் மிகவும் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.”
நடிகர் யோகி பாபு:
“‘ஸ்டார்’ படத்தில் இருந்தே நாங்கள் பேசிக்கொண்டிருக்கிறோம். ‘நிச்சயம் நாம ஒரு படம் பண்ணுவோம் சார்’ என்று சொன்ன சொல்லைக் காப்பாற்றி இதில் எனக்கு வாய்ப்பளித்துள்ளார். அடுத்து நாங்கள் இணையவுள்ள புதிய படத்தின் கான்செப்டும் மிகச் சிறப்பாக வந்துள்ளது.”
நாயகி சான்வி மேக்னா:
“ஒரே நேரத்தில் இயக்குநராகவும் நடிகராகவும் செயல்படுவது சாதாரண விஷயமல்ல. உணர்ச்சிப்பூர்வமான ஒரு காட்சிக்கு முன்பாக அவர் பதற்றமாக இருந்தபோது கேட்டதற்கு, ‘நடிகராக மாற முயற்சிக்கிறேன், ஆனால் மனதில் அடுத்த காட்சி பற்றிய சிந்தனை ஓடுகிறது’ என்றார். இயக்குநர் நிலையிலிருந்து நடிகர் நிலைக்கு மிகச் சுலபமாக மாறும் அவரது திறன் என்னை வியக்க வைத்தது. இப்படத்தில் நான் முழுமையாகத் தமிழில் டப்பிங் பேசியுள்ளேன்.”
இயக்குநர் & கதாநாயகன் இளன்:
“இயக்குநராக மட்டுமின்றி நடிகராகவும் களமிறங்கியுள்ளதால் இது எனக்கு மிகவும் முக்கியமான படம். மூத்தக் கலைஞர்கள் என் மீது நம்பிக்கை வைத்து நடித்ததற்கு நன்றி. யுவன் இசை படத்திற்குப் பெரிய பலம். முதல் பாடலாக வெளியான ‘அட்ராசிட்டி’ நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. பாடல் மற்றும் படத்தைப் பற்றி அதிகமாக சொல்லி, ரசிகர்களின் எதிர்பார்ப்பைக் குறைக்க நான் விரும்பவில்லை. அவர்கள் படத்தைப் பார்த்து, அதில் சொல்லப்பட்டிருக்கும் விஷயங்களையும், சம்பவங்களையும் தங்களுடைய அனுபவத்தோடு ஒப்பிட்டுப் புரிந்துகொள்ள வேண்டும் என்பதுதான் என்னுடைய விருப்பம்..”
இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா:
“‘பியார் பிரேமா காதல்’ படத்தில் செய்தது போல, இதிலும் முதலிலேயே முழு டிராக் லிஸ்ட்டையும் அறிவித்தோம். இது இளனுடன் இணைந்த ஒரு தனித்துவமான பாணியாக மாறிவிட்டது. நான் படத்தை முழுமையாகப் பார்த்துவிட்டேன், குடும்பத்துடன் பார்த்து ரசிக்கும்படியான சிறந்த என்டர்டெயினராக வந்துள்ளது. அதுவும் ரசிகர்களின் பிளேலிஸ்ட்டில் தொடர்ந்து இடம்பெறும் படமாகவும், மீண்டும் மீண்டும் பார்க்கத் தோன்றும் படமாகவும் இருக்கும் என்று நினைக்கிறேன்”
ஆகஸ்ட் 21 முதல் நெட்ஃபிலிக்ஸ் தளத்தில்!
காதல், குடும்ப உணர்வுகள், நகைச்சுவை மற்றும் திருப்பங்கள் நிறைந்த ‘பியார் பிரேமா கல்யாணம்’ திரைப்படம் வரும் ஆகஸ்ட் 21 முதல் உலகளவில் ‘Netflix’ தளத்தில் நேரடியாகச் ஸ்ட்ரீமிங் ஆகிறது. யுவன் சங்கர் ராஜாவின் மெல்லிசையும் பின்னணி இசையும் படத்திற்கு கூடுதல் பலம் சேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.