AanthaiReporter.Com | Tamil Multimedia News Web ⚡ AMP

நோட்டா – திரைப்பட விமர்சனம்!

By admin | Oct 05, 2018

தமிழ் சினிமாவின் தொடக்கக் காலத்தில் எக்கசக்கமான அரசியல் படங்கள் வந்தன. பின்னர் அவை பாதை மாறி புராண படம், குடும்பப்படம், காதல் படம், கிராமியப் படம், ஆக்‌ஷன் படம் என்ற ட்ராக் கில் போய் அவ்வப்போது பொலிட்டிக்கல் சடையர் படம் தயாராகி வெளி வந்தது. இடையிடையே அமைதிப்படை, மக்களாட்சி, முதல்வன், கோ, ஆயுத எழுத்து, சகுனி என்று அரசியல் நடப்பை நக்கல்  அடித்து அல்லது நாட்டு நடப்பை வெளிச்சமிட்டுக் காட்டி கொஞ்சம் வெற்றிகளையும் தோல்விகளையும் அடைந்து இருக்கிறது..அந்த வரிசையில் நோட்டா என்றொரு அரசியல் படம் ரிலீஸ் ஆகி பலரையும் ஸ்மைலி பேஸ் மூடுக்கு கொண்டு வந்திருக்கிறது.

சுந்தர தெலுங்கு தேசத்தில் ‘பெல்லி சூப்புலு’ படம் மூலம் மிகவும் பிரபலமான விஜய் தேவர கொண்டா நடிப்பில் நேரடி தமிழ் படமாக வந்துள்ளது இந்த நோட்டா. அரிமா நம்பி, இருமுகன் ஆகிய படங்களை இயக்கிய ஆனந்த் ஷங்கர் டைரக்‌ஷன், சாம்.சி.எஸ் இசையமைப்பில், சந்தான கிருஷ்ண ரவிச்சந்திரன் கேமராவை கையாண்டுள்ளார். ஸ்டூடியோ க்ரீன் நிறுவனத்தின் ஞானவேல் ராஜா, இந்த படத்தை தயாரித்துள்ளார்.

அர்ஜுன் ரெட்டி படத்தின் மூலம் தென்னிந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்த நடிகர் விஜய் தேவரகொண்டா கோலிவுட்டில் அறிமுகம். ஆனாலும் யாருய்யா இந்த ஹீரோ? என்று நம் தமிழக ரசிகர்களை கேட்க வைக்கும் அளவுக்கு ரொம்ப நீட்டான நடிப்பை வழங்கித் தனிக் கவனம் பெறுகிறார்.

ஊழல் முதலமைச்சர் நாசர் மகன் விஜய் தேவரகொண்டா. அதனால் பணக்கார அமைச்சரின் மகன் என்ன பண்ணுவாரோ அது மாதிரி குடித்து விட்டு ஆட்டம், பாட்டம், டேட்டிங் என்று ஜாலி பாயாக இருக்கிறார். அப்படியாப்பட்டவர் நண்பர்களுடன் தனது பிறந்தநாளை உல்லாசமாக கொண்டாடி விட்டு திரும்புவரை ரவுண்டப் செய்யும் போலீஸார், ”நீங்க தான் அடுத்த சி.எம், அதனால உடனே உங்கள அய்யா அழைத்து வர சொன்னார்” என்று கூற, ஷாக்காகும் விஜய், தொடர்ந்து அரை போதை யுடன் கவர்னர் இல்லத்தில் முதல்வராக பதவி ஏற்றுக் கொண்டதும், “நைட் அடித்த சரக்கு தலை வலிக்குது, கொஞ்சம் மோர் கிடைக்குமா” என்று கவர்னரிடம் கேட்பதில் இருந்து அடுத்த டுத்து அட்டகாசம் செய்கிறார். ஆரம்பத்தில் அரசியல் அப்படீன்னா என்று குழம்பும் தெலுங்கு விஜய், அப்புறம் சி.எம்.முன்னா என்ன? அவருக்கு என்ன பவர், பொறுப்பு என்பதையெல்லாம் தெரிந்து கொண்ட பின்னால் அவருகெதிரான சவால்கள், எதிர்க்கட்சி முதல் உடன் இருப்பவர்கள் வரையுள்ள எதிரிகளையெல்லாம் எப்படி சமாளிக்கிறார் என்பதே மீதி கதை.

அதுவும் மறைந்த ஜெயலலிதாவின் காலில் விழும் அமைச்சர்கள் ஸ்டைலில் ஆரம்பித்து, செம் பரம்பாக்கம் ஏரி திறப்பு, கண்டெய்னரில் பல கோடி, கூவத்தூர் கூத்து, நம்பிக்கை வாக்கெடுப்பு என தமிழ்நாடு அரசியலில் நடந்த பல கலாட்டக்களை நினைவுக்கு கொண்டு வரும் வகையில் உருவான வெட்டாட்டம் ஷான் கருப்பசாமியின் நாவலில் பல விவகாரங்களை வைத்து திரைக் கதையை அமைத்திருக்கிறார் இயக்குநர் ஆனந்த் சங்கர்.  ஆனாலும் ஒரேயொரு அரசியல் கட்சியில் நடந்தவைகளை மட்டுமே நினைவூட்டி நக்கல் செய்திருப்பது. இருந்தாலும், நாட்டில் எவை அதிகமாக விமர்சிக்கப்பட்டதோ அதையே அவர் கடுமையாக விமர்சித்திருப்பதோடு, ரசிக்கும்படியான ஒரு படமாகவும் கொடுத்திருக்கிறார்.

தமிழில் அறிமுகம் ஆகியிருக்கும் விஜய் தேவரகொண்டாவுக்கென் பொருத்தமாக அமைந்த ரோல் என்பதால் புகுந்து விளையாடுகிறார். அதிலும் தமிழில் சொந்தக் குரலில் பேசி அசத்தி இருக்கிறார். இவருக்கு மேலும் தமிழ் வாய்ப்புகள் வரவும் நம்மூர் ஹீரோகளுக்கு அதனால் சான்ஸ் போகவும் வாய்ப்பு அதிகம். நடிகர் & எடிட்டர் சோ ரோலில் அதாவது முதல்வரின் ஆலோசகராகவும் பத்திரிகை ஆசிரியராக சத்யராஜ், கேஷூவலாக வந்து கவர்கிறார், அதற்காக யங் ஏஜ் கெட் அப்-பெல்லாம் ரொம்ப ஓவர். முதல்வராக நடித்த நாசரும் வழக்கம் போல் அசத்துகிறார். எம்.எஸ். பாஸ்கர், எதிர்க்கட்சி தலைவரின் மகளாக நடித்திருக்கும் நடிகை, போலீஸ் உயர் அதிகாரி என்று படத்தில் நடித்திருப்பவர்கள் பலரும் கொடுத்த கேரக்டரை புரிந்து செய்திருக்கிறார்கள். சாம் சி.எஸ்-சின் பின்னணி இசை, காட்சிகளுக்கு கூடுதல் பலத்தை கொடுக்கிறது. ஆனால் பாடல் மனசில் நிற்கவில்லை. சந்தான கிருஷ்ண ரவிச்சந்திரனின் கேமரா சிறப்பு.

இன்னும் நமக்கு தெரிந்த அந்த விஷயத்தை சேர்த்திருக்கலாம்.. இந்த சீனை இப்படி மாற்றி இருக்கலாம், இதெல்லாம் தேவை இல்லை என்றெல்லாம் சொல்ல சில பல காட்சிகள் உண்டு என்றாலும் நீண்ட இடைவெளிக்கு பின் வந்திருக்கும் இந்த அரசியல் நையாண்டி படம்  தனி  மெஜாரிட்டியுடன் நம் தமிழ் ரசிகர்களின் மனதை கவரும் என்பது நிச்சயம்.

மார்க் 3.5 / 5