AanthaiReporter.Com | Tamil Multimedia News Web ⚡ AMP

மெளன மொழிகள் – விமர்சனம்!

By admin | Nov 26, 2026

அழகு என்பது புறத்தோற்றத்தின் கவர்ச்சியிலும், அகத்தின் குணநலன்களிலும் என இருபுறமும் விரிந்து கிடக்கும் ஒரு பன்முகத் தன்மை கொண்டதாகும்; முதல் பார்வையிலேயே மனதைக் கவரும் முகச்சாயல், உடல்வாகு மற்றும் உடை அலங்காரம் ஆகிய தோற்ற அம்சங்கள் ஒரு தற்காலிக ஈர்ப்பையும், காட்சி ரசனையையும் தரும் வல்லமை கொண்டவை என்றாலும், காலம் செல்லச் செல்லவும் நெருங்கிப் பழகும் சூழல்களிலும் ஒருவரை மனதில் நிலைநிறுத்துவது அவரது குணாதிசயங்களே ஆகும். ஆம்.. அழகு என்பது வெறும் கண்ணுக்குத் தெரியும் வடிவமோ அல்லது வெற்றுக் குணமோ மட்டுமல்ல; தோற்றம் தரும் முதல் ஈர்ப்பைத் தாண்டி, மனித உறவுகளையும் சமூக மதிப்பையும் ஆழமாகக் கட்டமைக்கும் ஆற்றல் கொண்ட குணநலன்களே உண்மையானதும் நிலையானதுமான அழகாக மிளிர்கின்றன என்பதை எடுத்துச் சொல்லும் சினிமாவே மெளன மொழிகள்

கதையும், களமும்

மாடலிங் உலகில் உயரங்களைத் தொட்டு, மிஸ் இந்தியா கிரீடத்தைச் சூட வேண்டும் என்ற தீராத வேட்கையோடு முன்னேறும் பவித்ரா என்ற அர்ச்சனா, தனது விடாமுயற்சியால் மிஸ் சென்னை பட்டத்தை வென்று கவனத்தை ஈர்க்கிறார். வழக்கமான சினிமா நாயகர்களின் வன்முறைச் சுழல்களில் சிக்காமல், விளம்பர நிறுவனம் நடத்துவதோடு ரத்ததானம் உள்ளிட்ட சமூக நலப் பணிகளிலும் தன்னை இணைத்துக் கொள்ளும் கதிர் என்ற ஷகீர் மனோ, தற்செயலான தருணங்களில் பவித்ராவை எதிர்கொண்டு சிறுசிறு உரசல்களுடன் பயணிக்கத் தொடங்குகிறார். விளம்பர வாய்ப்பு முதல் தொடக்கக் கட்டக் கோபம் வரை இவர்களுக்குள் விரியும் முரண்கள், காலப்போக்கில் ஆழமான காதல் உணர்வாகக் கனிந்து கதையின் ஓட்டத்தை விறுவிறுப்பாக்குகின்றன.

இப்படிப் பயணிக்கும் வாழ்வில் குறுக்கிடும் ஒரு கோர விபத்து பவித்ராவின் முகத்தில் அழுத்தமான காயங்களை ஏற்படுத்தி, தன்னைப் பிறர் பார்வையிலிருந்து மறைத்துக் கொள்ள வேண்டிய இக்கட்டான சூழலுக்கு அவரைத் தள்ளுகிறது. முகத்தைப் பார்க்காமலேயே பவித்ராவின் உண்மையான ஆளுமையைப் புரிந்துகொண்டு அவர் மீது நேசம் கொள்ளும் கதிர் தன் காதலை வெளிப்படுத்தும்போது, அதைப் பவித்ரா ஏன் மறுக்கிறார், இருவரின் வாழ்விலும் அடுத்து நிகழ்வது என்ன, அந்தக் காதல் கைகூடியதா இல்லையா என்பதே ‘மௌனமொழிகள்’ திரைப்படத்தின் மீதிக்கதையாக விரிகிறது.

நடிப்பும், கதாபாத்திரமும்

நாயகன் கதிர் வேடத்தில் தோன்றும் ஷகீர் மனோ, முதல் பார்வையில் புற அழகில் மனதைப் பறிகொடுப்பதும், பின்னர் தோற்றம் மாறும் இக்கட்டான சூழலில் மனவுணர்வுகளைச் சுமந்து நிற்பதும் அந்தக் கதாபாத்திரத்தின் பயணத்திற்குப் பொருத்தமாக அமைந்துள்ளன; அதிலும் சண்டைக் காட்சிகளில் தேவையான வேகத்தையும் ஆக்ரோஷத்தையும் மிக இயல்பாக வெளிப்படுத்தியுள்ளார். பவித்ராவாக வரும் அர்ச்சனா சிங், பாத்திரத்திற்கேற்ற இயல்பான தோற்றப் பொருத்தத்தோடு, தொடக்கக் காட்சிகளில் ஷகிருடன் ஏற்படும் சிறுசிறு மோதல்களையும், அதன்பின் விரியும் உணர்வுபூர்வமான தருணங்களையும் கவனமாகக் கையாண்டு கதைக்கு வலு சேர்க்கிறார்.

பல தொலைபேசி எண்களில் மாறி மாறிப் பேசித் தன்னைச் சுற்றிப் புதிய சிக்கல்களை இழுத்துக்கொள்ளும் திவ்யா நாகேஷ், ஷகீரின் மனதில் பவித்ரா இருப்பது நன்கு தெரிந்தும் பின்வாங்காமல் துரத்தும் பாத்திரத்தில் வேகமும் கலகலப்புமான நடிப்பைக் கொடுத்திருக்கிறார். மற்றொரு முக்கியக் கதாபாத்திரத்தில் தோன்றும் ஸ்ரீமன், நட்பு வட்டத்தில் சிரிப்பும் துள்ளலுமாக வலம் வரும் அர்ஜூனன் நந்தகுமார், மற்றும் தலைவாசல் விஜய், மீரா கிருஷ்ணன், இளவரசன், அஞ்சலி தேவி ஆகியோரின் நடிப்பும் திரைக்கதையின் ஓட்டத்திற்குச் சரியான சமநிலையையும், கதைக்குத் தேவையான அழுத்தமான துணை பலத்தையும் சேர்த்திருக்கிறது.

டெக்னிஷியன்ஸ்

காதல் நெகிழ்ச்சி, துள்ளல் இசை, கானா பாலாவின் குரல் மற்றும் ரிஷாவின் குத்தாட்டத்திற்கேற்ற பாடல்கள் எனப் பல்வகைச் சுவைகளை ந.ல. இளந்திரையனின் இசையமைப்பு படத்திற்கு வழங்குகிறது; குறிப்பாகக் கர்நாடக ராகச் சாயலிலான ‘காற்றே நீ தூது செல்வாயோ’ மென்மையாக வருடும்போது, ‘டிமிக்கி கொடுக்குறா’ வேகமான தாளத்தால் உற்சாகத்தைக் கிளப்புகிறது, அதே நேரத்தில் சில காட்சிகளில் பின்னணி இசையின் ஒலிச்செறிவு சற்று உரத்ததாக ஒலிக்கிறது. சென்னை நகரத்தின் வெளிப்புறங்கள், பூங்காக்கள் மற்றும் கடற்கரைப் பகுதிகளில் விறுவிறுப்பாகச் சுழன்று, காதலின் மென்மையையும் உணர்ச்சிகளின் ஆழத்தையும் நேர்த்தியாகக் காட்சிப்படுத்தியிருக்கிறது எம்.ஜி. ராயின் ஒளிப்பதிவு.

கதை சொல்லல், திரைக்கதை அமைப்பு மற்றும் காட்சி வடிவமைப்பு ஆகியவற்றால் பல பத்தாண்டுகளுக்கு முந்தைய பழைய சினிமா காலத்திற்கே பார்வையாளர்களை இட்டுச் செல்லும் இப்படம், புற அழகைக் கடந்த காதலே உண்மையானது என்ற கருத்தை முன்வைக்கிறது. எக்காலத்திற்கும் பொருந்தக்கூடிய அந்த மையக் கருத்தும், தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பும் படத்தின் குறிப்பிடத்தக்க அம்சங்களாக நிற்கின்றன.

முத்தாய்ப்பு பார்வை

வெளிப்புற வனப்பையும் தாண்டி ஆத்மார்த்தமான நேசம் காலத்தை வெல்லுமா என்ற கேள்வியைத் தொட்டிருப்பதுதான் ‘மௌனமொழிகள்’ படத்தின் உயிர்நாடி; ஆனால் அந்தக் கேள்விக்கான பதிலைத் தேடும் பயணத்தில், கதாபாத்திரங்களின் உள்மனப் போராட்டங்களும், காட்சிக்குக் காட்சி நகரும் திரைக்கதையின் ஓட்டமும் இன்னும் கூர்மைப்படுத்தப்பட்டிருக்க வேண்டும் என்ற எண்ணம் மேலோங்குகிறது. தொடக்கத்தில் உருவாகும் எதிர்பார்ப்பின் விறுவிறுப்பைக் கதையின் நடுப்பகுதியிலும் இறுதியிலும் தக்கவைப்பதில் சற்றுத் தொய்வு தெரிவதால், மையக் கருத்தின் வீரியம் முழுமையாக வெளிப்படாமல் போகும் தருணங்கள் உருவாகின்றன.

மனித மனங்களின் இயல்பான தவிப்புகளையும் உறவுகளின் நுட்பங்களையும் பேசும் நல்ல விதை இப்படத்தில் இருந்தாலும், அதைக் காட்சிப்படுத்தும் விதத்தில் இன்னும் ஆழமான கற்பனையும், துடிப்பான நகர்வுகளும், அழுத்தமான உணர்வுக் குவியல்களும் சேர்ந்திருந்தால், இந்தப் படைப்பு பார்வையாளர்களின் மனதில் நீங்கா இடத்தைப் பிடித்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

ரேட்டிங் – 2.25/5