பிரமாண்டாமன திட்டத்துடன் ஈரோடு மண்டல திமுக., மாநாடு நேற்று ஈரோடு பெருந்துறை சரளையில் தொடங்கியது. மாநாட்டையொட்டி மைசூர் அரண்மனையை போன்று பிரமாண்டமான முகப்பும், உட்புறம் இரண்டாவது முகப்பும் கட்சியினரை மட்டுமின்றி பார்வையாளர்களையும், பொதுமக்களையும் பெரிதும் கவர்ந்தது. நேற்று கட்சியினர் பலரும் குடும்பம், குடும்பமாக மாநாட்டிற்கு வருகை தந்து இரவு மாநாட்டு பந்தலிலேயே தங்கி, இரண்டாம் நாளான இன்றும் மாநாட்டில் பங்கேற்றுள்ளனர். இம்மாநாட்டில் தமிழகத்தில் நடைபெற்றுவரும் அதிமுக ஆட்சி இன்னும் ஒரு மாதத்தில் முடிவுக்கு வரும் என்றும், அதிமுக எம்எல்ஏகள் தகுதிநீக்கம் தொடர்பான வழக்கில் உயர்நீதிமன்ற தீர்ப்பு வந்ததும் தமிழகத்தில் ஆறு மாத காலத்திற்கு ஆளுநர் ஆட்சி நடைபெறும் வாய்ப்பு உள்ளது என்றும் ஈரோடு மாவட்டத்தில் நடைபெற்ற மண்டல மாநாட்டில் திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
மேலும் தமிழகத்தில் ஆட்சியை பிடித்து திமுக தலைவர் கருணாநிதிக்கு பரிசாக தரவேண்டும் என்பதை உறுதியாக நம்புவதாக தெரிவித்த ஸ்டாலின், விரைவில் வரவுள்ள சட்டமன்ற தேர்தலுக்காக கட்சித்தொண்டர்கள் தயாராக இருக்கவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். சுப்ரீம் கோர்ட்டின் வழிகாட்டுதலின்படி மேலாண்மை வாரியம் அமைக்காமல், மேற்பார்வை ஆணையத்தை அமைக்கப்போவதாக மத்திய அரசு கூறியுள்ளதை ஏற்கமுடியாது என்று கூறிய அவர், ”மேற்பார்வை ஆணையம் அமைப்பது தமிழகத்தின் உரிமைகளை பறிப்பதற்கான பகிரங்கமான எதிர்மறைச் செயல். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி தமிழகம் முழுவதும் சிறைநிரப்பும் போராட்டம் நடத்தப்படும்,” என்றார்.
குறிப்பாக திமுக தலைவர் கருணாநிதி பங்கேற்காத முதல் மண்டல மாநாடாக நடைபெற்ற இந்த மாநாட்டில் ஐம்பெரும் முழக்கங்களை திமுக செயல்தலைவர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார். ”கலைஞரின் கட்டளையை கண்போல் காப்போம், அதிகாரக் குறை அடித்துநொறுக்குவோம், தமிழரை வளர்த்து தமிழை போற்றுவோம், மதவெறியை மாய்த்து, மனிதநேயத்தைக் காப்போம் மற்றும் வளமான தமிழகத்தை வளர்த்து எடுப்போம்,” என அந்த ஐந்து முழக்கங்களை ஸ்டாலின் வாசித்தபோது, கட்சி உறுப்பினர்கள் தன்னோடு வாசிக்குமாறு கேட்டுக்கொண்டார்.
பின்னர் பேசிய அவர்,“தமிழ் மண்ணில் மதவாதத்தை நுழையவிடமாட்டோம். பெரியார், அண்ணா, கருணாநிதி கொள்கைக்கு எதிராக வாலை ஆட்ட முடியாது.வாலை ஆட்ட நினைத்தால் வாலை ஒட்ட நறுக்குவோம். முதல்வர் கனவுடன் கட்சிகள் தொடங்குகின்றனர். மீனம், மேஷம் என சிலர் ராசி பார்த்து கட்சி தொடங்க காத்திருக்கின்றனர். நான் அங்கும் இல்லை… இங்கும் இல்லை..மதில் மேல் பூனையாக ஒருவர் இருக்கிறார்.வெற்றிடத்தை நிரப்பப் போவதாக இன்னொருவர் பேசுகிறார். ஒரு வெற்றிடம் என்பது ஏற்பட்ட உடனே நிரப்பப்பட்டு விடும் என்பது அறிவியல். ஆனால் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் திமுகவில் வெற்றிடம் என்பது இல்லை .. தற்போதைய ஆட்சி கவிழ்ந்ததும் யாருடைய தயவுமின்றி திமுக ஆட்சியை அமைக்கும் அப்படி தேர்தலில் வெற்றி பெற்று திமுக ஆட்சிக்கு வரும்போது 30 ஆண்டுகளுக்கு அசைக்க முடியாது” என்றார்