கலைஞர் கருணாநிதியின் உண்மையான தொண்டர்கள் என் பக்கம் தான் இருக்கிறார்கள் என்பதை நிரூபிப்பேன் என்று மு.க.அழகிரி சவால் விடுத்திருந்ததை நிரூபிக்க வரும் செப்டம்பர் 5-ம் தேதி சென்னையில் கருணாநிதி சமாதியை நோக்கி பேரணி நடத்தப்படும் என அவர் அறிவித்துள்ளார்.
கருணாநிதி மறைவுக்கு பிறகு கடந்த வாரம் அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய மு.க. அழகிரி கருணாநிதியின் உண்மையான தொண்டர்கள் தன்னிடம் இருப்பதாகவும் உரிய நேரத்தில் இதை நிரூபிப்பேன் என்றும் கூறியிருந்தார். இதையடுத்து செப்டம்பர் 5 ம் தேதி மிகப் பெரிய அளவில் கூட்டத்தைக் கூட்டி கலைஞர் நினைவிடத்துக்கு அஞ்சலி செலுத்தப் போக வேண்டும் என்பதுதான் அழகிரியின் திட்டம். இதற்கான வேலைகளை அழகிரியின் மகன் துரை தயாநிதிதான் முன்னின்று கவனித்து வருகிறார்.
ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள மாவட்டச் செயலாளர்களுக்கு துரையிடமிருந்து போன் போயிருக்கிறது. பலர் அவருடைய போனை எடுக்கவே இல்லையாம். எடுத்தவர்களும், ‘சொல் றேன் தம்பி…’ என்று சொல்லிவிட்டுப் போனை வைத்து விட்டார்களாம். கட்சிப் பொறுப்பில் இருக்கும் யாரும் துரை தயாநிதி போனுக்கு ரெஸ்பான்ஸ் செய்யவே இல்லையாம். பொறுப்பில் இல்லாமல், அடிமட்டத்தில் இருக்கும் தொண்டர்களையாவது இழுக்க வேண்டும் எனத் தொடர்ந்து பேசிவருகிறாராம் துரை தயாநிதி. மதுரை, தேனி, திண்டுக்கல், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் மட்டும் சில நிர்வாகிகள் வருவதற்குச் சம்மதம் சொல்லியிருக்கிறார்களாம்.
இதையெல்லாம் அழகிரியிடம் சொல்லியிருக்கிறார் துரை தயாநிதி. அழகிரியோ, ‘வரேன்னு சொன்னவங்க லிஸ்டை வச்சுக்கிட்டு அவங்ககூட தினமும் யாராவது பேசுங்க. கடைசி நேரத்துல கவுத்துடப் போறாங்க. எல்லோரையும் செப்டம்பர் 4ஆம் தேதி சென்னையில் இருக்கச் சொல்லிடு. முதல்நாளே எவ்வளவு ஸ்ட்ரென்த் இருக்கு என்பதை நாம தெரிஞ்சுக்கணும். அதுக்கு எல்லா ஏற்பாடுகளையும் செஞ்சுடு. வர்றவங்களை இங்கே தங்க வைக்கவும் ஏற்பாடுகள் ரெடியா இருக்கணும்…’ என்று சொல்லியிருக்கிறாராம்.
இந்நிலையில், மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அழகிரி கூறியதாவது, “தற்போது திமுகவில் என்னை இணைப்பதாக தெரியவில்லை. நேரம் வரும் போது எனது ஆதங்கத்தை தெரிவிப்பேன். செப்டம்பர் 5-ம் தேதி நடைபெறும் கருணாநிதி சமாதியை நோக்கி செல்லும் பேரணியில் சுமார் ஒரு லட்சம் பேர் பங்கேற்பார்கள். பேரணிக்கு பின்னர் எனது முடிவை தெரிவிப்பேன்” என அவர் தெரிவித்தார்.
அப்போது ரஜினிகாந்துடன் எதிர்காலத்தில் இணைந்து செயல்படுவீர்களா என்ற கேள்விக்கு பதிலளித்த மு.க.அழகிரி, ரஜினி இன்னும் கட்சியே தொடங்கவில்லை. அரசியலில் பின்னால் நடப்பதையெல்லாம் இப்போதே சொல்ல முடியாது என்று கூறினார். தனிக்கட்சி தொடங்கும் திட்டம் உள்ளதா என்ற கேள்விக்கு பதிலளித்துள்ள அவர், கருணாநிதி என்ன நினைத்தாரோ அதன்படி செயல்படுவேன். அவர் என்னிடம் கடைசியாகக் கூறிய வார்த்தைகள் இருக்கின்றன. அதை வெளியில் சொல்ல முடியாது என்று கூறியுள்ளார்.