தமிழக தலைநகர் சென்னையின் மையப்பகுதியான நந்தனம் ஏரியாவில் அனுமதியின்றி சட்ட விரோதமாக வைத்த எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா பேனர்களை அகற்ற ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
எம்ஜிஆரின் நூற்றாண்டு விழா தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கடந்த ஓராண்டாக நடைபெற்று வந்தது. இந்நிலையில் இன்று சென்னையில் நூற்றாண்டு நிறைவு விழா நடைபெற உள்ளது. இதற்காக சென்னை ஒய்எம்சிஏ மைதானத்தில் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சபாநாயகர் தனபால் தலைமையில் நடைபெற உள்ள விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனி சாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, அமைச்சர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
இந்நிலையில் விழாவை முன்னிட்டு நகரின் பல பகுதிகளில் விளம்பர பேனர்கள் வைக்கப் பட்டிருந்தன. மேலும் அண்ணா சாலையில் நடைபாதைகளை ஆக்கிரமித்து விளம்பர பதாகைகள் வைக்கப்பட்டுள்ளதால் பெரும் சிரமமாக உள்ளதாக பாதசாரிகள் தெரிவித்திருந்தனர். இதை எதிர்த்து டிராபிக் ராமசாமி வழக்கு தொடர்ந்திருந்தார், அந்த வழக்கு இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர வழக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்த வழக்கை நீதிபதி மணிக்குமார் மற்றும் சுப்பரமணிய பிரசாத் அடங்கிய அமர்வு விசாரணையை தொடங்கியது.
அதில் ஏற்கனவே உச்சநீதிமன்றம் பேனர்களையும் , பாதாகைகளையும் அனுமதியின்றி நடை பாதைக்களில் வைக்க கூடாது என்றும் தெரிவித்திருந்தது. அதனை மீறி நடைபாதையில் பதாகை கள் வைக்கப்பட்டது குறித்து நீதிபதிகள் கேள்வியை எழுப்பினர். அப்போது, அரசுத் தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ராஜகோபால், நந்தனம் முதல் கத்திபாரா வரை 164 பேனர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும், ஒன்பதாவது மண்டலத்தில், 279 பேனர்கள் வைக்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளதாகவும், அரசு விழா என்பதால், அரசு சார்பில் 50 பேனர்கள் வைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும், அனுமதியின்றி வைக்கப்பட்ட பேனர்கள் அகற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
அனுமதியின்றி பேனர்கள் வைக்கப்பட்டுள்ளதை அரசுத்தரப்பு ஒப்புக் கொண்டதால், சம்பந்தப் பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என, டிராபிக் ராமசாமி தரப்பில் வலியுறுத்தப்பட்டது. இதையடுத்து இன்று அனுமதியின்றி சட்ட விரோதமாக வைத்த எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா பேனர்களை அகற்ற வேண்டும் என உயர்நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர். இவ்விவகாரம் தொடர்பாக விளக்கமளிக்க கோரி தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை 8ம் தேதிக்கு ஒத்திவைத்தனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோவையில் நடைபெற்ற எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவுக்காக வைக்கப்பபட்டிருந்த பதாகை விழுந்து ஒரு பொறியாளர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.