AanthaiReporter.Com | Tamil Multimedia News Web ⚡ AMP

மழை பிடிக்காத மனிதன் – விமர்சனம்!

By admin | Aug 03, 2024

பத்தாண்டு -அதாவது 2014-ம் வருடம் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியானது ‘சலீம்’ என்ற படம். சிறப்பான திரைக்கதைக்காகவும், உணர்வுப்பூர்வமான கதைக்காகவும் பெரும் பாராட்டுக்களை குவித்தது அப்படம். அந்த ‘சலீம்’ படத்தின் அடுத்த பாகமாகவே  இந்த ‘மழை பிடிக்காத மனிதன்’ படம் உருவாகியுள்ளது. அதிலும் இப்படத்தில் வித்தியாசமாக “தீயவனை அழிக்காதே.. தீயதை அழி” என்பதை சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள்.அதாவது வில்லனை கொலை செய்வதற்குப் பதிலாக அவன் நல்லது செய்திருந்தால் என்ன நடந்திருக்கும் என்பதைச் சுட்டிக் காட்டி அவனை நல்வழிப்படுத்திக் காட்டி அசத்தி இருக்கிறார்கள்

அதாவது ராணுவத்தின் ரகசிய படையில் பணியாற்றும் விஜய் ஆண்டனி, உடன் பணியாற்றும் நண்பரின் தங்கையை காதலித்து திருமணம் செய்துக்கொள்கிறார். அவரை கொலை செய்ய துரத்தும் முன்னாள் எதிரியின் தாக்குதலில் மனைவியோடு அவரும் இறந்து விட்டார் என்று நம்பப்படுகிறது. ஆனால், உயிருக்கு போராடும் அவரை காப்பாற்றும் நண்பர், மீண்டும் அவரது உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்று கருதி, இறந்தவர் இறந்ததாகவே இருக்கட்டும் என்று நினைத்து, அவரை யாருக்கும் தெரியாமல் அந்தமானுக்கு அழைத்துப் போய் விடுகிறார். அங்கு “நீ யார் என்பது இங்கு இருப்பவர்களுக்கு தெரியக் கூடாது, யாரிடமும் பேசக்கூடாது, பழகக் கூடாது” என்று கண்டிஷன் மேல் கண்டிஷன் போட்டு விட்டு செல்கிறார். ஆனாலும் உணவு விடுதி வைத்திருக்கும் சரண்யா குடும்பத்திடம் அன்பாக பழகுகி றார். இதற்கிடையில் அந்த ஊரில் வட்டிக்கு பணம் கொடுத்து வாங்கும் தாதா ஒருவரின் அராஜகம் தலைவிரித்தாடுகிறது. இதில் மேகா ஆகாஷின் குடும்பம் பாதிக்கிறது. உதவுவதற்கு யாருமே இல்லாமல் தங்கையுடன் தவிக்கும் மேகா ஆகாசுக்கு விஜய் ஆண்டனி உதவ முடிவு செய்கிறார். பலம் வாய்ந்த வட்டி தாதாவை எதிர்த்து நிற்கிறார். இதற்கிடை யில் போலீசும் விஜய் ஆண்டனியை ஒரு பக்கம் வலை வீசி தேடுகிறது. இரு தலை கொல்லி எறும்பாக சிக்கி கொணட விஜய் ஆண்டனி எடுக்கும் முடிவு என்ன? கடைசியில் அவரது கதி என்னவா கிறது என்பதற்கு பதில் சொல்வதுதான் மழை பிடிக்காத மனிதன் படக் கதை .

ஹீரோ விஜய் ஆண்டனி அதே தோற்றத்தில் வந்து அதே நடிப்பை வெளிப்படுத்துகிறார். ஆனால் ஆக்‌ஷனில் மட்டும் சரியான அதிரடியைக் காட்டி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்துவிடுகிறார். மேகா ஆகாஷ் விஜய் ஆண்டனிக்கு ஜோடி இல்லை ஆனால் அவருக்காக ஒரு காதலியின் குடும்பத்துக்கு என்னவெல்லாம் ஒரு காதலன் செய்வானோ அதை எல்லாம் செய்து முடிக்கிறார் விஜய்.

சத்யராஜ் , சரத்குமாரும் ரகசிய கோட் வேர்ட் பகிர்ந்து கொண்டு விஜயகாந்த் ரேஞ்சுக்கு தேசபக்தி வசனம் பேசுகிறார்கள். ஆனால் அது எதற்காக என்பதுதான் புரியவில்லை. அதிரடி வில்லனாக வரும் டாலி தனஞ்செயா அதிக அளவில் கவனிக்க வைத்திருக்கிறார். யாரை கொல்லப் போகிறாரோ அவர்களை மரியாதையாக நடத்தி காபியெல்லாம் கொடுத்து உபசரித்து அமைதியான முறையில் கொல்லும் அந்த வில்லத்தனம் மிரட்டல். போலீஸ் ரோலில் வந்து போகும் முரளி சர்மா ஆகியோருடன் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கும் சரத்குமார் மற்றும் சத்யராஜ் ஆகியோரின் அனுபவமான நடிப்பு படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்திருக்கிறது. சரண்யா பொன்வண்ணன், தலைவாசல் விஜய், சுரேந்தர் தாக்கூர் என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் கதையோட்டத்திற்கு பயன்பட்டிருக்கிறார்கள்.

டைரக்டர் விஜய் மில்டனே ஒளிப்பதிவும் செய்திருப்பதால் அந்தமானை இன்னும் அழகாக எக்ஸ்போஸ் செய்திருக்கிறார். பாடல் காட்சிகளையும், சண்டை காட்சிகளையும் பதிவு செய்திருக்கும்விதமே தனி அழகு. சண்டை இயக்குநருக்கு ஒரு மிகப் பெரிய பாராட்டு. சண்டை காட்சிகளை அழகாக தொகுத்தளித்திருக்கும் படத் தொகுப்பாளருக்கும் நமது பாராட்டுக்கள். விஜய் ஆண்டனி மற்றும் ராய் ஆகியோரின் இசையில் பாடல்கள் ஹிட்டடிக்கின்றன..அதிலும் ‘தீரா மழை’, ‘தேடியே போறேன்’, ‘இவன் யாரோ’ பாடல்கள் கேட்கவும், ரசிக்கவும் வைத்து நினைவிலும் இருக்கின்றன.

முன்னரே சொன்னது போல் விஜய் ஆண்டனியின் முந்தைய படத்தின் தொடர்ச்சியாக இந்த படத்தின் கதையை ஆரம்பித்து, பிறகு வேறு ஒரு களத்தில் கதையை பயணிக்க வைத்திருக்கும் விஜய் மில்டன், ”கெட்டவன கொல்ல கூடாது, கெட்டத தான் அழிக்கணும்” என்ற மெசஜோடு படத்தை முடித்திருக்கலாம்..

அடுத்த பாகத்திற்கு அடித்தளம் அமைத்திருப்பதுதான் கிலியை ஏற்படுத்தியது

ஆனாலும் இந்த மழை பிடிக்காத மனிதன் – ரசிக்கத் தகுந்தவன்

மார்க் 3/5 .