AanthaiReporter.Com | Tamil Multimedia News Web ⚡ AMP

எம்.ஆர்.பி. விலைகளை ஒரு கட்டுப்பாட்டிற்குள் வந்தே ஆக வேண்டும்!

By admin | Dec 04, 2016

நீல்கிரீஸ், ரிலையன்ஸ் ப்ரஷ், மோர், ஹெரிடேஜ் ப்ரஷ், சரவணா சூப்பர் ஸ்டோர்ஸ் இன்னும் பல பிரபல சூப்பர் மார்க்கெட்டுகளில் எல்லாம் மக்கள் கூட்டம் இன்றைக்கு நிரம்பி வழியுது. காரணம் என்னென்னா இந்த மாசத்துக்கு தேவையான வீட்டு மளிகை சாமான்கள் அத்தனையும் வேற வழயில்லாம இதுபோன்ற கடைகள்ல டெபிட் கார்டுகள் மூலமா வாங்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்காங்க. இது நல்லதா இல்லையா என்கின்ற விவாதம் பிறகு பாக்கலாம்..

பொதுவா மேலே சொன்ன அத்தனை நிறுவனங்களும் ஆஃபர் என்கின்ற பெயரில் சில பொருட்களை (பழசாகிப்போனது, எக்ஸ்பையரி டேட் மிக நெருக்கமா இருப்பது) கொடுத்துவிட்டு மத்ததெல்லாம் எம்.ஆர்.பி விலையில் வாடிக்கையாளர்கள் தலையில் கட்டிவிடு கின்றனர்.. இதே மளிகை சாமான்கள், காய்கறிகள் நம்ம வீட்டு தெருமுனையில் இருக்கும் ஒரு சாதாரண கடைக்காரரிடம் வாங்கும்போது மிகவும் விலை குறைவாகவே இருக்கும்.. தரமும் நல்லா இருக்கும். ஆனா அங்க என்னென்னா தெரிஞ்சவங்களுக்கு கடனும் தெரியாதவங்களுக்கு கேஷ் அன்ட் கேரியும் மட்டும்தான்..அவங்க டெபிட் மற்றும் கிரடிட் கார்டு ஸ்வைப்பிங் பண்றது இல்ல..

இன்றைக்கு மக்கள்கிட்ட நிலவிகிட்டு இருக்கிற லிக்யூட் கேஷ் பற்றாக்குறையால, தங்கள் கணக்கில் வரவு வைக்கப்பட்ட சம்பளப்பணத்தை மொத்தமா எடுக்கமுடியாம அன்றாட தேவைக்கு வேற வழியில்லாம இதுபோன்ற கடைகளுக்குப்போக வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டிருக்காங்க..இனி சாதாரணமாக மளிகை கடை, காய்கறிகள் கடை நடத்தும் வியாபாரிகள் முழித்துக்கொண்டே ஆகவேண்டும். இல்லை என்றால் ஒட்டுமொத்த வியாபாரமும் கார்ப்பொரேட்காரர்கள் அனைத்துத் துறைகளிலும் அள்ளிக்கொண்டு போய்விடுவார்கள்..

எம்.ஆர்.பி.. இந்த எம்.ஆர்.பி விலைகளை அரசாங்கம் ஒரு கட்டுப்பாட்டிற்கு கட்டாயம் கொண்டுவந்தே ஆக வேண்டும். ஒவ்வொரு இடத்திலும் ஒரே நிறுவனத்தின் பொருளானது ஒவ்வொரு விலையாக இருக்கின்றது.. உதாரணமாக ஏதாவது ஒரு பிராண்ட் சன்ஃபிளவர் ஆயில் என்று எடுத்துக்கொண்டால் அதன் அதிகபட்ச எம்.ஆர்.பி 125 ரூபாய் என்றால் அதே பிராண்ட் சில மளிகைக்கடைகளில் 87 ரூபாய்க்கும் , டிபார்ட்மென்டல் ஸ்டோர்களில் 95 லிருந்து 99க்கும், மேற்சொன்ன கார்ப்பரேட் கடைகளில் 115க்கும், ஆஃபர் என்கின்ற பெயரில் Buy 3 and get 1 free என்றும் விற்கப்படுகின்றது. இது எவ்வளவு பெரிய மோசடி என்று பாருங்கள்..இப்படித்தான் எம்.ஆர்.பி விலைக்கும் விற்கும் விலைக்கும் சம்மந்தமே இல்லாமல் பொருட்கள் நம் நாட்டில் விற்கப்படுகின்றது..

ஏன் இப்படி இவ்வளவு விலை என்று கேட்டால் பணிபுரியும் ஊழியர்கள் சம்பளம், மின்சார செலவு, கடை வாடகை, முதலீடு மத்த செலவுகள் இதெல்லாம் நாங்க வாடிக்கையாளர்கள் கிட்ட தானே வாங்கமுடியும் என்கின்றனர். அவர்கள் சொல்வதிலும் ஒரு நியாயம் இருப்பதாக தோன்றினாலும் இந்த அதிகபட்ச சில்லறை விலையை முறைப்படுத்த அரசு அக்கறை காட்ட வேண்டும்.. குளுகுளு ஏசி இடங்களிலும் கார்ப்பொரேட் நிறுவனங்களில் தான் நாங்கள் பொருட்கள் வாங்குவோம்ன்னு சொல்ற மேல்தட்டுமக்களுக்கு இது பெரிய விஷயமல்ல.

ஆனால் இன்றைய நிலவரப்படி சாதாரண மக்களும் இதுபோன்ற கடைகளை நாடித்தான் போக வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அவர்களுக்கு இந்த அதிகபட்ச சில்லறை விலையானது கூடுதல் சுமையாக இருக்கக்கூடும். அரசு இந்த எம்.ஆர்.பி விஷயத்தில் அதிக அக்கறை காட்டவேண்டும்..எது எப்படியோ, நாட்டில் பணமில்லா பரிவர்த்தனையை மக்கள் ஏற்றுக்கொள்ளவேண்டிய சூழ் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளார்கள். ஆனால் இந்த பணமில்லா பரிவர்த்தனைகளால் கார்ப்பொரேட் நிறுவனங்கள் தலைதூக்காமல் இருக்கவேண்டுமானால் சாதாரண வியாபாரிகளும் கேஷ்லெஸ் முறைக்கு மாறியே ஆகவேண்டும்.. வேறு வழியே இல்லை..

இனி கொஞ்ச மாதங்களுக்கு ஸ்வைப்பிங் மெஷின் தயாரிப்பாளர்களின் காட்டில் மழை..

உதய்குமார்