AanthaiReporter.Com | Tamil Multimedia News Web ⚡ AMP

‘மண்டாடி’ முன்பதிவு சாதனை:கடலில் பிறக்கும் புதிய வசூல் அலை!

By admin | Sep 07, 2026

ல சாதனைகள் படைத்து வரும் தமிழ் சினிமா இதுவரை கண்டிராத முற்றிலும் புதிய பின்னணியான பாய்மரப் படகுப் போட்டியை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ‘மண்டாடி’ திரைப்படம், திரையரங்குகளில் வெளியாவதற்கு முன்பாகவே ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அறிமுக விழாவில் காட்டப்பட்ட படகுப் போட்டி காட்சிகளும், சமீபத்தில் வெளியான விறுவிறுப்பான டிரைலரும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை பல மடங்கு உயர்த்தியுள்ளன.

திரைக்கதையின் பிரமாண்டமும் உருவாக்கமும்

ஆர்.எஸ் இன்போடெயின்மெண்ட் சார்பில் எல்ரெட் குமார் தயாரிப்பில், வி.மணிகண்டன் இணை தயாரிப்பாக உருவாகியுள்ள இந்தப் படத்தை மதிமாறன் புகழேந்தி எழுதி இயக்கியுள்ளார். ஜி.வி.பிரகாஷ் குமாரின் துடிப்பான இசை, எஸ்.ஆர்.கதிரின் பிரமிக்க வைக்கும் ஒளிப்பதிவு மற்றும் பிரதீப் ஈ.ராகவின் கூர்மையான படத்தொகுப்பு ஆகியவை படத்திற்குப் பெரும் பலமாக அமைந்துள்ளன. கலை இயக்குநர் டி.ஆர்.கே.கிரணின் நேர்த்தியான உழைப்பு, கடலும் கடல் சார்ந்த உலகத்தையும் தத்ரூபமாகத் திரையில் கொண்டு வந்துள்ளது.

பக்கா ஆக்‌ஷன் ஹீரோவாக உருவெடுக்கும் சூரி

தொடர் வெற்றிப் படங்களைக் கொடுத்து வரும் சூரி, இதில் நாயகனாக நடித்துப் பாய்மரப் படகுப் போட்டியாளராகவும், அதிரடி ஆக்‌ஷன் நாயகனாகவும் களமிறங்கியுள்ளார். கதாநாயகியாக மகிமா நம்பியார் நடிக்க, சத்யராஜ், சுஹாஸ், மிதுன் ஜெய்சங்கர், ரவீந்திர விஜய், பால சரவணன் மற்றும் ஸ்டண்ட் சிவா ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சூரியின் திரைப்பயணத்தில் அவரை ஒரு வலுவான ஆக்‌ஷன் கதாநாயகனாக நிலைநிறுத்தும் திருப்புமுனைப் படமாக இது அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

‘விடுதலை’யை விட பல மடங்கு கடும் உழைப்பைக் கோரிய ‘மண்டாடி’

‘மண்டாடி’ திரைப்படத்தின் கதையைக் கேட்டபோதே, இது ‘விடுதலை’ படத்தைப் போல மிகப்பெரிய உழைப்பைக் கோரும் ஒரு படைப்பு என்பதை உணர்ந்ததாக நடிகர் சூரி தெரிவித்துள்ளார். ஆனால், படப்பிடிப்புத் தளத்திற்குச் சென்ற பிறகுதான், ‘விடுதலை’யை விட பல மடங்கு கூடுதல் மெனக்கெடலும் அர்ப்பணிப்பும் தேவை என்பதைப் புரிந்து கொண்டதாக அவர் கூறுகிறார். முழுக்க முழுக்க மீனவர்களின் வாழ்வியலையும், அவர்களின் தனித்துவமான உலகத்தையும் பேசும் கதையாக உருவாகியுள்ள இந்தப் படத்தில், சூரி இரண்டு வித்தியாசமான தோற்றங்களில் தோன்றி ரசிகர்களை ஆச்சரியப்படுத்த உள்ளார்.

ஜல்லிக்கட்டிற்கு இணையான பாய்மரப் படகுப் போட்டி

‘மண்டாடி’ தனக்கு முற்றிலும் ஒரு புதிய உலகம் என்று குறிப்பிட்ட சூரி, இதில் பேசப்படும் பாய்மரப் படகுப் போட்டி என்பது கடலில் நடக்கும் ஜல்லிக்கட்டிற்கு இணையான ஒரு பாரம்பரிய விளையாட்டு எனக் கூறினார். ராமநாதபுரம் மாவட்டம் தொண்டிப் பகுதியில் 150 முதல் 200 படகுகள் பங்கேற்கும் இந்த சாகசப் போட்டியில், சுமார் 20 கடல் மைல் தொலைவிற்கு ரேஸ் நடைபெறும். மூன்று மணி நேரத்திற்கும் மேலாக நடக்கும் இந்தப் போட்டி சாதாரணமானதல்ல. சுழன்றடிக்கும் கடல அலையில் இருந்து உயிருடன் திரும்பி வருவதே இதில் மிகப்பெரிய சவாலாகும். இந்தப் போட்டியில் கடலின் சீற்றத்தையும் காற்றையும் வெல்வது ஒருபுறமிருக்க, உடன் போட்டியிடும் மனிதர்களின் சூழ்ச்சியையும் தாண்ட வேண்டியிருக்கும். இத்தகைய சவால்கள் நிறைந்த விளையாட்டைத் தத்ரூபமாகக் கொண்டுவர, உண்மையில் இந்தப் போட்டியில் அனுபவமுள்ள நிஜமான மீனவ வீரர்களையே படத்திலும் நடிக்க வைத்துள்ளனர்.

கடலுக்குள் நடக்கும் விறுவிறுப்பான படகுப் போட்டி மட்டுமின்றி, ஸ்டண்ட் மாஸ்டர் பீட்டர் ஹெயினின் அமைப்பில் உருவாகியுள்ள பிரமாண்டமான சண்டைக் காட்சியும் படத்தில் இடம்பெற்றுள்ளது. எதிரணி கேப்டனாக டோலிவுட் நடிகர் சுஹாஸ் நடித்துள்ள நிலையில், அவரது உழைப்பும் அர்ப்பணிப்பும் அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாகச் சூரி பாராட்டுகிறார். தயாரிப்பாளர் எல்ரெட் குமாரின் தயக்கமில்லாத ஆதரவாலேயே இந்த சினிமாப் பயணம் இவ்வளவு பிரமாண்டமாகச் சாத்தியமாகியுள்ளதாகவும் சொன்னார்.

அபாரமான முன்பதிவு வரவேற்பு

உலகமெங்கும் வரும் செப்டம்பர் 10 ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், செப்டம்பர் 6 ஆம் தேதி மாலை தொடங்கப்பட்ட முன்பதிவில் ‘மண்டாடி’ திரைப்படம் புதிய சாதனைகளைப் படைத்து வருகிறது. டிரைலர் வெளியான சில நாட்களிலேயே கோடிக்கணக்கான பார்வைகளைக் கடந்து சாதனை படைத்த நிலையில், முன்பதிவிலும் டிக்கெட்டுகள் அதிவேகமாக விற்றுத் தீர்ந்து வருகின்றன. திரையரங்குகளில் பார்வையாளர்களை இருக்கையின் நுனியில் உட்கார வைக்கும் வகையில் ஆக்‌ஷன் மற்றும் படகுப் போட்டி காட்சிகள் அமைந்துள்ளதால், தமிழ் மட்டுமின்றி பிற மொழிகளிலும் இந்தப் படம் மிகப்பெரிய வெற்றி அடையும் என்று கோலிவுட் வட்டாரங்கள் கணிக்கின்றன.