AanthaiReporter.Com | Tamil Multimedia News Web ⚡ AMP

மாமன்னன் -விமர்சனம்!

By admin | Jun 29, 2023

ஷங்கர் டைரக்ட் செய்த படங்கள் என்றால் பிரமாண்டம் என்று புரிந்து கொள்ளலாம்.. மணிரத்னம் டைரக்ட் செய்த படமென்றால் அழகியல் என்று புரிந்து கொள்ளலாம்.. கெளதம் மேனன் இயக்கிய படங்கள் டெக்னிக்கல் கலந்த முரட்டு காதல் என்று தெரிந்து கொள்ளலாம், வெங்கட் பிரபு டைரக்ஷனில் உருவானவைகளை இளசுகளின் மனநிலை எனலாம் , அட்லி படமென்றால் ரசிகர்களை கவரும் என்பார்கள்.. அந்த வகையில் இதுவரை இரண்டே இரண்டு படங்கள் மட்டுமே எடுத்த மாரி செல்வராஜ் படமென்றால் சாதிய அரசியல் படமென்பதை புரிந்து கொள்ளலாம்.. பா. இரஞ்சித் அசிஸ்டெண்டாக கோலிவுட்டில் எண்ட்ரி ஆகி அவர் தயவிலேயே லைம் லைட்டில் இருக்கும் மாரி செல்வராஜ் தன் மீது சாதி அடையாளத்தை பூசிக் கொள்வதில் பெருமிதம் கொள்கிறார்.. அதே உணர்வுடன்தான் வடிவேலு & உதயநிதி மற்றும் பன்னிக்குட்டி & நாயை வைத்து மாமன்னன் என்றொரு படைப்பை வழங்கி இருக்கிறார்.. கிட்டத்தட்ட முன்னாள் சபாநாயகர் ஒருவரின் கதையிது என்றால் மிகையல்ல..!

அதாவது ஆளுங்கட்சியின் மாவட்டச் செயலாளர் பகத் பாஸில்.. இவர் ஆதிக்க வர்க்கத்தை சார்ந்தவர். அக் கட்சி சார்பிலான பட்டியலின சமூகத்தைச் சார்ந்த எம்.எல்.ஏ வடிவேலு. வடிவேலின் மகனாக உதயநிதி ஸ்டாலின், அவரது காதலி கீர்த்தி சுரேஷ். உதயநிதிக்கு சொந்தமான இடத்தில் கீர்த்தி சுரேஷ் நடத்தி வரும் இலவச கல்வி மையத்தை பஹத் பாசிசில் அண்ணனாக வரும் சுனில் சேதப்படுத்தி விடுகிறார். இதை அடுத்து நடக்கும் பேச்சுவார்த்தையில் வடிவேலு சரிசமமாக நடத்தப்படாதது மட்டுமின்றி.. அவமானப்படுத்தப்படுகிறார்.. இதைக் கண்டு நாயகன்(?) உதயநிதி ஆவேசமடைந்து பஹத்தை தாக்கி விடுகிறார். இதனால் ஏற்பட்ட களேபரத்தால் கட்சியில் ஏற்பட்ட பிரச்சினையால் பஹத் வேறொரு கட்சிக்கு தாவி விடுகிறார். அப்புறமென்ன.. சட்டசபை தேர்தல் வருகிறது. அதே கட்சி சார்பில் வடிவேலு நிற்கிறார். அதை அடுத்து ஆதிக்க வர்க்கத்தினர் வடிவேலுவுக்கு எதிராக செய்யும் சில பல சம்பவங்களே மாமன்னன் படத்தின் கதை

இப்போது முழு நேர அரசியல்வாதியாகி விட்ட ஓ கே ஓ கே நாயகன் உதயநிதி ஸ்டாலின் இந்த கேரக்டரின் கனமறிந்து இயல்பான அதே சமயம் அதிவீரன் என்ற கதாபாத்திரமாகவே வாழ்ந்துள்ளார். ஆரம்பத்தில் அப்பா வடிவேலும் பேச்சை கேட்காமல் கோவப்பட்டும், பிறகு அப்பாவின் ஒரு சொல்லிற்கு அடிபணியும் கோபக்கார இளைஞனாக அசத்தியுள்ளார்.வடிவேலு தனது அசத்தலான நடிப்பு மூலம் மாமன்னன் என்ற கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்த்திருக்கிறார். அதிகாரம் இருந்தும் தன் ஆழ் மனதுக்குள் இருக்கும் பயத்தால் அவர் தடுமாறும் காட்சியில் நடிப்பில் அசத்தியிருப்பவர், சிலபல இடங்களில் வெற்றிடத்தை விதைத்து விட்டு செல்வதுதான் வேதனை.ஆம்.. தான் செய்யும் இந்த ரோல் எடுபடுமா என்று பல இடங்களில் அவரேக் கேட்டு சொதப்பி இருப்பது அப்பட்டமாக தெரிகிறது.. ஆனாலும் கோலிவுட் இப்படியொரு வடிவேலுவை ரசிக்குமா என்பது சந்தேகமே..!

பந்தயத்தில் தோற்றுப் போன நாயை அடித்தே கொல்லும் காட்சி ஒன்றில் அறிமுகமாகும் ஃபஹத் ஃபாசில்தான் திரையெங்கும் பரவி இருக்கிறார்.. ஆரம்பம் முதல் இறுதிக் காட்சி வரை கண்களின் மூலமே அனைவரையும் கட்டி இழுக்கிறார். ரசிகர்கள் ஒவ்வொரு மனதிலும் கோபம் வரும் அளவிற்கு அசாத்திய நடிப்பை கேஷூவலாக ஆக வெளிப்படுத்தி அப்ளாஸ் வாங்கி உள்ளார். கீர்த்தி சுரேஷூக்கு கிடைத்திருப்பது இதுவரை அவர் நடித்திடாத ஒரு கேரக்டர், அதனை புரிந்து ஸ்கோர் செய்கிறார்.

கேமராமேன் தேனி ஈஸ்வர்,மூன்று மெயின் கேரக்டர்கள் மற்றும் அவர்கள் சம்மந்தப்பட்ட காட்சிகளுக்கு மூன்று விதமான வண்ணங்களை பயன்படுத்தி வாவ் சொல்ல வைத்திருக்கிறார். படத்தில் நடித்திருக்கும் நட்சத்திரங்கள் மற்றும் கதைக்களத்தை காட்சிப்படுத்திய விதம் நம் கண்கள் திரையை விட்டு அகலாத வகையில் இருக்கிறது.

ஆஸ்கார் வின்னர் ஏ.ஆர்.ரஹ்மான் பின்னணி இசை ஆவணப்படுத்த வேண்டிய ஒன்று. ஹைடெக் சாதனங்களுடன் பிறந்து வாழ்பவர் பல அவலக் காட்சிகளை தன் கை வண்ண இசை மூலம் மிரட்டி பிரமிக்க வைக்கிறார். கூடவே யார் ஜெயிச்சங்கிறது முக்கியம் இல்ல, யார் பயந்தாங்கிறதுதான் முக்கியம்’, ‘நாலு பேரோட கொலை வெறி எப்படி 400 பேரோட மான பிரச்சினை ஆகும்’, ‘நாம கேள்வி கேட்கவே ஒரு பதவிக்கு, ஒரு இடத்துக்கு வரவேண்டியிருக்கு’, ‘ஏழைகள் கோவப்படவே இங்க தகுதி தேவைப்படுது’, ‘யுத்தம்னு வந்துட்டா பகை இருக்கக் கூடாது’ போன்ற கூர்மையான அரசியல்மிகு வசனங்கள் மாமன்னன்  படத்தை தூக்கிப் பிடிக்கிறது.

மொத்தத்தில் பன்னி மேய்க்கும் வர்க்கத்தை அடக்கி ஆள முயலும் டாபர்மேன் நாய் வளர்க்கும் வர்க்கக் கதை புதுசு என்றாலும் பழைய பல்வேறு படங்களின் நினைவூட்டல்களாக அடுத்தடுத்த காட்சிகளை யூகிக்கக் கூடியதாக இருப்பது பலவீனம்,

என்றாலும் இந்த மாமன்னன் -ஸ்பெஷல்தான்

மார்க் 3/5