அறிவின் திறவுகோலாகவும், மனித சமூகத்தின் முன்னேற்றத்திற்கு அடிப்படைத் தூணாகவும் விளங்குவது எழுத்தறிவாகும். எழுத்தறிவு, ஒரு தனியாளுக்குத் தன்னுடைய இலக்கை அடைவதற்கும், தனது அறிவையும், தகுதியையும் வளர்ப்பதற்கும், பரந்த சமூகத்தில் தனது பங்கினை முழுமையாக ஆற்றுவதற்கும் உதவுவது. ஆகையால், எழுத்தறிவு என்பது மிகவும் முக்கியமானது. இந்த நிலையில் ஒவ்வொரு மனிதனுக்கும் எழுத்தறிவு என்பது உண்ணும் உணவைவிடவும், பார்க்கும் கண்ணைவிடவும் முக்கியம் பெறுகிறது. கல்வியும் எழுத்தும் பள்ளியிலோ அல்லது கல்லூரியிலோ படித்து முடித்தவுடன் முடிவதில்லை. அது வாழ்நாள் முழுவதும் திகழவேண்டும். கல்விக்கும் எழுத்துக்களுக்கும் முடிவே கிடையாது.அப்பேர்பட்ட ம் எழுத்தறிவின் முக்கியத்துவத்தை உணர்த்தவும், எழுத்தறிவின்மையைப் போக்கவும் ஆண்டுதோறும் செப்டம்பர் 8 ஆம் தேதி சர்வதேச எழுத்தறிவு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. தனிமனித உரிமைகளை உறுதி செய்வதிலும், சமத்துவமான சமூகத்தைக் கட்டமைப்பதிலும் எழுத்தறிவு ஆற்றிவரும் பங்கு அளப்பரியது.
அறுபதாண்டு வரலாற்றுப் பயணம்
சர்வதேச எழுத்தறிவு தினத்தின் தோற்றம் மற்றும் வரலாறு சிறப்புமிக்கது. 1966 ஆம் ஆண்டு நடைபெற்ற யுனெஸ்கோ (UNESCO) பொது மாநாட்டில் செப்டம்பர் 8 ஆம் தேதியை சர்வதேச எழுத்தறிவு தினமாக அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, 1967 ஆம் ஆண்டு செப்டம்பர் 8 அன்று உலகின் முதல் சர்வதேச எழுத்தறிவு தினம் முறைப்படி அனுசரிக்கப்பட்டது. . தான் எழுத்தறிவு பெறாவிட்டாலும் பரவாயில்லை தன் பிள்ளை படிக்க வேண்டும் என்று எண்ணும் பெற்றோர்கள் இம்மண்னில் இன்னும் வாழ்ந்து கொண்டு தான் இருக்கின்றார்கள். ஒரு கைப்பிடி சோறும், படுக்க இடமும் கொண்ட பாமர மக்கள் கூட தங்களது பிள்ளைகள் நன்றாக படித்து முன்னேற வேண்டும் என்று எண்ணி கடினப்பட்டு அவர்களைப் படிக்க வைக்கின்றார்கள். கல்வியை மட்டும் கொடுத்து விட்டால் போதும் எப்படியாவது என் பிள்ளை பிழைத்துக்கொள்ளும் என்று கூறும் எண்ணற்ற குரல்கள் நம் மத்தியில் கேட்டுக்கொண்டு தான் இருக்கின்றன என்பதை சுட்டிக் காட்டி விழிப்புணர்வூட்டும் நாளாக இது கொண்டாடப்படுகிறது.
ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம் (யுனெஸ்கோ), எழுத்தறிவு என்பது அச்சிடப்பட்ட அல்லது எழுதப்பட்ட கருத்துகளைக் குறிப்பிட்டுள்ள கருத்துடன் பொருந்தி இனம் காணல், புரிதல், விளக்குதல், புதியன புனைதல், தகவல் பரிமாற்றம் செய்தல், கணித்தல் ஆகியவற்றின் தொகுப்பாகும். இது தொடர் கற்றல் நிகழ்வு ஆகும். ஒவ்வொருவரும் தம் இலக்கை அடைவதற்கான கருவியாகும். எழுத்தறிவானது தனியர் தன் அறிவையும் திறனையும் வளர்த்துக் கொண்டு, அண்மைச் சமூக நிகழ்வுகளில் பங்கேற்று விரிந்த சமுதாயம் வளர்ச்சி பெறுதலை உள்ளடக்கியதாகும் என்று எழுத்தறிவை வரையறுத்துள்ளது. எந்த மொழியிலும் இலகுவான வசனங்களை எழுதவும், படிக்கவும் தெரியாமையே எழுத்தறிவின்மையாகும் என ஐநாவின் சாசனம் எழுத்தறிவின்மையை வரையறுக்கிறது.
உலகில் சுமார் 789 மில்லியன் வயது வந்தோர் அடிப்படை எழுத்தறிவு அற்றவர்களாக இருக்கிறார்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. ஐந்து பெரியவர்களில் இருவர் இன்னும் கல்வியறிவு பெறவில்லை, இவர்களில் மூன்றில் இரண்டு பங்கினர் பெண்கள் ஆவர். அத்துடன், சுமார் 113 மில்லியன் சிறுவர்கள் பள்ளிக்கூட வசதிகள் இல்லாத நிலையில் உள்ளனர். இதனால், இவர்கள் அடிப்படைக் கல்வியான எழுத, வாசிக்க, எண்ணத் தெரியாதவர்களாக இருக்கிறார்கள்.இப்படியான சூழலில்
தற்போது 2026 ஆம் ஆண்டில் நாம் அடி எடுத்து வைக்கும் இந்த வேளையில், சர்வதேச எழுத்தறிவு தினம் தனது 60 ஆம் ஆண்டு வைர விழாவை எட்டியுள்ளது. இந்த அறுபதாண்டு காலப் பயணத்தில் கோடிக்கணக்கான மக்கள் எழுத்தறிவு பெற்றிருந்தாலும், சவால்கள் இன்னும் முழுமையாக மறையவில்லை என்பதை இந்த பொன்விழாத் தருணம் நினைவூட்டுகிறது.
2026 ஆம் ஆண்டின் மையக்கருத்து
இந்த ஆண்டு 2026 சர்வதேச எழுத்தறிவு தினத்திற்கான மையப்பொருள் “மக்கள், பூமி மற்றும் செழிப்புக்கான எழுத்தறிவு” (Literacy for people, the planet and prosperity) என்று வரையறுக்கப்பட்டுள்ளது.
பாரம்பரியமாக எழுத்தறிவு என்பது வெறும் எழுத்துக்களை வாசிப்பதும், எழுதுவதும் என்ற அளவிலேயே பார்க்கப்பட்டது. ஆனால், நடப்பு ஆண்டின் மையக்கருத்து அதனைத் தாண்டி, எழுத்தறிவை மனித குலத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சி மற்றும் வாழ்வியலோடு இணைக்கிறது.
உள்ளடக்கம் மற்றும் சமத்துவம் (People)
எழுத்தறிவு என்பது அனைவருக்கும் சமமாக கிடைக்க வேண்டிய அடிப்படை மனித உரிமை. பாலின வேறுபாடின்றி, விளிம்பு நிலை மக்களுக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கும் எழுத்தறிவு சென்றடைவது மட்டுமே அனைவரையும் உள்ளடக்கிய சமத்துவ சமூகத்தை உருவாக்கும்.
நிலையான எதிர்காலம் (Planet)
சுற்றுச்சூழல் விழிப்புணர்வும், பருவநிலை மாற்றங்கள் குறித்த புரிதலும் எழுத்தறிவின் மூலமே சாத்தியமாகும். பூமியைப் பாதுகாக்கவும், இயற்கை வளங்களை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்லவும் ‘சுற்றுச்சூழல் சார்ந்த எழுத்தறிவு’ மிக அவசியமாகிறது.
வாழ்வாதாரம் மற்றும் வளம் (Prosperity)
நவீன கால மாற்றங்களுக்கு ஏற்ப ஒருவரின் வாழ்வாதாரத்தை உயர்த்தவும், பொருளாதார வாய்ப்புகளைப் பெறவும் எழுத்தறிவு உதவுகிறது. வறுமை ஒழிப்பு மற்றும் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு எழுத்தறிவே முதன்மை காரணியாகும்.
மெக்சிகோவில் உலகளாவிய முதன்மை நிகழ்வு
60 ஆம் ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், 2026 ஆம் ஆண்டின் உலகளாவிய முதன்மை மாநாடு மற்றும் கொண்டாட்டங்கள் மெக்சிகோ நாட்டின் சியாபாஸ் (Chiapas) நகரில் செப்டம்பர் 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் மிக விமரிசையாக நடைபெறுகின்றன. உலக நாடுகளின் தலைவர்கள், கல்வியாளர்கள் மற்றும் கொள்கை வகுப்பாளர்கள் இதில் பங்கேற்று, வருங்கால எழுத்தறிவு திட்டங்கள் குறித்து விவாதிக்கின்றனர்.
எழுத்தறிவின்மையின் தற்போதைய சவால்கள்
தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவு வேகமெடுத்து வரும் இக்காலகட்டத்திலும், யுனெஸ்கோவின் சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி உலகளவில் இன்னும் சுமார் 73.9 கோடி இளைஞர்களும் பெரியவர்களும் அடிப்படை எழுத்தறிவு கூட இல்லாமல் வாழ்கிறார்கள் என்பது கசப்பான உண்மையாகும்.
குறிப்பாக வளர்ந்து வரும் நாடுகள் மற்றும் போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பெண்களும் பெண் குழந்தைகளுமே அதிகளவில் எழுத்தறிவின்மையால் பாதிக்கப்பட்டுள்ளனர். டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் பெருகிவிட்ட சூழலில், டிஜிட்டல் எழுத்தறிவின்மையும் புதிய சவாலாக உருவெடுத்துள்ளது.
வருங்காலத்தை நோக்கிய தேவைகள்
இன்றைய காலகட்டத்தில் வெறும் அடிப்படை வாசிப்பு மட்டும் போதாது. டிஜிட்டல் எழுத்தறிவு, நிதி சார்ந்த எழுத்தறிவு மற்றும் சுகாதார விழிப்புணர்வு போன்ற நவீன திறன்களை அனைவருக்கும் கொண்டு சேர்ப்பதே உண்மையான தீர்வாகும்.
அரசுகளின் தொடர் முயற்சிகள், தொண்டு நிறுவனங்களின் பங்களிப்பு மற்றும் சமூகத்தின் விழிப்புணர்வு ஆகியவை ஒன்றிணையும் போது மட்டுமே எழுத்தறிவில்லா உலகை நம்மால் உருவாக்க முடியும். மக்கள், நாம் வாழும் பூமி மற்றும் மனிதகுலத்தின் செழிப்பை உறுதி செய்ய எழுத்தறிவு எனும் அறிவொளியை அனைவருக்கும் கொண்டு சேர்ப்போம்.
வாத்தீ அகஸ்தீஸ்வரன்