AanthaiReporter.Com | Tamil Multimedia News Web ⚡ AMP

காஷ்மீர் மக்களை இந்திய குடிமக்களாக உருவாக்கும் முயற்சியில் நாம் தோல்வி கண்டுவிட்டோமா?!

By admin | Sep 09, 2016

இந்தியாவிலுள்ள அனைத்து மக்களும் உற்றுநோக்கி ஆச்சரியப்படும் வகையில் நம் நாட்டின் எல்லை மாநிலமான காஷ்மீரில் 52 நாள்களாக கலவரம் கட்டுப்படுத்த முடியாமல் போய்விட்டது. இதுவரையிலும் அம் மாநிலத்தின் எல்லைப் பகுதிக்குள் பாகிஸ்தானிலிருந்து தீவிரவாதிகளும், ஆயுதப்படையினரும் ஊடுருவி தீங்கிழைக்கும் நடவடிக்கைகளையே நாம் கண்டு வந்தோம். இப்போதுதான் முதன்முதலாக காஷ்மீரின் குடிமக்களில் இளைஞர்கள் கொதித்தெழுந்து போலீஸாரையும், ஆயுதப்படையினரையும் தாக்கிப் போராடும் நடவடிக்கைகளை நாம் காண்கிறோம். இவற்றை மத்திய – மாநில அரசுகளால் கட்டுப்படுத்த முடியவில்லை என்பது மிகவும் கவலைக்குரிய அதிர்ச்சித் தகவல்.

அம்மாநிலத்தின் மக்களை இந்திய குடிமக்களாக உருவாக்கும் முயற்சியில் நாம் தோல்வி கண்டுவிட்டோமா என்ற கேள்வி எழுகிறது. இன்றைய சமூக சூழ்நிலையில் பிறந்து வளர்ந்து இளைஞர்களாக வலம் வரும் காஷ்மீரத்து மக்களில் பெரும்பாலானவர்கள் போலீஸாரின் கண்காணிப்பையும், ராணுவ வீரர்களின் அணிவகுப்பையும் கண்டு அவை தங்களை அடக்கி ஒடுக்க மத்திய – மாநில அரசுகள் எடுக்கும் நடவடிக்கை என்ற தவறான எண்ண ஓட்டத்தில் வளர்ந்துள்ளது தெரிகிறது.

அரசு, தங்களின் முன்னேற்றத்திற்கான கல்வி, வேலைவாய்ப்பு ஆகிய அம்சங்களைப் பெருக்கும் நடவடிக்கைகளை எடுத்திருக்கவில்லை என்ற தகவல்களையும், தங்களின் இஸ்லாமிய மதக் கோட்பாடுகள் மதிக்கப்படவில்லை என்ற தவறான பிரசாரங்களையும் கேட்டு போராட வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளார்கள். இவற்றை எல்லாம் வெற்றிகரமாக செய்து முடித்த பெருமை காஷ்மீர் மாநில தீவிரவாதிகளை சாரும்.

காஷ்மீர் இளைஞர்களுக்கு, மதச்சார்பற்ற இந்திய தேசப் பிரஜைகளாக பெருமையுடன் வாழ வேண்டும் என்ற எண்ணத்தை விடவும், கண்டிப்பான கட்டுப்பாட்டுடன் பாகிஸ்தான் சமூகத்தில் இயங்கும் ஷரியத் அமைப்பு சார்ந்த எண்ணம் மேலோங்கியுள்ளது எனலாம்.எனவேதான், காஷ்மீரத்து இஸ்லாமிய மாணவர்கள் இந்தியாவின் மற்ற மாநில மாணவர்களுடனும், காஷ்மீரத்து இந்து நண்பர்களுடனும் மோதும் காட்சிகளை இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியின்போது நாம் பார்த்தோம். இந்த அம்சங்களை எல்லாம் மத்திய அரசு ஆராய்ந்து, எந்த கால கட்டத்திலும் அதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என பல சமூக ஆர்வலர்களும் கூறுகிறார்கள்.

மற்ற மாநிலங்களில் சட்டம் ஒழுங்கு பிரச்னைகள் உருவானால் எந்த மாதிரியான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்குமோ, அதே பாணியில் காஷ்மீரில் ஏற்படும் கலவரங்களையும் நேர்கொள்கிறது நமது மத்திய அரசு. ஆனால், மாநில அரசு இரண்டு நிலைமைகளை, அதாவது காஷ்மீரத்து இளம் இஸ்லாமியர்களின் மதம் சார்ந்த எண்ணங்களையும், மத்திய அரசின் தேசிய ஒருமைப்பாட்டு தன்மையையும் சார்ந்த பேச்சுகளை உதிர்த்து வாக்கு வங்கி அரசியலில் ஈடுபடுகிறது. எனவேதான் இந்த பிரச்னைக்கு முடிவே இல்லை.

ஜம்மு – காஷ்மீரில் அமலாக்கப்பட்டுள்ள “ராணுவ சிறப்பு அதிகார சட்டம்’, 1990-ஆம் ஆண்டு ஏற்பட்ட தீவிர போராட்டத்திற்குப் பின் உருவாக்கப்பட்டது. கலவரத்தில் ஈடுபடும் தீவிரவாதிகளை கைது செய்யவும், எந்த இடத்தையும் சோதனை செய்து ஆயுதங்களை கைப்பற்றவும் தேவையான அதிகாரம் ராணுவத்திற்கு ஏற்கெனவே இருக்கும்போது இந்தச் சிறப்புச் சட்டம் தேவைதானா என்ற கேள்வி எழுகிறது.

இந்த சட்டம் அமலில் இருப்பது, தங்களை மிகவும் கொடுமைப்படுத்தி அடக்க ஆளவே என காஷ்மீரத்து இஸ்லாமிய இளைஞர்கள் நினைப்பது சரிதானோ என பலரும் கேள்வி எழுப்புகின்றனர். இன்றைய காஷ்மீரின் மக்களை தேசிய நீரோட்டத்தில் சேர்க்கத் தேவையான நடவடிக்கைகளை மத்திய – மாநில அரசுகள் இன்றுவரை தீவிரமாக ஆராய்ந்து செயல்படுத்தவில்லை எனலாம். மாநில அரசு செய்யும் ஊழல்கள் அரசின் மீது மக்களுக்கு உள்ள மரியாதையை சிதைத்துவிட்டது எனலாம்.

அரசு அதிகாரிகள் ஊழல்வாதிகளாக இருந்து நிர்வாகத்தை கவனிக்காமல் இருந்த காரணத்தால் அங்கே சாதாரணமான எந்த ஒரு அரசு நடவடிக்கையும் இப்போது நடந்தேறுவதில்லை என்பது நம்மில் பலருக்கும் தெரியாது, புரியாது.இன்றைய தீவிரமான, அடக்க முடியாத கலவரங்களைப் பற்றிய ஒரு ரகசிய அறிக்கையை காஷ்மீர் மாநில சி.ஐ.டி. போலீஸ் தயாரித்துள்ளது. அதன்படி, மாநில அரசு ஊழியர்களில் 20 சதவீதம் பேர் நேரடியாக போராளிகளாக மாறி தெருக்களில் கல்லெறியும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்களாம்! இவர்களில் பெரும்பாலானவர்கள் தென் காஷ்மீர் பகுதியின் நான்கு மாவட்டத்தைச் சேர்ந்தவர்களாம்.

இதுபோன்ற நிர்வாகச் சூழ்நிலையில் அந்த மாநிலம் கட்டுபாடற்ற நிலைமையில் கற்காலத்து நடைமுறையில் “கல்லெறிபவன் சிறந்த வீரன்’ என்ற சமூக எண்ண ஓட்டத்தை கல்வியறிவு இல்லாமல் வேலைவாய்ப்புகளும் இல்லாமல் வாழும் இளைஞர்கள் மத்தியில் உருவாக்கியுள்ளது.பிற மாநிலத்தவர்கள் புரிந்து கொள்ள முடியாத வகையில் எட்டு மணி நேரம் கல்லெறிந்து போராடும் இளைஞர் ஒருவருக்கு கூலி வழங்கப்படும் நிலைமை அம்மாநிலத்தில் உள்ளது. கல்லெறிபவர்களை வேலைக்கு அமர்த்தி அதை ஒரு வியாபாரமாகச் செய்பவர்களும், அந்த வியாபாரிகளுக்கு பணத்தைக் கொடுத்து கல்லெறிபவர்களை அழைத்துச் சென்று போராடச் செய்யும் தீவிரவாதிகளும் அங்கே எந்த பயமும் இல்லாமல் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.

நம் நாட்டு மக்கள் மனதில் காஷ்மீர் மாநிலத்தின் எல்லா பிரச்னைகளுக்கும் பாகிஸ்தான்தான் காரணம் என்ற எண்ண ஓட்டம் உள்ளது. ஆனால் மத சகிப்புத்தன்மையும், ஜனநாயக நெறிமுறைகளும் நிறைந்த நமது மக்களில் பலர் பாகிஸ்தானுடன் நமக்கு உள்ள பகை வேறு, காஷ்மீர் மாநில பிரச்னைகள் வேறு என்ற எண்ண ஓட்டத்தை உடையவர்களாகவும் உள்ளனர். ஆனால், அப்படியே பாகிஸ்தான் நாட்டு மக்களின் எண்ண ஓட்டத்தையும் அங்கே உள்ள அரசின் நடவடிக்கைகளையும் ஆராய்ந்தால் நிலைமை தலைகீழ்.

ஜனநாயகம் என்ற நடைமுறையை பெயரளவில் கொண்டு தேர்ந்தெடுக்கப்படும் பாகிஸ்தான் அரசின் தலைவர்கள் கூட அந்நாட்டின் ராணுவம் என்ன சொல்கிறதோ அந்த அடிப்படையில்தான் பேச வேண்டும், நடக்க வேண்டும் என்ற நிலைமை. அதை மீறினால், அந்த அரசு ஏதோ ஒரு வகையில் கவிழ்க்கப்படும்.

ராணுவ ஆட்சி ஏற்பட்டால் சர்வதேச அரங்கில் பல பிரச்னைகள் உருவாகின்றன என்பதால், ஜனநாயகப் போர்வையில் ராணுவம் அந்த நாட்டை இயக்குகிறது என்பதுதான் நிதர்சனமான உண்மை. இந்தியாவின் மீது கடுமையான எதிர்ப்பை உருவாக்கும் வகையில் ஊடகங்கள் நடந்து கொள்ள வேண்டிய கட்டாயம் அங்கே உள்ளது.படித்த, பண்புள்ள பாகிஸ்தான் மாணவன் கூட இந்தியா பாகிஸ்தானை எதிர்த்து பல நடவடிக்கைகளை எடுக்கும் நாடு, நமது மக்களை வெறுக்கும் நாடு என நினைக்கும் நிலைமை அங்கே உள்ளது.

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் 1999-ஆம் ஆண்டு நடந்த கார்கில் யுத்தத்தில் குண்டடிபட்டு பிடிபட்ட பாகிஸ்தான் ராணுவ வீரர்களை நம்நாட்டு யுத்தப் பகுதியில் இருந்த ராணுவ மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பகுதியில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டது. அதை பார்வையிடச் சென்ற ஒரு பிரபல பத்திரிகை நிருபரை பார்த்த ஒரு பாகிஸ்தான் ராணுவ வீரர் தேம்பித் தேம்பி அழுதுள்ளார்.

அதிர்ச்சியடைந்த நிருபர் அவரை சமாதானம் செய்து, என்ன காரணம் என வினவியபோது, அவர் அளித்த பதில் சுவாரசியமானது, “எங்கள் நாட்டில் இந்தியாதான் நமது உண்மையான எதிரி என ராணுவ பயிற்சியின்போது கூறுவார்கள். பத்திரிகைகளிலும், நண்பர்களுடன் விவாதிக்கும்போதும் யுத்தத்தில் நாம் உயிருடன் பிடிபட்டால் நம்மை கொன்று விடுவார்கள் என கூறப்பட்டது. ஆனால், இங்கே பல செவிலியர்களும், மருத்துவர்களும் என்னை கவனித்து சுகப்படுத்தியதை என்னால் நம்பவே முடியவில்லை’ எனக் கூறியுள்ளார்.

இந்தியாவுடன் பகைமையை வளர்த்தால்தான் பாகிஸ்தான் தனது அரசியலை நடத்த முடியும் என்பதும், சீனா போன்ற நாடுகளின் உதவியையும் பெற முடியும் என்பதும் இன்றைய யதார்த்தம்.இவற்றைக் கருத்தில் கொண்ட பின், பாகிஸ்தானை ராணுவ ரீதியில் சந்திப்பது என்ற பிரச்னையை நாம் தனியாக அணுக வேண்டும் என்பதையும், அதில் காஷ்மீர் பிரச்னையை ஒரு அங்கமாக சேர்ப்பதை தவிர்க்க வேண்டும் என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.இன்றைய காஷ்மீர் மாநிலத்தில் நிதிநிலைமையை பெரிய அளவில் உருவாக்கி, கல்வி, வேலைவாய்ப்பு, சுகாதாரம், தொழிற்சாலைகள் ஆகிய துறைகளை மேம்படுத்தி பல நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். இதனால் திருப்தியுடன் தரமான அமைதியான வாழ்க்கையை உருவாக்கிக் கொள்ளும் மக்கள் அமைதியடைவார்கள்.இதுவே உலகின் பல யுத்தங்களும் போராட்டங்களும் நமக்குப் போதித்த பாடம்!

என். முருகன் (ஐ ஏ எஸ்- ரிட்டயர்ட்)