பிரஷாந்த் நடிப்பில் உருவாகி வரும் ‘ஜானி’ படத்தில் ஹீரோயினாக சஞ்சிதா ஷெட்டி நடிக்க, பிரபு முக்கிய வேடம் ஒன்றில் நடிக்கிறார். இவர்களுடன் பாலிவுட் நடிகர் அஷுடோஷ் ராணா வில்லனாக நடிக்க மற்றும் ஷாயஜி ஷிண்டே, ஆனந்தராஜ், தேவதர்ஷினி, சோனா, கலைராணி ஆகியோரும் நடிக்கிறார்கள். சஸ்பென்ஸ் ஆக்ஷன் திரில்லர் படமாக உருவாகும் இப்படத்தை வெற்றிசெல்வன் இயக்க, எம்.வி.பன்னீர் செல்வம் ஒளிப்பதிவு செய்கிறார். கலைத் துறையை மிலன் கவனிக்க, சுப்ரீம் சுந்தர் ஆக்ஷன் காட்சிகளை வடிமைக்கிறார். இந்த நிலையில், இப் படத்தின் டீசர் நேற்று வெளியிடப்பட்டது. பிரபல இயக்குநர் மணிரத்னம் டீசரை வெளியிட்டார். டீசரை பார்த்து பிரஷாந்தை வெகுவாக பாராட்டியவர், நிச்சயம் இப்படம் மிகப்பெரிய வெற்றி பெறும் என்றும் கூறினார்.
இதை தொடர்ந்து பத்திரியாளர்களை சந்தித்து படம் குறித்த தகவல்களை படக்குழுவினர் பகிர்ந்து கொண்டனர். ‘ஜானி ஒரு வித்தியாசமான த்ரில்லர் கதை. 17 விதமான செட்டுகள் போட்டு படமாக்கி இருக்கிறோம்.’ என கூறினார் தயாரிப்பாளர் தியாகராஜன்.
படம் தொடர்பாக பேசிய நடிகர் பிரசாந்த், ஷாக் என்ற பேய் படம் பண்ணும்போது, பேய்ப் படங்களுக்கு அது ஒரு ட்ரெண்ட் செட்டராக இருந்தது. அதன் பிறகு நிறைய பேய் படங்கள் வர ஆரம்பித்தன. பொன்னர் சங்கர் திரைப்படம் பண்ணும்போது அப்படியொரு வரலாற்றுப் படம் பண்ண முடியுமா என கேள்வி இருந்தது. சிலர் முயற்சி செய்தார்கள் ஆனால் வெற்றி கிடைக்கவில்லை. அந்த படத்தில் பெரிய செட் போட்டு 80 ஆயிரம் வீரர்களைக் கொண்டு இரண்டு போர்க் காட்சிகளை படமாக்கினோம். அது ஒரு ட்ரெண்ட் செட்டரானது. அதன்பிறகு பாகுபலி என வரலாற்று படங்கள் வந்தன. அதேபோல் இந்த படமும் ட்ரெண்ட் செட் செய்யும் படமாக அமையும், இப்படத்தில் எல்லோருக்குமே சமமான கதாபாத்திரம் உள்ளது. மிகச் சரியாக திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது எனப் பேசினார்.
மேலும், விமர்சனம் செய்பவர்கள் சொல்லும் நிறை குறைகளை மனதில் வைத்து கவனமாக எடுத்துள்ளோம். டீசர் நன்றாக இருப்பது போலவே படமும் நன்றாக இருக்கும் என அவர் தெரிவித்தார்.
நடிகர் ராதாரவி பேசும்போது ரஜினியின் வெற்றிப்படமான ஜானியின் பெயரில் பிரசாந்த் நடிப்பது மகிழ்ச்சியளிக்கிறது. பிரபு வித்தியாசமான கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இது நிச்சயம் வெற்றிப்படமாக அமையும் என வாழ்த்தினார்.
முக்கிய வேடத்தில் நடித்துள்ள நடிகர் ஆனந்த்ராஜ் பேசும்போது, சாதாரண ரசிகர்களை தியேட்டருக்கு வரவைப்பதே சுவற்றில் ஒட்டப்படும் பட போஸ்டர்கள் தான். ஆனால் அந்தப்படம் பற்றி வெளியே தெரிவதற்குள் ஒட்டிய மறுநாளே சில அரசியல் கட்சியினர் அதை கிழித்துவிட்டு தங்கள் விளம்பரங்களை வரைகின்றனர். போஸ்டரை பார்த்துவிட்டு தியேட்டருக்கு வரும் ரசிகர்கள் மூலம் அரசுக்கு ஜி.எஸ்.டி கிடைக்கிறது. ஆனால் அரசியல் கட்சிகளின் விளமபரங்களால் என வருமானம் கிடைக்கிறது.. அரசாங்கம் இதை முயற்சி எடுத்து கண்டிக்கவேண்டும்.. ஜெயலலிதா முதல்வராக இருந்தவரை இதுபோல நடக்க அவர் விட்டதில்லை’ என தனது கோபத்தை கொட்டினார்.