AanthaiReporter.Com | Tamil Multimedia News Web ⚡ AMP

மஞ்சும்மல் பாய்ஸ் வரிசையில் ‘7 ஸ்டார் பாய்ஸ்’: செப்டம்பர் 4-ல் ரிலீஸ்!

By admin | Aug 19, 2026

லையாளத் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான ஆண்டனி வர்கீஸ் நடிப்பில் உருவாகியுள்ள ‘7 ஸ்டார் பாய்ஸ்’ திரைப்படம் செப்டம்பர் மாதம் 4 ஆம் தேதி தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

இயக்குநர் நிகில் பிரேம் ராஜ் இயக்கத்தில், ஃபயஸ் சித்திக் ஒளிப்பதிவில், ஜேக்ஸ் பிஜாய் இசையமைப்பில் உருவாகியுள்ள இத்திரைப்படத்தில் ஆண்டனி வர்கீஸ் மற்றும் இந்திய கால்பந்தாட்ட அணியின் முன்னாள் வீரரான ‘பிகில்’ ஐ.எம்.விஜயன் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மலையாளத்தில் ‘ஆனபரம்பிலே வேர்ல்டு கப்’ என்ற பெயரில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற இத்திரைப்படத்தைப் பீனிக்ஸ் ஸ்டுடியோ நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் டி. அசோக் தமிழில் மொழிமாற்றம் செய்து வெளியிடுகிறார்.

படத்தின் கதைக்களம் குறித்துத் தயாரிப்பாளர் டி. அசோக் தெரிவிக்கையில், இது கால்பந்தாட்ட விளையாட்டைப் பின்னணியாகக் கொண்ட ஒரு உணர்வுபூர்வமான ஸ்போர்ட்ஸ் டிராமா திரைப்படம். இதில் 12 வயதிற்கு உட்பட்ட சிறுவர்கள் சிலர் கால்பந்து விளையாடத் துடிக்கிறார்கள். உள்ளூர் போட்டிகளில் திறமையாக விளையாடும் ஆண்டனி வர்கீஸைத் தங்களுடைய நாயகனாகக் கருதும் அந்தச் சிறுவர்களுக்கு விளையாட ஏற்ற மைதானம் கிடைக்காமல் சிரமப்படுகின்றனர்.

இதை அறிந்து ஆண்டனி வர்கீஸ் அவர்களுக்கு ஒரு மைதானத்தை ஏற்படுத்திக் கொடுக்கிறார். சிறுவர்களின் நுட்பமான ஆட்டத்தைக் கண்டு வியக்கும் அவர், பிரபல பயிற்சியாளரான ஐ.எம்.விஜயனை அணுகி அவர்களுக்கு முறையான பயிற்சி கிடைக்கச் செய்கிறார். இதன் பிறகு அச்சிறுவர்கள் மாநில அளவிலான போட்டிகளில் கலந்துகொண்டு கோப்பையை வெல்கிறார்களா என்பதே இதன் சுவாரசியமான கதையாகும்.

தமிழ்நாட்டில் ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ திரைப்படத்திற்குச் சூடான வரவேற்பு கிடைத்தது போல, இந்த ‘7 ஸ்டார் பாய்ஸ்’ திரைப்படத்திற்கும் தமிழ் ரசிகர்களிடையே மிகப் பெரிய ஆதரவு கிடைக்கும் என படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.