சமூகத்தின் அடித்தளமாக விளங்குபவர்கள் முதியவர்கள். இந்த உலகை மாற்றியவர்களில் இளைஞர்களுக்கும் நடுத்தர வயதினருக்கும் எவ்வளவு பங்கு உண்டு அதை காட்டிலும் ஒரு பங்கு அதிகமாகவே முதியவர்களுக்கு உள்ளது. என்னதான் துடிப்பு மிக்கவர்களாக இளைஞர்கள் இருந்தாலும் அவர்களை சரியாக வழிநடத்துவதற்கு முதியவர்கள் இல்லை என்றால் அந்த முன்னேற்ற பயணம் நீண்ட நாள் நிலைத்திருக்காது. முதியவர்களின் அனுபவம் என்பது எத்தகைய விலை கொடுத்தும் எளிதில் வாங்க முடியாத வாழ்வின் மிகப்பெரிய பொக்கிஷங்கள். அவற்றை நாம் சரியாக பயன்படுத்திக் கொண்டால் வாழ்வின் மிகப்பெரிய இலக்குகளை நம்மால் எளிதில் அடைய முடியும்!அப்படி குடும்பத்தின் வழிகாட்டிகளாகவும், தங்கள் வாழ்நாளின் பெரும் பகுதியை நாட்டின் வளர்ச்சிக்கும் சமூக கட்டமைப்பிற்கும் அர்ப்பணித்த மூத்த குடிமக்களைக் கௌரவிக்கும் பொருட்டு ஆகஸ்ட் 21 ஆம் தேதி உலக மூத்த குடிமக்கள் தினம் உலகம் முழுவதும் கடைப்பிடிக்கப்படுகிறது. முதியவர்களின் அறிவாற்றல், அனுபவம் மற்றும் சாதனைகளை அங்கீகரிப்பதோடு, வயதான காலத்தில் அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள், உடல்நலப் பிரச்சனைகள், தனிமை மற்றும் உரிமைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்நாளின் முதன்மை நோக்கமாகும்.
வரலாற்றுப் பின்னணியும் இந்நாளின் முக்கியத்துவமும்
உலக மூத்த குடிமக்கள் தினம் உருவானதற்குப் பின்னால் ஒரு வரலாற்று நிகழ்வு உள்ளது. 1988 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 19 ஆம் தேதி, அமெரிக்காவின் அன்றைய அதிபர் ரொனால்ட் ரீகன் இதற்கான அதிகாரப்பூர்வ பிரகடனத்தில் கையெழுத்திட்டார். மூத்த குடிமக்களின் நலன், அவர்களின் உரிமைகள் மற்றும் சமூகத்தில் அவர்களின் பங்களிப்பைப் போற்றும் வகையில் ஆகஸ்ட் 21 ஆம் தேதியை தேசிய மூத்த குடிமக்கள் தினமாக அவர் அறிவித்தார். பின்னர் இந்நாள் உலகம் முழுவதும் பரவி, உலக மூத்த குடிமக்கள் தினமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
ஒரு மனிதன் தனது வாழ்நாளின் பெரும்பகுதியைத் தன் குடும்பத்திற்காகவும் நாட்டிற்காகவும் செலவிடுகிறான். ஆனால், ஓய்வுக்காலத்தில் அவர்களுக்குத் தேவையான அரவணைப்பும் மரியாதையும் சரியாகக் கிடைக்கிறதா என்பது இன்றும் பெரிய கேள்விக்குறியாகவே உள்ளது. இந்நாள், மூத்த குடிமக்களுக்கு நாம் செலுத்த வேண்டிய நன்றிக் கடனை நினைவூட்டும் ஒரு முக்கிய நாளாகத் திகழ்கிறது.
நவீன உலகில் மூத்த குடிமக்கள் எதிர்கொள்ளும் சவால்கள்
தொழில்நுட்ப வளர்ச்சியும், வேகமான வாழ்க்கை முறையும் மூத்த குடிமக்களைப் பல வழிகளில் தனிமைப்படுத்திவிட்டன. கூட்டுக்கடைசி குடும்ப முறை மறைந்து, தனிக்குடும்ப கலாச்சாரம் பெருகியதன் விளைவாக, பல முதியவர்கள் தங்களது சொந்த வீடுகளிலேயே ஓரங்கட்டப்படும் அவலநிலை நிலவுகிறது.
தனிமை மற்றும் மன அழுத்தம்: வயது முதிர்வின் காரணமாக ஏற்படும் உடல நலக் குறைபாடுகளை விட, உறவுகளின் விலகலால் ஏற்படும் தனிமையே முதியவர்களை அதிகளவில் பாதிக்கிறது. அன்பான பேச்சு, சிறிதளவு கவனிப்பு ஆகியவற்றிற்காக ஏங்கும் முதியவர்கள் இன்றைக்கு எண்ணற்றோர் உள்ளனர்.
பொருளாதாரப் பாதுகாப்பின்மை: ஓய்வுக்குப் பின் நிலையான வருமானம் இல்லாத நிலை, மருத்துவச் செலவுகளின் உயர்வு போன்றவை முதியவர்களைப் பொருளாதார ரீதியாகப் பிறரைச் சார்ந்திருக்க வைக்கின்றன.
தொழில்நுட்ப ரீதியிலான இடைவெளி: வங்கிப் பரிவர்த்தனைகள் முதல் அன்றாடச் தேவைகள் வரை அனைத்தும் டிஜிட்டல் மயமாகிவிட்ட நிலையில், நவீனத் தொழில்நுட்பங்களை இயக்கத் தெரியாததால் முதியவர்கள் பெரும் அசௌகரியங்களைச் சந்திக்கின்றனர்.
பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு: பல இடங்களில் மூத்த குடிமக்கள் மீதான அலட்சியம், புறக்கணிப்பு மற்றும் கொடுமைகள் அதிகரித்து வருவது கவலைக்கிடமான உண்மையாகும்.
சமூகத்தின் கடமையும் மூத்த குடிமக்களின் உரிமைகளும்
மூத்த குடிமக்களின் அனுபவமும் வழிகாட்டுதலும் ஒரு நாட்டின் மதிப்பற்ற சொத்துக்களாகும். அவர்களின் வாழ்க்கை அனுபவங்களில் இருந்து இளைய தலைமுறை கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் ஏராளம்.
அரசின் கடமைகள்: முதியவர்களுக்கான சிறப்பு மருத்துவ வசதிகள், போதுமான ஓய்வூதியத் திட்டங்கள், பொதுப்போக்குவரத்து மற்றும் பொது இடங்களில் அவர்களுக்கான முன்னுரிமை ஆகியவற்றை அரசு தீவிரமாக நடைமுறைப்படுத்த வேண்டும். பராமரிப்பு மற்றும் நலச் சட்டங்களை வலுவாகச் செயல்படுத்தி, முதியவர்களைப் பாதுகாப்பது அரசின் பொறுப்பாகும்.
குடும்பத்தின் பொறுப்பு: முதியவர்களைப் முதியோர் இல்லங்களில் சேர்ப்பதைத் தவிர்த்து, குடும்பத்தில் ஒருவராக வைத்து அரவணைப்பதே உண்மையான மரியாதையாகும். அவர்களின் பேச்சைக் காதுகொடுத்துக் கேட்பதும், அன்றாட முடிவுகளில் அவர்களின் கருத்துக்களுக்கு மதிப்பு அளிப்பதும் அவர்களுக்குப் பெரும் மனநிறைவைத் தரும்.
மொத்ததில் மூத்த குடிமக்கள் தங்களின் உரிமைகளை அறிந்து தற்சார்புடன் வாழ முயல வேண்டும். அதேவேளையில், அவர்களை அன்போடும் கண்ணியத்தோடும் நடத்துவது ஒவ்வொரு குடிமகனின் தலையாயக் கடமையாகும். வயோதிகம் என்பது வாழ்வின் இறுதிக்கட்டம் அல்ல, அது பட்டறிவின் உச்சக்கட்டம் என்பதை உணர்ந்து மூத்த குடிமக்களைப் போற்றிப் பாதுகாப்போம்.
ஜாசன்