இந்தியா-ஆசியான் உறவு பற்றி பிரதமர் மோடி எழுதி வெளியிட்ட கருத்துக்கள் 10 ஆசியான் நாடுகளில் 10 மொழிகளில் 27 செய்தி தாள்களில் வெளியிடப்பட்டுள்ளன. இந்தியா-ஆசியான் மாநாடு டெல்லியில் நேற்று முன்தினம் நடந்தது. இதில் ஆசியான் அமைப்பில் உள்ள 10 நாடுகளின் பிரதமர்கள் மற்றும் அதிபர்கள் கலந்து கொண்டனர். இதில் பிரதமர் மோடியும் கலந்து கொண்டார். கடல்சார் பாதுகாப்பில் ஒத்துழைப்பு, மக்கள் தொடர்பு, வர்த்தக உறவு ஆகியவற்றை மேம்படுத்துவது குறித்தும், தீவிரவாத தடுப்பு நடவடிக்கை குறித்தும் ஆசியான் தலைவர்களுடன் மோடி ஆலோசனை நடத்தினார்.
அந்த மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி ‘‘கடந்த 25 ஆண்டுகளில், இந்தியா-ஆசியான் வர்த்தக உறவு 25 மடங்கு அதிகரித்துள்ளது. முதலீடு மிக அதிகமாக அதிகரித்துள்ளது. வர்த்தக உறவை மேலும் வலுப்படுத்த நாம் இணைந்து செயல்பட வேண்டும். தென்கிழக்கு ஆசிய கடல் பகுதியில் சுதந்திரமான கப்பல் போக்குவரத்து நடைபெற வேண்டும் என்பதில் இந்தியா-ஆசியான் நாடுகள் அதிக கவனம் செலுத்த வேண்டும்’’ என்று அழைப்பு விடுத்தார்.
மேலும் இந்தியா-ஆசியான் உறவுககுறித்து தனது கருத்துகளை கட்டுரையாக எழுதி பிரதமர் மோடி வெளியிட்டார். அதில், ‘இந்தியா-ஆசியான் உறவுகளில் எந்தவித போட்டியும் இல்லை, உரிமை கோரும் விவகாரமும் இல்லை. சிறிய நாடு, பெரிய நாடு என்ற பாகுபாடு இல்லாமல் அனைத்து நாடுகளும் சமமாக மதிக்கப்படுகின்றன. திறந்தவெளி வர்த்தகத்துக்கும் இந்தியா-ஆசியான் ஆதரவாக இருக்கிறது. எங்களுக்கு எதிர்காலத்தில் பொதுவான தொலைநோக்கு உள்ளது. இந்தியா-ஆசியான் நாடுகள் இடையேயான உறவுக்கு வயது 25 ஆண்டுகளாக இருக்கலாம்.
ஆனால், தென்கிழக்கு ஆசியாவுடன் இந்தியாவுக்கு உள்ள உறவு 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்டது. இந்தியாவின் 20 சதவீதத்துக்கும் அதிகமான வெளிநாட்டு முதலீடு ஆசியான் நாடுகளில் செய்யப்பட்டுள்ளது. நமது விமான போக்குவரத்து அதிகரித்துள்ளது. தென்கிழக்கு ஆசியாவுடன் நெடுஞ்சாலை அமைக்கும் திட்டத்துக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது’ என்று கூறப்பட்டுள்ளது. இந்த கட்டுரை தாய்லாந்து, வியட்நாம், இந்தோனேஷியா, பிலிப்பைன்ஸ், மலேசியா, சிங்கப்பூர் மியான்மர், கம்போடியா, லாவோஸ் மற்றும் புருனேவில் 10 மொழிகளில் 27 செய்தி தாள்களில் வெளியாகியுள்ளது.